Ad Widget

காணி­களை வழங்­கு­வ­தாக கூறி பண­மோ­சடி! – கூட்­ட­மைப்பு

tnaயாழ். குடாநாட்டில் வீட்டுத்திட்ட சங்கம் என்ற பெயரில் மக்களுக்கு காணிகளை வழங்குவதாக மோசடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த சிலர் நேற்று சாவகச்சேரி பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில் இவ்வாறான மோசடியாளர்களிடம் மிக அவதானமாக இருக்குமாறு தமிழ்தேசிய கூட்டமைப்பு மக்களை கேட்டுள்ளது.

சாவகச்சேரி – கைதடி பகுதியில் காணிகளை வழங்குவதாக தனியாருக்குச் சொந்தமான காணிகளுக்கான போலி ஆவணங்களை பெற்றிருக்கும் ஒரு கும்பல் மக்களிடம் 16 ஆயிரம் தொடக்கம் 20 ஆயிரம் ரூபா வரையிலான பணத்தை பெற்றிருக்கின்றது. அதனை உன்மையென நம்பிய யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்ட மக்கள் சிலர், மோசடியாளர்கள் கேட்ட பணத்தை செலுத்தியுள்ளனர்.

இந்நிலையில் மேற்படி குழுவினர் கைதடியில் நேற்று காணிகளை வழங்குவதாக கூறி மக்களிடம் பதிவுகளை மேற்கொண்டிருந்த நிலையில் தகவலறிந்த தமிழ்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் குறித்த பகுதிக்கு சென்றுள்ளார்.

சம்பவம் குறித்து அவர் கருத்து தெரிவிக்கையில்,

வீட்டுத்திட்ட சங்கம் என்ற பெயரில் காணி இல்லாத மக்களுக்கு காணிகளை வழங்கப் போவதாக கூறி ஒவ்வொருவரிடமிருந்தும் 16 ஆயிரம் தொடக்கம் 20 ஆயிரம் ரூபா பணத்தை பெற்றிருக்கின்றார்கள். நாம் அங்கே சென்றபோது அவர்கள் 92 பேரின் பெயர்களை பதிவு செய்திருந்தார்கள்.

பதிவு நடவடிக்கையில் ஒருவர் மட்டும் ஈடுபட்டிருந்தார். நாம் அவரிடம் கேட்டோம் காணிகளை மக்களுக்கு வழங்குவதற்கு உங்களுக்கு யார் அனுமதி கொடுத்தது ? மக்களுக்கு வழங்கும் காணிகள் யாருடையவை ? என ஆனால் இந்தக் கேள்விகளுக்கு அவரிடம் சரியான பதில் இல்லை. ஆனால் அங்கு பதிவு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தவர், இருவருக்கு தொலைபேசி அழைப்பை எடுத்தார்.

ஒருவர் கொழும்பில் இருப்பதாகவும் மற்றவர் யாழ்ப்பாணத்தில் இருப்பதாகவும் கூறினார். ஆனால் அவரால் தன்னை சரியாக அடையாளப்படுத்த முடியாத நிலையில் அங்கே பொலிஸார் வரவழைக்கப்பட்டு அவர் கைதுசெய்யப்பட்டு கொண்டு செல்லப்பட்டார்.

இதற்கு முன்னதாக நாம் இந்த விடயம் தொடர்பில் யாழ். மாவட்ட அரசாங்க அதிபருடன் தொடர்பு கொண்டு கேட்டபோது தமக்கு அவ்வாறு எதுவும் தெரியாது. தமக்கும் அவர்களுக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது என கூறினார். பின்னர் தேசிய வீடமைப்பு அதிகாரசபையுடன் தொடர்பு கொண்டபோது அவர்களும் தங்களுக்கு இதில் தொடர்பில்லை என கூறிவிட்டார்கள்.

எனவே மிக மோசடியான முறையில் தமிழ் மக்களை ஏமாற்றுவதற்காக ஒரு கும்பல் குடாநாட்டிற்குள் முகாமிட்டிருக்கின்றது. அங்கே காணி பெற வந்திருந்த பெண் ஒருவர் கூறினார் தன்னிடம் மிச்சமாக இருந்த சில நகைகளை அடகு வைத்தும், விற்றுமே காணிக்கான பணத்தினை அவர்களிடம் வழங்கியதாக.

இவ்வாறு பல மக்கள் தங்கள் இயலாமைக்கும் மத்தியல் ஏமாற்றப்பட்டுள்ளார்கள். ஏமாற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். ஏற்கனவே யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு ஏதிலிகளாக வாழ்ந்து கொண்டிருக்கும் மக்களை ஏமாற்றும் இத்தகைய மோசடி பேர்வழிகளை நாம் அடையாளம் காணவேண்டும்.

மக்கள் இவர்கள் விடயத்தில் மிக விழிப்பாக இருக்கவேண்டும். மேலும் தமிழ்தேசிய கூட்டமைப்பு இத்தகைய மோசடி பேர்வழிகளை கட்டுப்படுத்துவது மற்றும் சட்டத்தின் முன் நிறுத்துவது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுப்பதற்காக சம்மந்தப்பட்ட அதிகாரிகளுடன் பேசும் எனவும் அவர் தெரிவித்தார்.

Related Posts