Ad Widget

காணாமல் போன மீனவரை மீட்டுத் தருமாறு கோரி ஆர்ப்பாட்டம்

திருகோணமலை – புல்மோட்டை பிரதான வீதியை மறித்து ஆறாம் கட்டை எனும் இடத்தில் பொதுமக்கள் மற்றும் மீனவர் சங்கங்கள் இணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இன்று 26.08.2015 காலை 8.30 மணியளவில் ஆரம்பமான இந்த வீதி மறியல் போராட்டமானது 11 மணிவரை இடம்பெற்றது.

திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலகத்திற்குட்பட்ட சல்லி கிராமத்தில் இருந்து கடற்தொழிலுக்காக கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று 23 -08-2015 இரவு கடலுக்கு மீன் பிடிக்க சென்ற அழகுராசா தங்கரூபன் (வயது-25 ) எனும் இளைஞன் இன்று வரை வீடு திரும்பவில்லை அவர் கடலுக்கு சென்ற படகு மற்றும் அவர் அணிந்திருந்த உடைகள் சில மற்றும் உடைக்கப்பட்ட தொலைபேசி மற்றும் சிம்காட் என்பவற்றை பொலிசார் மற்றும் கிராமத்து மக்கள் கடலில் அவர் சென்ற படகில் இருந்து கண்டெடுத்தள்ளனர்.

கடந்த 23 ம் திகதி கடலுக்கு சென்றவர் திங்கட்கிழம அதிகாலை 02 மணியளவில் தனக்கு சுருக்கு வலை தொழில் செய்பவர்களால் ஆபத்து என்னை அடித்து கொள்ள போகிறார்கள் உடனடியாக வந்து காப்பாற்றுமாறு தனது நண்பர்களுக்கு தொலைபேசி மூலம் குருஞ் செய்தி அனுப்பியுள்ளார். அதன் பின் அவருடைய தொடர்பு ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.

இந்த சம்பவம் தொடர்பாக பொலிஸார் தகுந்த நடவடிக்கை எடுக்கவில்லை என கண்டித்தும் உடனடியாக தடை செய்யப்பட்ட சுருக்கு வலை மற்றும் டைனமட் தொழிலை தடை செய்யுமாறு கோரியும் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சம்பவ இடத்திற்கு வருகை தந்த உதவி பொலிஸ் அத்தியச்சகர் சிறி லால்பெரேரா மற்றும் பொனான்டோ ஆகியோர் வருகை தந்து சம்பவம் தொடர்பாக பொலிசார் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் தொடர்பாக விபரித்தனர்.

அதாவது காணாமல் போனவருக்கு என்ன நேர்ந்துள்ளது என்பது தொடர்பாக தாம் ஆராய்ந்து வருகின்றோம். குறுஞ்செய்தி மற்றும் தகவல்களின் அடிப்படையில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்விடயம் தொடர்பாக நீதிமன்ற அனுமதியுடன் தாம் விசாரணையை மேற்கொள்ளவுள்ளோம். அத்துடன் விசேட விசாரணைக்காக கொழும்பில் இருந்து அதிகாரிகள் வருகை தந்து கொண்டுள்ளனர். எனவே சட்டத்தின் அடிப்படையில் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் எனவே பொது மக்களுக்கு இடையூறு விளைவிக்காதவாறு போக்குவரத்துக்கு இடமளித்து இவ் ஆர்ப்பாட்டத்தை வீதியை மறிக்காது மேற் கொள்ளுமாறு பொலிஸார் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்தனர். அதனையடுத்து ஆர்ப்பாட்டக்காரர்கள் கலைந்து சென்றனர்.

Related Posts