Ad Widget

காரோட்டல், கணனி மேய்தல், உண்மை பேசல் இவற்றை இரு பாலாரும் படிக்க வேண்டும்!

காரோட்டல், கணனி மேய்தல், உண்மை பேசுதல் இந்த மூன்றையும் ஆண், பெண் இரு சாராரும் படிக்க வேண்டும். இது காலத்தின் கட்டாயம். அன்றும் இன்றும் உண்மை பேசுதல் பொதுவாக இருப்பதை நீங்கள் உணர்வீர்கள். முரண்பாடு இல்லாத வாழ்க்கையை வாழ்வதற்கு உண்மை பேசுதல் மிக முக்கியமானதொன்றாக அமைகின்றது. முடிந்த வரையில் உண்மையைப் பேச மாணவ சமுதாயம் முன்வர வேண்டும் என வட மாகாண முதலமைச்சர் க.வி.விக்கினேஸ்வரன் மாணவர்களிடம் வேண்டுதல் விடுத்துள்ளார்.

பாலிநகர் மகா வித்தியாலயத்தில் புதிதாக அமைக்கப்பட்ட தொழில்நுட்ப ஆய்வுகூடத் திறப்பு விழா வித்தியாலய அதிபர் தலைமையில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றிய வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி. விக்னேஸ்வரன் அங்கு மேலும் கூறியவை வருமாறு:

மஹிந்தோதய திட்டத்தின் கீழ் ஆரம்பிக்கப்பட்ட இத் தொழில்நுட்ப ஆய்வு கூடங்களின் திறப்பு விழாக்கள் விமர்சையாக நடத்தப்பட்டு வருகின்றன. இவற்றை திறப்பதோடு மட்டும் நின்று விடாது பயனுறுதி மிக்கதாகவும் எதிர்கால சந்ததியினருக்கு தொழில் முறைக் கல்வி ரீதியான பயிற்சிகளை வழங்கக்கூடியனவாகவும் அமைய ஆவன செய்ய வேண்டும்.

எமது மாணவர்கள் வெறும் ஏட்டுச் சுரைக்காய்களாக மட்டும் இருந்து விடாது சமுதாயத்தின் அனைத்து தட்ப வெட்ப நிலைகளுக்கும் ஈடுகொடுத்து மேலோங்கி வளரக்கூடியவர்களாக மலர வேண்டும். அவ்வாறான ஒரு நிலைமைக்கு எமது மாணவர்களை இவ் ஆய்வு கூடங்கள் மாற்றியமைப்பன என்று எதிர்பார்க்கின்றேன்.

எம்மிடம் தொழில் வாய்ப்புக் கேட்டு பல பிள்ளைகள் வருகின்றார்கள். கல்வி ரீதியாக அவர்கள் டிப்ளோமா, பட்டப்படிப்புக்களை தகைமைகளாகக் கொண்டுள்ள போதிலும் தொழில் துறைக்குத் தேவையான திறமைகளை அவர்கள் கொண்டிருக்கவில்லை என்பதனை பல சந்தர்ப்பங்களில் நான் அவதானித்துள்ளேன்.

எமது பிள்ளைகள் எந்தத் துறையைத் தேர்ந்தெடுத்தாலும் அந்தத் துறையில் மேம்பட்டவர்களாக விளங்கக் கூடிய பல்துறை விற்பன்னர்களாக மாற வேண்டும். அவ்வாறு மாற்றி எடுப்பது ஆசிரியர் சமூகத்தின் பாரிய கடப்பாடாகும்.

சுமார் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் கிரேக்க நாட்டில் ஒவ்வொரு மாணவனும் மூன்று தகைமைகளைப் பெற்றிருக்க வேண்டும் என்ற கடப்பாடு இருந்தது. அம்பெய்தல், குதிரை ஓட்டல், உண்மை பேசுதல் ஆகிய மூன்றையுமே கிரேக்க அதிகார பீடம் அக்காலத்தைய மாணவ சமுதாயத்திடம் இருந்து எதிர்பார்த்தது.

இன்று காரோட்டல், கணனி மேய்தல், உண்மை பேசுதல் ஆகிய மூன்றையும் ஆண், பெண் இருசாராரும் படிக்க வேண்டும். இது காலத்தின் கட்டாயம். அன்றும் இன்றும் உண்மை பேசுதல் பொதுவாக இருப்பதை நீங்கள் உணர்வீர்கள். முரண்பாடு இல்லாத வாழ்க்கையை வாழ்வதற்கு உண்மை பேசுதல் மிக முக்கியமானதொன்றாக அமைகின்றது.

முடிந்த வரையில் உண்மையைப் பேச மாணவ சமுதாயம் முன்வர வேண்டும். இப்பகுதி மாணவ, மாணவியர் விளையாட்டுப் போட்டிகளில் பாடசாலை மட்டம், கோட்ட மட்டம், மாகாண மட்டம், தேசிய மட்டம் எனப் பல மட்டங்களிலும் மிகச் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுக் கொள்வதைக் காணக்கூடியதாகவுள்ளது.

இவர்கள் சிறுவயது முதல் தோட்டங்களிலும் வயல்களிலும் கடின உழைப்பில் ஈடுபடுகின்றார்கள். காளை மாடுகளையும் பசுக்கன்றுகளையும் பிடித்துக் கட்டுவதற்காக அவற்றுடன் சேர்ந்து ஓடி ஓடி நல்ல பயிற்சியைப் பெறுகின்றார்கள்.

இயற்கையோடு ஒன்றி உடல் வளம் பெறும் உங்களைத் தொடர்ந்து அவ்வாறான உடல் உழைப்பில் ஈடுபட்டுவர வேண்டுகின்றேன். இயற்கையான சூழலில் நீண்டதூர ஓட்டத்தில் ஈடுபட்டு வரும் பல ஆபிரிக்க வீர, வீராங்கனைகள் எவ்வாறு தூர ஓட்டப் போட்டிகளில் மரதன் போட்டிகளில் உலக வீர வீராங்கனைகளாகப் பிரகாசிக்கின்றார்கள் என்பதை நீங்கள் அறிந்து கொண்டிருப்பீர்கள்.

எனவே கல்வியும் விளையாட்டும் ஒருங்கே உங்கள் வாழ்வில் முக்கிய இடம் பெற்றால் நீங்கள் முன்னேறலாம். எதிர் காலத்தில் நீங்கள் யாவரும் சிறந்த கல்விமான்களாகவும் சிறந்த விளையாட்டு வீர, வீராங்கனைகளாகவும் மாற வேண்டும் என வாழ்த்துகின்றேன் எனவும் குறிப்பிட்டார்.

Related Posts