Ad Widget

காணியை மீட்டுத் தாருங்கள் -கெற்பேலி பொதுமக்கள்

ARMY-SriLankaஇராணுவத்தினர் சுவீகரித்துள்ள கெற்பேலிக் காணியில் தாம் முன்னர் விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டவர்கள் என்றும், அந்தக் காணியைத் தமக்கு வழங்குமாறும் பொதுமக்கள் சிலர் சாவகச்சேரி பிரதேச செயலகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சாவகச்சேரி பிரதேச செயலகத்தினால் காணிக் கச்சேரி நேற்று செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்டது. இதில் பெரும் எண்ணிக்கையான பொதுமக்கள் பங்கெடுத்தனர். இதில் பங்கெடுத்த பொதுமக்கள் சிலர், இராணுவத்தினர் கைப்பற்றியுள்ள கெற்பேலிக் காணியை மீட்டுத்தருமாறு கோரியுள்ளனர்.

காணிச் சீர்திருத்த ஆணைக் குழுவுக்குச் சொந்தமான 60 பரப்புக் கொண்ட இந்தக் கெற்பேலிக் காணியில் இராணுவத்தினர் தற்போது நிரந்தர இராணுவ முகாம் அமைத்து வருகின்றனர்.

குறித்த காணியைச் சுவீகரிப்பதற்கான அறிவித்தலும், யாழ். மாவட்ட காணி சுவீகரிப்பு முன்னாள் உத்தியோகத்தர் இ.சிவசுவாமியின் கையொப்பத்துடன் ஒட்டப்பட்டிருந்தது. குறித்த காணியை இராணுவத்தினருக்கு வழங்குவதற்குக் காணிச் சீர்திருத்த ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

இந்த நிலையிலேயே குறித்த காணியில் தாம் விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டதாகவும், போர் நடவடிக்கைகள் காரணமாகக் குறித்த காணியைவிட்டு வெளியேறியிருந்ததாகவும் மீண்டும் விவசாய நடவடிக்கைகளை தொடரப் போவதாகவும் மக்கள் பிரதேச செயலரிடம் தெரிவித்துள்ளனர்.

குறித்த காணி, காணிச் சீர்திருத்த ஆணைக்குழுவுக்குச் சொந்தமானது என்பதனால் மாவட்டச் செயலகத்தில் உள்ள காணிச் சீர்திருத்த ஆணைக்குழுவுடன் சென்று கலந்துரையாடுமாறு பிரதேச செயலாளர் கூறியுள்ளார்.

Related Posts