Ad Widget

காலநிலை மாற்றம்: ‘இலங்கைக்கு பெரும் பாதிப்பு வரும்’

காலநிலை மாற்றம் காரணமாக இலங்கையின் கரையோர மற்றும் விவசாய மூலவளங்களில் ஏற்படும் சேதம், இந்த நூற்றாண்டின் இறுதியளவில் அந்த நாட்டின் பொருளாதாரத்தின், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6 வீதமான பாதிப்பை ஏற்படுத்தும் என்று ஆசிய அபிவிருத்தி வங்கியின் தெற்காசியாவுக்கான காலநிலை மற்றும் பொருளாதாரம் குறித்த அறிக்கை ஒன்று கூறியுள்ளது.

flood_paddy_fields_srilanka

கணிசமான எண்ணிக்கையிலான இலங்கையர்கள் இன்னமும் விவசாயம், கால்நடை உற்பத்தி, உள்நாட்டு மீன்பிடி போன்ற மழைவீழ்ச்சியை நம்பிய வருமான மூலங்களில் தங்கியிருக்கிறார்கள் என்று ஆசிய அபிவிருத்தி வங்கியின், அறிவு முகாமைத்துவம் மற்றும் நீடித்த அபிவிருத்திக்கான துணைத் தலைவர் பிந்து லொஹானி தெரிவித்துள்ளார்.

ஆகவே, கடுமையான காற்றின் அதிகரிப்பு, வறட்சி மற்றும் மழைவீழ்ச்சி முறைகளில் ஏற்படும் மாற்றம் ஆகியவை அவர்களது உணவுப் பாதுகாப்பு, வாழ்வாதாரம் ஆகியவற்றில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் அவர் கூறியுள்ளார்.

தெற்காசியாவில் காலநிலை மாற்றத்தின் தாக்கம் மற்றும் அதனை தகவமைத்துக்கொள்ளுதலை மதிப்பிடல் என்ற தலைப்பிலான அந்த அறிக்கை, வங்கதேசம், பூட்டான், இந்தியா, மாலத்தீவுகள், நேபாளம் மற்றும் இலங்கை ஆகிய 6 நாடுகளின் பொருளாதாரம் இதனால் 2050 இல் 2 வீதத்தால் பாதிக்கப்பட்டு, 2100 இல் அது 9 வீதமாக அதிகரிக்கும் என்று கூறியுள்ளது.

தற்போதைய பூகோள போக்குகளில் மாற்றத்தை ஏற்படுத்தாவிட்டால், 2050 இல் இலங்கை தனது வருடாந்த மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.2 வீதம் வீழ்ச்சியை காணும் என்றும் நூற்றாண்டின் இறுதியில் அது 6.5 வீதமாக அதிகரித்துவிடும் என்றும், ஆனால், உரிய தகவமைத்துக்கொள்ளும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டால், அதனை 1.4 வீதமாக குறைத்துவிடலாம் என்றும் அந்த அறிக்கை பரிந்துரைக்கிறது.

இந்த நூற்றாண்டின் இறுதியில் இலங்கையின் வெப்பநிலை 3 வீதத்தால் அதிகரிப்பதுடன், நெற்பயிர்ச்செய்கை வறட்சியால் பாதிக்கப்படும் நிலைமை அதிகரிக்கும் என்றும், 2080 அளவில் தாழ்நாட்டு உலர்வலயங்களில் மகசூல் மூன்றில் ஒரு பங்கினால் வீழ்ச்சி அடையும்.

மழை வீழ்ச்சி குறைவதால், தாழ்நாட்டு மற்றும் மத்திய மலைநாட்டில் உள்ள தேயிலை உற்பத்தியும் பாதிப்படையும்.

யாழ்ப்பாணத்துக்கும் பெரும் பாதிப்பு

அந்த நாட்டின் பரந்துபட்ட கரையோரப் பிரதேசத்தில், மீன்பிடிக்கு கணிசமான பாதிப்பு ஏற்படுவதுடன், கடுமையான அலைகள், நீர் மட்டம் உயர்தல் ஆகியவற்றால் கரையோர உயிர் தொகுதியும் பாதிக்கப்படும். இதனால், யாழ்ப்பாணம், மற்றும் கம்பஹா பகுதிகள் மிகவும் மோசமாகப் பாதிக்கப்படும்.

உயிர் காவிகள் மூலம் பரவுகின்ற டெங்கு போன்ற நோய்கள் அண்மைக்காலமாக இலங்கையில் அதிகரித்துக் காணப்படுகின்றது. 2090 ஆம் ஆண்டளவில் அந்த நோயாளர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு 353000 வரை அதிகரிக்கும். இரண்டாயிரம் பேர்வரை இறப்பார்கள்.

Related Posts