Ad Widget

காணி ஆக்கிரமிப்பை பேசித் தீர்க்கத் தயார்; சபையில் இரா.சம்பந்தன்

sambanthan 1_CIவடக்கு, கிழக்கில் காணி ஆக்கிரமிப்புகள், சிங்களக் குடியேற்றங்கள் தொடர்பில் அரசு உனடியாகத் தீர்வு காண வேண்டும் என வலியுறுத்திய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன், காணிப் பிரச்சினைகளை பேசித் தீர்ப்பதற்கு தாம் தயார் என்றும் இதுவிடயத்தில் அரசின் பதிலை எதிர்ப்பார்க்கிறார் என்றும் தெரிவித்தார்.

வட மாகாணத்தில் தற்போது இடம்பெறும் காணி அபகரிப்புகள், சிங்களக் குடியேற்றங்கள் தொடர்பான சபை ஒத்திவைப்புவேளை பிரேரணையை சபையில் முன்வைத்து உரையாற்றும்போதே நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

சுமார் ஒரு மணித்தியாலம் 15 நிமிடங்கள் உரையாற்றிய அவர், வடக்கில் இடம்பெறும் காணி ஆக்கிரமிப்புகள் தொடர்பில் பல்வேறு புள்ளிவிவரங்களையும் முன்வைத்ததுடன், வடக்கில் யாழ். மாவட்டம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் மற்றும் திருகோணமலை முதலிய மாவட்டங்களில் எங்கெங்கு காணி அபகரிப்புகள், சிங்களக் குடியேற்றங்கள் இடம்பெறுகின்றன என்பதையும் சுட்டிக்காட்டினார்.

இதன்போது அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:

வடமாகாணத்தில் காணி என்பது பாரிய விடயமாகும். தமிழ், முஸ்லிம் மக்களுக்கு இது பொருந்தும். இக் காணிப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண அரசுடன் நாம் பல தடவைகள் முயற்சிகளை மேற்கொண்டபோதிலும், பயனளிக்கவில்லை.

அதனால் நாடாளுமன்றத்தில் அதற்கான தீர்வொன்றைக் காண விளைகிறோம். கலந்துரையாடல் மூலம் தீர்வைக் காண நாம் தயார். அரசின் பதிலைத் தான் எதிர்பார்க்கின்றோம்.

வலிகாமத்தில் 6,300 ஏக்கர்களுக்கு மேற்பட்ட காணிகள் சுவீகரிக்கப்ப்டுள்ளன. இது கொழும்பு மாவட்டத்தில் மூன்றில் இரண்டு மடங்கு போன்றது. முன்னாள் அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமரின் மகன் தனது காணி விவகாரம் தொடர்பில் நீதிமன்றத்தை நாடியுள்ளார்.

வடக்கிலுள்ள காணிகள் அனைத்தும் உயர் பாதுகாப்பு வலயம் என்ற போர்வையிலேயே அபகரிக்கப்பட்டுள்ளன. இக்காணிப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணவேண்டிய நிலையில் அரசு உள்ளது.

ஆயுதப்படையை வைத்தே அரசு தமிழ் மக்களுக்குச் சொந்தமான காணிகளை சுவீகரித்துள்ளது. காணிச் சொந்தக்காரர்கள் தமது காணிகளுக்குச் செல்ல முடியாது.

புலிகள் ஏவுகணைகளைப் பாவித்த பாரிய பிரதேசம் அதியுயர் பாதுகாப்பு வலயமாகப் பிரகடனப்படுத்தப்பட்டது. இப்போது புலிகள் அங்கு இல்லை. ஏவுகணைகளும் இல்லை. எனவே, அதியுயர் பாதுகாப்பு வலயம் தேவையில்லை.

சம்பூரிலும் மக்களது காணிகள் அரசின் ஆயுதப்படைகளால் சுவீகரிக்கப்பட்டுள்ளன. சம்பூர் அனல்மின் நிலையத்திற்குத் தேவையான நிலம் மட்டும் எடுக்கப்பட்டு ஏனைய நிலங்கள் அதன் சொந்தக்காரர்களிடம் ஒப்படைக்கப்படும் என அமைச்சர் பஸில் ராஜபக்ஷ நாடாளுமன்றில் உறுதியளித்தார்.

2012ஆம் ஆண்டு இந்த உறுதிமொழியை வழங்கினார். நவரட்ணபுரம் என்ற கிராமத்தில் மட்டும் மக்கள் மீளக் குடியேற்றப்பட்டுள்ளனர். ஏனைய பகுதிகளில் மீள்குடியேற்றம் இடம்பெறவில்லை.

1,400 குடும்பங்களுக்குச் சொந்தமான காணிகள் இன்னும் கையளிக்கப்படவில்லை. யுத்தம் முடிவடைந்து 4 வருடங்கள் கடந்துவிட்டன. எனவே, இவ்விடயம் தொடர்பில் அரசு சிந்திக்கவேண்டும்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் கோப்பாபிளவு, ஒட்டுசுட்டான், மாங்குளம் ஆகிய பல பகுதிகளிலும் மன்னாரில் பல பகுதிகளிலும் மக்களுக்குச் சொந்தமான பல காணிகள், கட்டடங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.

தனியாருக்கு, தேவாலயங்களுக்கு, பாடசாலைகளுக்குச் சொந்தமான காணிகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. தலைமன்னாரில் 30 ஏக்கர் காணிகளைக் கடற்படையினர் ஆக்கிரமித்துள்ளனர். சுன்னாகத்தில் பயிற்சி முகாம்களுக்கென காணிகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.

கிளிநொச்சி மாவட்டத்தில் 10,000 வீடுகள் இராணுவத்துக்காகக் கட்டப்படுகின்றன. இது ஒரு பாரிய வீடமைப்புத் திட்டம். இரணைமடுவில் இராணுவத்தினர் மரக்கறிச் செய்கையில் ஈடுபடுகின்றனர்.

வெள்ளாங்குளத்தில் 600 ஏக்கரில் கஜுவும், 100 ஏக்கரில் தென்னையும் இராணுவத்தால் பயிரிடப்பட்டுள்ளன. இப்பகுதிகளுக்கு மக்கள் செல்ல முடியாதுள்ளது. விவசாய நடவடிக்கைகளில் இராணுவத்துடன் மக்கள் போட்டியிட முடியாது.

ஏனெனில், இராணுவத்தினருக்குத் தேவையான உரம், நீர், விதைகள் என்பன இலவசமாகவே கிடைக்கின்றன. அதனால் மக்கள் விவசாயம் செய்யமுடியாதுள்ளது. அவர்கள் மிகவும் கஷ்டப்படுகின்றனர்.

அபிவிருத்திக்கெனக் கூறி அரசு பெருந்தொகையான காணிகளை அபகரித்துள்ளது. யாழில், மயிலிட்டிப் பகுதியில் மக்களின் காணிகள் ஆக்கிரமிக்கப்பட்டு யோகட் தொழிற்சாலை ஆரம்பிக்கப்பட்டுள்ளது

கிண்ணியா வெந்நீர் ஊற்றுகள் பௌத்த விகாரையின் சொத்தாக மாறியுள்ளன. இதில் அரசு தலையிடவேண்டும். நான் அமைச்சர் பஸில் ராஜபக்ஷவுக்குக் கடிதம் எழுதினேன். ஆனால், இன்றுவரை எனக்குப் பதில் கிடைக்கவில்லை.

தமிழரின் வரலாற்றுக் கலாசாரம் முக்கியத்துவமிக்க பல பகுதிகள் புனித பூமியென அரசால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. குச்சவெளி உள்ளிட்ட இன்னும் பல பகுதிகளில் உள்ள முருகன், அம்மன் ஆலயங்களின் இடங்கள் தற்போது புனித பூமி என இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.

அங்கு பௌத்தர்கள் இல்லை. பிக்குகள் மட்டும் இருக்கின்றனர். அவர்களுக்கு இராணுவத்தினர்தான் தானம் வழங்குகின்றனர். தொல்பொருள் ஆராய்ச்சி எனக் கூறி அங்கு பௌத்தர்களின் புனித பூமிக்காக இராணுவத்தால் காணிகள் அபகரிக்கப்படுகின்றன.

இவ்வாறு தமிழர்களின் வரலாற்றுப் பாரம்பரிய சிறப்புமிக்க இடங்கள் இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்படுகின்றன.

13ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில் மக்கள் மத்தியில் பல கேள்விகள் எழுந்துள்ளன. ஐ.நா. செயலாளர் நாயகத்துடன் ஜனாதிபதி வெளியிட்ட கூட்டறிக்கையில் 13இற்கு அப்பால் சென்று ஆகக்கூடிய அதிகாரப்பகிர்வு வழங்குவோம் என்றுள்ளது. ஆனால், அதற்கான நடவடிக்கைகள் இதுவரையில் எடுக்கப்படவில்லை.

13ஆவது திருத்தச் சட்டத்தையும், இலங்கை இந்திய உடன்படிக்கையையும் புறக்கணிக்க முடியுமா? ஐ.நா. சாசனத்துக்கு அமைய எந்தவொரு நாடும் ஒருதலைப்பட்சமாக தான்தோன்றித்தனமாக செயற்படமுடியாது. ஆனால், இங்கே அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளது. நியாயமற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இதுகூட கிழக்குத் தமிழ், முஸ்லிம் மக்களின் வாழ்க்கையில் தாக்கம் செலுத்தும். தமிழரின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு அரசு நடவடிக்கைகள் மேற்கொள்ளத் தயார் எனில், அதற்கு உதவி வழங்க நாம் தயார்.

தமிழரின் பிரச்சினை தொடர்பில் இடம்பெறும் நீதி, நியாயமற்ற நடவடிக்கைகளுக்கு அரசு தீர்வுதரவேண்டும் என்று தமிழ் மக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கிறேன் என்றார் சம்பந்தன் எம்.பி.

Related Posts