Ad Widget

காணிகளை விடுவிக்க இராணுவம் ஒத்துழைக்கும் – விஜயகலா

வலிகாமம் வடக்கில் 1,000 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படுவதாக கூறப்பட்ட போதிலும், இதுவரையில் 600 ஏக்கர் காணிகளே விடுவிக்கப்பட்டுள்ளன. எஞ்சிய காணிகளை மறித்து அடைத்துள்ள கம்பி வேலிகளை அகற்றுவதற்கு இராணுவத்தினர் ஒத்துழைப்பு தருவார்கள் என மகளிர் விவகார பிரதி அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்தார்.

வலிகாமம் வடக்கில் அண்மையில் விடுவிக்கப்பட்ட பகுதிகளை திங்கட்கிழமை (29) பார்வையிடச் சென்ற பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், ‘குரும்பசிட்டி மக்கள், தெல்லிப்பளை பகுதிக்கு வருவதற்கு 7 கிலோமீற்றர் தூரம் கூடுதலாக பயணிக்க வேண்டியுள்ளது. வீதியின் குறுக்கே இராணுவத்தினர் அமைந்துள்ள பாதுகாப்பு வேலிகளை அகற்றுவதன் மூலம் மக்களின் பயணம் இலகுவாக்கப்படும். இதற்கு யாழ். மாவட்ட படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் நந்தன உடவத்த இணக்கம் தெரிவித்துள்ளார். தேர்தலுக்கு முன்னர் இதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்’ என்றார்.

‘கடந்த காலங்களில் மக்களின் காணிகளை விடுவிப்பதற்கு அரசியல்வாதிகளும் இராணுவத்தினரும் இடையூறாக இருந்துள்ளனர். மக்களின் காணிகள் மக்களிடம் வழங்கப்படும். இதற்காக இராணுவத்தினரின் கால்களில் விழத்தேவையில்லை.

பலாலி விமான நிலையத்தை கடலுக்குள் விஸ்தரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கு ஐப்பான் நாட்டு அரசாங்கம் உதவி செய்வதாக உறுதியளித்துள்ளது. அவ்வாறு அமைக்கப்பட்டால் வலிகாமம் வடக்கு மக்களின் காணிகளில் இருந்து இராணுவம் வெளியேறும்’ என்று பிரதியமைச்சர் மேலும் கூறினார்.

Related Posts