Ad Widget

காணிகள் பறிப்புக்கு எதிராக யாழ்.ஆயரும் மனுத் தாக்கல்

judgement_court_pinaiவலி.வடக்கில் கத்தோலிக்க திருச்சபைக்குச் சொந்தமான 55 காணித் துண்டுகளைச் சுவீகரித்தமைக்கான காரணத்தைக் குறிப்பிடுமாறு காணி அமைச்சருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வலி.வடக்கு மற்றும் வலி.கிழக்கில் தமிழ் மக்களுக்குச் சொந்தமான 6 ஆயிரத்து 384 ஏக்கர் நிலப்பரப்பை அரசு இராணுவத் தேவைக்காகச் சுவீகரிக்கவுள்ளதாகக் கடந்த ஏப்ரல் மாதம் அறிவித்தல் விடுத்திருந்தது.

இந்த நடவடிக்கையை எதிர்த்து அந்தப் பகுதியைச் சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

இவ்வாறானதொரு நிலையில் இந்தப் பகுதியில் உள்ளடங்கும் கத்தோலிக்க திருச்சபைக்குச் சொந்தமான 55 காணித் துண்டுகள் சுவீகரிக்கப்படுகின்றமை தொடர்பில் யாழ்.ஆயர் தோமஸ் சவுந்தரநாயகம் ஆண்டகையினால் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த மனு நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை நீதியரசர் எஸ்.ஸ்ரீஸ்கந்தராசா முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது மனுவைப் பரிசீலித்த நீதியரசர் மேற்படி பிரதேசங்களிலிருந்து காணித் துண்டுகளைக் கையகப்படுத்தியமை தொடர்பிலும், அவற்றை மீளக் கையகளிக்க முடியாமை தொடர்பிலும் அதற்கு ஏதுவாக இருக்கின்ற காரணங்களையும் நீதிமன்றுக்கு விளக்குமாறு பிரதிவாதிகளான காணி மற்றும் காணி அபிவிருத்தி அமைச்சர், நில அளவையாளர், காணி சுவீகரிப்பு அதிகாரி ஆகியோருக்கு உத்தரவு பிறப்பித்தார்.

மேற்படி மனு மீதான விசாரணையை, வலி.வடக்கு தொடர்பான ஏனைய மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் ஓகஸ்ட் 27ஆம் திகதி வரை ஒத்திவைத்தார்.

Related Posts