Ad Widget

காணியுடன் அதிக மக்கள் திருப்தியடைகிறார்கள் என நினைக்கிறேன் : ரணில்

இந்தியாவின் தி ஹிந்து ஊடகத்துக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இக்கருத்தினை  வெளிப்படுத்தியுள்ளார். மாகாண சபைகளுக்கு காணி, பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டுமென தமிழ் மக்கள் கோருகின்றனரே எனக் கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த பிரதமர் ரணில்,

‘காணியுடன் அதிக மக்கள் திருப்தியடைகிறார்கள் என நினைக்கிறேன். யாழ்ப்பாணத்திலும் கிழக்கிலும் தங்களது காணிகளிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ள மக்களை மீளக் குடியேற்றுவதே வடக்கு கிழக்கிலுள்ள உண்மையான பிரச்சினையாகும். தேசிய பாதுகாப்பு என்ற பிரதான விடயத்துக்கு ஏற்ப, காணிகளை விடுவிப்போம் என நாம் கூறுகிறோம்’ என அவர் குறிப்பிட்டார்.

பொலிஸ் அதிகாரங்கள் குறித்துக் கருத்துத் தெரிவித்த பிரதமர், ‘பொலிஸ் அதிகாரங்களைப் பொறுத்தவரை, அது குறித்து அதிக யோசனை தேவைப்படுகிறது என நான் நினைக்கிறேன். பொலிஸ் சேவை அரசியல்மயப்படுத்துவதை நாம் அனுமதிக்கக்கூடாது. ஆகவே, சுயாதீன பொலிஸ் ஆணைக்குழுக்கள் மேலும் பலப்படுத்தப்பட்டு, இது தொடர்பாக ஆராயப்பட்டு, மாகாண சபைகள் என்னவாறான பங்கை வகிக்க முடியும் என்பதை நாம் பார்க்க முடியும்’ எனத் தெரிவித்தார்.

சமஷ்டி பற்றிய வினாவுக்குப் பதிலளித்த பிரதமர், சமஷ்டி, தனியாட்சி போன்ற சொற்பிரயோகங்களை விடுத்து, உள்ளடக்கத்தைப் பார்க்க வேண்டுமெனத் தெரிவித்ததோடு, சமஷ்டி அரசியலமைப்புள்ள நாடுகளை விட இலங்கையில் சில நேரங்களில் அதிக அதிகாரப் பகிர்வு காணப்படுவதாகத் தான் நினைப்பதாகக் குறிப்பிட்டார். இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் யுத்தக் குற்றங்கள் தொடர்பான குற்றச்சாட்டுக்களை விசாரிப்பதற்கு மறுத்த பிரதமர், இலங்கைக்குள் சர்வதேச விசாரணைக்கான எந்தவொரு சட்ட அடிப்படையும் கிடையாது எனவும், அது உள்ளக விசாரணையாக அமைய வேண்டுமெனவும் தெரிவித்தார்

Related Posts