Ad Widget

காணி விடுவிப்பு நிகழ்வில் கடும் பாதுகாப்பு கெடுபிடி!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்றுப் பங்கேற்ற காணி விடுவிப்பு நிகழ்வில் இராணுவத்தினர் நேரடியாகவும் இரகசியமாகவும் பல பாதுகாப்புக் கெடுபிடிகளை விடுத்தனர்.

இதனால் இந்த நிகழ்வில் பங்கேற்ற மக்கள் பெரும் அச்சத்துக்கு உள்ளாகியிருந்தனர். வலி.வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்தில் 750 ஏக்கர் காணிகளை விடுவித்து மீண்டும் மக்களிடம் வழங்கும் நிகழ்வு நேற்று சனிக்கிழமை காங்கேசன்துறை நடேஸ்வரக் கல்லூரியில் இடம்பெற்றது.

நேற்று மாலை 3.30 மணிக்கு ஆரம்பமான இந்த நிகழ்வில் பெரும் எண்ணிக்கையிலான மக்கள் கலந்துகொண்டனர். இவ்வாறு கலந்துகொள்ள வந்த மக்கள் பிரத்தியேகமாக அமைக்கப்பட்ட சோதனைச் சாவடிக்குள் சோதிக்கப்பட்டனர்.

இதன் பின்னர் அவர்கள் இராணுவத்தினரின் பேருந்துகளில் ஏற்றப்பட்டு நிகழ்வு இடம்பெறும் பகுதியில் இறக்கிவிடப்பட்டனர். நிகழ்வுக்காக நடேஸ்வரக் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்ட பந்தலுக்குள் அனுமதிக்கப்பட்ட மக்களை நிகழ்வு முடியும் வரை எந்தக் காரணத்துக்காகவும் வெளியில் செல்ல இராணுவத்தினர் அனுமதிக்கவில்லை.

நிகழ்வில் மக்களுடன் மக்களாக சீருடையிலும் சிவில் உடையிலும் தமிழ் நன்கு பேசவல்ல இராணுவத்தினர் நிறுத்தப்பட்டு மக்கள் கண்காணிக்கப்பட்டமையை அவதானிக்க முடிந்தது.

இது மாத்திரமின்றி நிகழ்வு இடம்பெற்ற பகுதியில் பல கண்காணிப்புக் கமெராக்கள் பொருத்தப்பட்டிருந்தன. மேலும் பாடசாலையின் மாடிக் கட்டடங்களில் மறைந்திருந்த இராணுவத்தினர் தொலைகாட்டி (பைனகுலார்) வழியே நிகழ்வையும் அப்பகுதியையும் கண்காணித்தனர். அத்துடன் வோக்கி மூலம் உடனுக்குடன் தகவல்களை வழங்கிக் கொண்டும் இருந்தனர்.

Related Posts