Ad Widget

காணாமல் போனோர் விடயத்தில் அரசியல் இலாபம் தேட வேண்டாம்: பசில்

pasil-rajapakshaகாணாமல் போனவர்கள் விடயத்தை அரசியலாக்கி இலாபம் தேடும் முயற்சியில் எவரும் ஈடுபடக்கூடாது’ என பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ, நேற்று யாழ்ப்பாணம் கிறீன் கிறாஸ் விருந்தினர் விடுதியில் ஊடகவியலாளர்களை சந்தித்து கலந்துரையாடினார். இதன்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

‘காணாமல் போனவர்களின் பிரச்சினையென்பது வடக்கிற்கு மட்டுமானதல்ல, தென்னிலங்கையிலும் இராணுவத்தினருடைய பெற்றோர்கள் தமது பிள்ளைகள் சம்பந்தமாக கேட்கின்றார்கள்.

காணாமல் போனவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதலைக் கொடுக்க வேண்டுமென, தமிழ் ஊடகங்களிடமும் தமிழ் தேசியக் கூட்டமைப்பிடமும் நான் கேட்டுக் கொள்கின்றேன்.

கொழும்பில் காணப்படும் ஊடகக் கலாசாரம் போன்று யாழ்ப்பாணத்திலும் காணப்படுகின்றமை பெரும் மகிழ்சியைத் தருகின்றது. இவ்வாறானதொரு ஊடக நிலையினை ஏனைய மாவட்டங்களிலும் ஏற்படுத்த அரசு எடுத்த முயற்சிகள் கூட வெற்றிபெறவில்லை.

ஜனாதிபதியின் அறிவுறுத்தலுக்கமைய வட மாகாணசபைத் தேர்தல் நடைபெறுகின்றது. தேர்தலினை நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டியது வடக்கில் வாழும் தமிழ் மக்களுடைய பொறுப்பு ஆகும்.

கடந்த காலத்தில் 56 வீதமான அபிவிருத்திப் பணிகள் மேல் மாகாணத்தை மையப்படுத்தியே இடம் பெற்றது. மிகுதி 44 வீதமான செயல்பாடுகளே ஏனைய மாகாணங்களில் இடம் பெற்றன.

ஆனால் ஜனாதிபதியைப் பொறுத்தவரையில் அனைத்து மாகாணங்களையும் சமமாக அபிவிருத்தி செய்ய வேண்டுமென்று எதுவித பேதமின்றி அனைத்து மாகாணங்களையும் அபிவிருத்திப் பாதையில் இட்டுச்சென்றுள்ளார்.

முதன்முறையாக வடக்கில் தமிழ் மக்களுடைய பிரதிநிதிகளைக் கொண்ட வட மாகாணசபை எதிர்வரும் 22ஆம் திகதி உருவாகப் போகின்றது’ என்று அவர் தெரிவித்தார்.

Related Posts