இலங்கையின் வடக்கு மாகாணத்தின் வானிலை மாற்றங்கள், வறட்சி, மற்றும் அனர்த்த முகாமைத்துவம் குறித்து விஞ்ஞானபூர்வமாகவும், மக்கள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் துல்லியமான முன்னறிவிப்புகளையும் வழங்கி வரும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கலைப்பீட பீடாதிபதியும் புவியியற்றுறைப் பேராசிரியருமான பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா, இலங்கையில் தற்போது நிகழும் காலநிலை மாற்றம் தொடர்பாக வழங்கிய நேர்காணல்

கேள்வி: இலங்கையின் அடிப்படையான காலநிலை இயல்புகள் மற்றும் அதன் தன்மைகள் எவ்வாறு அமைந்திருக்கின்றன?
பதில்: இலங்கை இந்தியப் பெருங்கடலின் மத்தியில் அமைந்துள்ள ஒரு அயனமண்டலத் தீவாகும். இதன் புவியியல் அமைவிடமும், அதனைச் சூழ்ந்துள்ள பெருங்கடலும் நாட்டின் காலநிலையைத் தீர்மானிப்பதில் முதன்மைப் பங்கு வகிக்கின்றன. இலங்கையின் ஒட்டுமொத்த சராசரி வெப்பநிலை 27.5° செல்சியஸ் ஆகக் காணப்பட்ட போதிலும், நில அமைப்புக்கு ஏற்ப இதில் கணிசமான வேறுபாடுகள் நிலவுகின்றன. அதன்படி, கரையோரத் தாழ்நிலப் பகுதிகளில் வெப்பநிலை 27° முதல் 32°செல்சியஸ் வரையான உயர் மட்டத்திலும், மத்திய மலைநாட்டுப் பகுதிகளில் 15° செல்சியஸ் முதல் 20° செல்சியஸ் வரையான குளிர்ச்சியான தன்மையிலும் அமைகின்றது.
மழைவீழ்ச்சியைப் பொறுத்தமட்டில், நாட்டின் ஆண்டு சராசரி மழைவீழ்ச்சி 2500 மி.மீ முதல் 2750 மி.மீ வரை பதிவாகிறது. இதில் பிராந்திய ரீதியான வேறுபாடுகள் அதிகமாகக் காணப்படுகின்றன குறிப்பாக, தென்மேற்கு தாழ்நிலப் பகுதிகள் மிக அதிக மழைவீழ்ச்சியைப் பெறுகின்ற அதேவேளை, மன்னார் மற்றும் அம்பாந்தோட்டை போன்ற உலர் வலய எல்லைப் பகுதிகள் மிகக் குறைவான மழைவீழ்ச்சியையே பெறுகின்றன. அத்துடன், தீவு முழுவதிலும் நிலவும் சராசரி ஈரப்பதத்தின் அளவு எப்போதுமே 72% போன்ற உயர் மட்டத்திலேயே காணப்படுகின்றது.
இலங்கையின் மழைவீழ்ச்சிப் பரம்பலானது நான்கு பிரதான காலநிலைப் பருவங்களாகப் பிரிக்கப்படுகிறது. அவை முதலாம் இடைப்பருவக்காற்றுக் காலம், தென்மேற்கு பருவக்காற்றுக் காலம், இரண்டாம் இடைப்பருவக்காற்றுக் காலம் மற்றும் வடகீழ் பருவக்காற்றுக் காலம் என்பனவாகும்.”
கேள்வி: காலநிலை மாற்றம் ஏற்படுகின்றது என்பதை எவ்வாறு அறிந்து கொள்ளலாம்?
பதில்: காலநிலை மாற்றம் ஏற்படுகின்றது என்பதை உணர்த்துவதற்கான அறிகுறிகளை, விஞ்ஞான ரீதியான தரவுகள் மற்றும் மக்களின் அன்றாட வாழ்வியல் நடைமுறைகள் ஆகிய இரு வேறுபட்ட கோணங்களின் அடிப்படையில் அமைந்த நீண்டகால மாற்றங்களைக் கொண்டு நாம் தெளிவாக அறிந்துகொள்ள முடியும்.
முதலாவதாக, விஞ்ஞான ரீதியான தரவுகளின் பகுப்பாய்வின்படி, உலகளாவிய ரீதியில் அதிகரித்து வரும் வெப்பநிலை, வழமைக்கு மாறாகக் குளறுபடியாகப் பொழியும் மழைவீழ்ச்சி, வளிமண்டலத்தின் ஈரப்பதம் மற்றும் நீர்நிலைகளில் ஏற்படும் ஆவியாக்கம் போன்ற காலநிலை சார்ந்த காரணிகளில் ஏற்படும் நீண்டகால மாற்றங்கள் மிக முக்கிய அறிகுறிகளாகும். அத்துடன், ஒருபுறம், இத்தகைய தரவு சார்ந்த ஆய்வுகள் காலநிலைப் பருவ மாற்றங்களைத் துல்லியமாகக் கண்டறிய உதவுகின்றன. மறுபுறம், மக்கள் தங்களது அன்றாட வாழ்வியலில் நேரடியாக எதிர்கொள்ளும் அனுபவங்களின் வாயிலாகவும் இம்மாற்றங்களின் அறிகுறிகளை உணர்ந்துகொள்ள முடிகிறது. குறிப்பாக, மனிதர்கள் அன்றாடம் உணர்கின்ற வெப்பநிலை மற்றும் மழைவீழ்ச்சி மாற்றங்கள் இதற்குச் சான்றுகளாகும். மேலும், விவசாயத் துறையைப் பொறுத்தமட்டில், பயிர் விளைச்சல் மாற்றங்கள் மற்றும் தாவரங்களின் வழக்கமான பூக்கும் மற்றும் காய்க்கும் பருவ காலங்களில் ஏற்படுகின்ற மாற்றங்கள் போன்ற பல நடைமுறைச் சான்றுகள் மூலம் காலநிலை மாற்றம் மிகத் தீவிரமாக நிகழ்ந்து கொண்டிருப்பதை மக்கள் தங்களின் வாழ்வியலோடு ஒப்பிட்டு அறிந்து கொள்கிறார்கள்.
கேள்வி: தற்போது உலகளவில் பேசப்படும் காலநிலை மாற்றமான எல்நினோ இலங்கையை எவ்வாறு பாதித்து வருகின்றது?
பதில்: இலங்கையில் காலநிலை மாற்றம் என்பது மிக அதிகளவிலான பாதிப்பை ஏற்படுத்துகின்ற ஒரு இயற்கைத் தோற்றப்பாடாக மாறி இருக்கின்றது. கடந்த கால அவதானிப்புகளின் அடிப்படையிலும், எதிர்வு கூறப்பட்டுள்ள நிலைமைகளின் அடிப்படையிலும், உலகில் காலநிலை மாற்றத்தினால் அதிகம் பாதிக்கப்படுகின்ற நாடுகளின் பட்டியலில் இலங்கை முன்னிலையைப் பெற்றிருக்கின்றது. குறிப்பாக, கடந்த 2017ஆம் ஆண்டிலிருந்து ஜெர்மன் வோட்ச் (Germanwatch) என்ற நிறுவனத்தினுடைய கணிப்பின் அடிப்படையில், கடந்த பல ஆண்டுகளாக காலநிலை மாற்றத்தினால் அதிகம் பாதிக்கப்படுகின்ற நாடுகளின் பட்டியலில் இலங்கை எப்பொழுதும் முன்னிலையில் இருப்பது அவதானிக்கப்பட்டுள்ளது.
அந்த அடிப்படையில் இலங்கையில் காலநிலை மாற்றம் சார்ந்து பல்வேறு முக்கிய விடயங்கள் அவதானிக்கப்பட்டுள்ளன. இலங்கையில் கடந்த 60 ஆண்டுகளில் 1.2° செல்சியஸ் என்ற அளவில் வெப்பநிலை அதிகரித்துக்கொண்டிருக்கின்றது. அதேசமயம், மழைவீழ்ச்சியில் மிகப்பெரிய அளவிலான வேறுபாடுகள் அவதானிக்கப்படாத பொழுதும் கூட, வடகீழ் பருவப் பெயர்ச்சியின் மழை நாட்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதுடன், தென்மேல் பருவப் பெயர்ச்சியின் மழை நாட்களின் எண்ணிக்கையும் ஒப்பீட்டளவில் குறைந்துள்ளது. அதேவேளை, காலநிலை மாற்றத்தோடு தொடர்புடையதாக காலநிலை பருவங்களின் தொடக்கம் மற்றும் முடிவுப் பகுதிகளிலும் மிகப்பெரிய அளவிலான பாதிப்புகள் அவதானிக்கப்பட்டிருக்கின்றன. ஒட்டுமொத்தமாக கூறின், இலங்கை காலநிலை மாற்றத்தின் அத்தனை மூலக்கூறுகளிலும் மிகப்பெரிய அளவிலான வேறுபாட்டைக் கொண்டுள்ளமை இங்கு தெளிவாகத் தெரிகின்றது.
கேள்வி: இந்தக் காலநிலை மாற்றத்தினால் குறிப்பாக வடபகுதியில் (யாழ்ப்பாணத்திற்கு) ஏதேனும் பிரத்தியேகமான பாதிப்புகள் அல்லது அச்சுறுத்தல்கள் இருக்கின்றனவா?
பதில்: காலநிலை மாற்றத்தினால் அதிகம் பாதிக்கப்படுகின்ற மாகாணங்களில் வட மாகாணம் முன்னிலையில் வகிப்பதை அவதானிக்க முடிகின்றது. இதற்கு காலநிலை மாற்றத்தின் காரணங்கள் ஒருபுறம் இருந்தாலும் கூட, வடக்கு மாகாணத்தின் புவியியல் அமைப்பும் ஒரு முக்கிய பங்களிக்கிறது. உதாரணமாக, வட மாகாணம் கிழக்கே வங்காள விரிகுடாவையும், மேற்கே பாக்கு நீரிணையையும் எல்லைகளாகக் கொண்டுள்ளது. மேலும், அதன் வடக்கு எல்லை குறுகிய நீர்ப்பரப்பால் பிரிக்கப்பட்ட இந்தியத் துணைக்கண்ட நிலப்பரப்பை நோக்கியதாக அமைந்துள்ளது. இத்தகைய தனித்துவமான இயற்கை அமைப்பின் காரணமாகவே, காலநிலை மாற்றத்தினால் அதிகம் பாதிக்கப்படக்கூடிய இலங்கையின் மாகாணங்களில் வட மாகாணம் முன்னிலை வகிக்கிறது.
கடந்த 90 ஆண்டுகால காலநிலைத் தரவுகளை ஆராய்கின்ற பொழுது, வடக்கு மாகாணத்தில் வெப்பநிலை 1.34° செல்சியஸாக அதிகரித்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதேவேளை, மழைவீழ்ச்சியில் 30 மில்லிமீற்றர் தொடக்கம் 70 மில்லிமீற்றர் வரையான குறைவு காணப்படுவதோடு, முன்னதாக 72 ஆக இருந்த மழை நாட்களின் எண்ணிக்கை தற்போது 54 ஆகக் குறைவடைந்துள்ளது. மேலும், இரவில் நிலவுகின்ற குறைந்த வெப்பநிலை அளவில் மிகப்பெரிய அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதோடு, காலநிலைப் பருவங்களின் தொடக்கம் பின்னகர்த்தப்பட்டிருக்கின்றது. இவையே வடக்கு மாகாணத்தின் காலநிலை மாற்றத்தின் மிகப்பிரதான அம்சங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
கேள்வி: இந்தக் காலநிலை மாற்றத்தினால் குறிப்பாக வடபகுதியில் (யாழ்ப்பாணத்திற்கு) ஏற்படும் பாதிப்புகள் அல்லது அச்சுறுத்தல்கள் எவை?
பதில்: காலநிலை மாற்றம் என்பது யாழ்ப்பாண மாவட்டத்திற்கு மிக அதிகளவிலான பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய ஒரு நிலைமையாகும். யாழ்ப்பாணத்தின் தரைத்தோற்றம், புவியியல் கட்டமைப்பு என்பனவற்றைப் பொறுத்தவரையில், இந்நிலப்பரப்பு காலநிலை மாற்றத்திற்கு மிக அதிகளவிலான ஆபத்து மிக்க நிலப்பகுதியாக அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், குறிப்பாக இதனால் யாழ்ப்பாண மாவட்டத்தின் தீவுப்பகுதிகள் மிகக் கடுமையாகப் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகளும் அதிகமாகக் காணப்படுகின்றன. யாழ்ப்பாணத்தின் தரைக்கீழ் நீர் வளமானது, ஒவ்வொரு ஆண்டும் இரண்டாவது இடைப்பருவகாலத்திலும், வடகீழ் பருவக்காற்றுக் காலத்திலும் கிடைக்கின்ற மழைவீழ்ச்சியை அடிப்படையாகக் கொண்டே அமைந்துள்ளதால், மழைவீழ்ச்சியில் ஏற்படுகின்ற மாற்றங்கள் இங்கு மிகப்பெரிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. அதேவேளையில், இரவுப் பகுதிகளில் அதிகரிக்கின்ற ஈரப்பதம் காரணமாகவும் இப்பகுதியில் அதிகளவிலான பாதிப்புகள் நிகழ்வதற்கான வாய்ப்புகள் காணப்படுகின்றன.
கேள்வி: எல் நினோ’, ‘லா நினோ’ காலநிலை மாற்றங்களால் இலங்கையின் நிலம் மற்றும் கடல்சார் பல்லுயிர்த்தன்மைக்கு ஏற்பட்டுள்ள சவால்கள் எவை?
பதில்: எல்நினோ என்பது சமுத்திர பிராந்தியத்தில் ஏற்படுகின்ற அதிகரித்த வெப்பநிலையோடு தொடர்புடைய ஒரு இயற்கை நிகழ்வாகும். பொதுவாக, எல்நினோ என்பது மூன்று தொடக்கம் ஒன்பது ஆண்டு காலச்சக்கரத்தில் உருவாகுகின்ற ஒரு நிலைமையாகக் காணப்படுகின்றது. எனினும், தற்போதைய 2026– 2027 காலப்பகுதிக்கு என எதிர்வு கூறப்பட்டிருக்கின்ற எல்நினோவானது, ‘சூப்பர் எல்நினோ’ என்ற கடுமையான வகைப்பாட்டுக்குள் உள்ளடங்குகின்றது. வழக்கமான எல்நினோ நிலையின் போது சமுத்திர மேற்பரப்பினுடைய வெப்பநிலை 1.8 பாகை செல்சியஸிலிருந்து 2.2 பாகை செல்சியஸ் வரை மட்டுமே அதிகரிப்பைக் கொண்டிருக்கும். ஆனால், தற்போது பசுபிக் பெருங்கடலில் உருவாகி வருகின்ற இந்த எல்நினோவின் வெப்பநிலை மாற்றமானது 3.5 பாகை செல்சியஸ் என்ற அளவில் மிக அதிகமாக அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளதால், இது ‘சூப்பர் எல்நினோ’ என்று வரையறுக்கப்பட்டிருக்கின்றது.
இந்த எல்நினோவின் உருவாக்கத்தினால் கடற்பிராந்தியச் சூழலே அதிகளவில் பாதிக்கப்படக்கூடிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. கடலில் ஏற்படுகின்ற இத்தகைய அசாதாரணமான வெப்ப அதிகரிப்பானது, கடல்வாழ் பல்லுயிர்களின் சமநிலையை நேரடியாகப் பாதிப்பதுடன் அவற்றின் உயிர்வாழ்விற்கும் அச்சுறுத்தலாக அமைகின்றது. அதேவேளை, கடற்கரையோரங்களில் நிலவக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்ற இந்த அதிகளவிலான வெப்பநிலை உயர்வு காரணமாக, ஒட்டுமொத்த பிராந்தியத்திலும் மிகப்பெரிய அளவிலான சுற்றுச்சூழல் மற்றும் வாழ்வாதாரப் பாதிப்புகள் நிகழ்வதற்கான வாய்ப்புகள் மிக அதிகமாகக் காணப்படுகின்றன.
அதிலும் குறிப்பாக சமுத்திர மேற்பரப்பின் வெப்பநிலை அதிகரிப்பு என்பது பவளப்பாறைகளை பெருமளவில் பாதிப்பதோடு மட்டுமல்லாமல், வெப்பநிலையில் ஏற்படும் இந்த அதிரடி மாற்றம் மீன்களின் உற்பத்தி மற்றும் வளர்ச்சியிலும் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. சமுத்திரப் பகுதிகளில் இயற்கையாகவே வெப்பநிலை அதிகரிக்கும் போது, அதன் பல்லுயிர்ச் சூழல் பெருமளவு பாதிக்கப்படுகிறது. மேலும், இந்த பாதிப்பின் தொடர்ச்சித் தன்மை என்பது சமுத்திரச் சூழலை பல ஆண்டுகளுக்கு ஒரு சவாலான நிலைக்கு தள்ளிவிடுகிறது. எல் நினோ உருவாக்கம் என்பது சமுத்திரச் சூழலை மிக மோசமாகப் பாதிக்கின்ற ஒரு முதன்மையான தோற்றப்பாடாகும்.
அதே வேளையில், லா நினோவின் உருவாக்கம் என்பது சமுத்திர நீரின் வெப்பநிலை குறைவடைவதைக் குறிக்கிறது. எல் நினோவிற்கு நேர்மாறாக இது இருந்தாலும், இதுவும் சமுத்திரச் சூழலில் மிகப்பெரிய அளவிலான பாதிப்புகளையே ஏற்படுத்துகிறது. பொதுவாக, சமுத்திரச் சூழலின் இயல்பான அல்லது சமநிலையான வெப்பநிலை அளவு கூடினாலும் சரி, குறைந்தாலும் சரி, அது ஒட்டுமொத்த கடல்சார் அமைப்பிலும் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால், எல் நினோ மற்றும் லா நினோ ஆகிய இரண்டுமே சமுத்திரச் சூழலைப் பாதிக்கும் மிக முக்கியமான காரணிகளாக விளங்குகின்றன.
கேள்வி: இலங்கையின் பல மாவட்டங்களில் நிலத்தடி நீர் மட்டம் குறைவதற்கும், கடலோர நன்னீருக்குள் கடல்நீர் உட்புகுவதற்கும் காலநிலை மாற்றம் எவ்வாறு காரணியாகிறது?
பதில்: காலநிலை மாற்றம் என்பது மனிதர்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கின்ற மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகக் காணப்படும் நீர் வளத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. தரை மேற்பரப்பு நீர் வளங்கள் மற்றும் தரைக்கீழ் நீர் வளங்கள் ஆகிய இரண்டுமே காலநிலை மாற்றத்தினால் மிக அதிகளவில் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகளைக் கொண்டிருக்கின்றன. பொதுவாக, ஒரு பிரதேசத்தினுடைய வெப்பநிலை அதிகரிப்பு என்பது, அதன் விளைவாக அங்கு நிலவுகின்ற பல்வேறு வகைப்பட்ட நீர் நிலைகள் சார்ந்த பல பாதிப்புகளை ஏற்படுத்துகின்றது.
அதேவேளை, கடற் பிராந்தியங்களில் ஏற்படுகின்ற மாற்றங்களை காலநிலை மாற்றத்தில் “கடல் மட்ட மாற்றம்” என்று அழைப்போம். இந்த கடல் மட்ட மாற்றத்தின் விளைவாகப் பல பிரதேசங்களில் கடல் மட்டம் உயர்வடைந்திருப்பது அவதானிக்கப்பட்டுள்ளது. இதனை இன்னொரு வகையில் கூறுவதானால், கடல் நீரின் அளவு உயர்ந்திருக்கின்றது. இவ்வாறு உயர்வடையும் கடல் நீரானது, மக்களின் குடியிருப்புகள் அல்லது கரையோரத்திலுள்ள தாழ்நிலப் பகுதிகளுக்குள் உட்புகுந்து, அங்குள்ள வயல் நிலங்கள் அல்லது விளைநிலங்களில் மிகப்பெரிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்துகின்றது. அந்த அடிப்படையில், இந்த காலநிலை மாற்றம் என்பது உவர் நீர் செறிவு மற்றும் உவர் நீர் உள்வருகைக்கு ஆகியவற்றுக்கு மிகப்பெரிய அளவில் பங்காற்றுகின்றது என்பது உண்மை.
நன்றி – திருச்செல்வம் ஜனனீ (தினகரன்)