Ad Widget

காணாமல் போனோர் தொடர்பில் 19,000 முறைப்பாடுகள் பதிவு

missing-people-president30 வருட கால யுத்தத்தினால் காணாமல் போனோர் தொடர்பில் இதுவரையில் 19,000 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட காணாமல் போனோர் பற்றிய விசாரணை ஆணைக்குழுவின் தலைவர் ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி மக்ஸ்வெல் பராக்கிரம பரணகம தெரிவித்தார்.

கடந்த 5, 6, 7, 8ஆம் திகதிகளில் முல்லைத்தீவில் நடத்தப்பட்ட விசாரணையின் போது 387 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றன. அவற்றில் 129பேரிடம் நேரடியாக விசாரணை மேற்கொண்டுள்ளோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

2013ஆம் ஆண்டு 15ஆம் திகதி எமது ஆணைக்குழு இயங்கத் தொடங்கியது. ஆன்று தொடக்கம் இன்றுவரை அதில் தமிழர் தரப்பிலிருந்து 12,590 முறைப்பாடுகளும் முஸ்லிம்கள் தரப்பிலிருந்து ஆயிரத்துக்கு உட்பட்ட முறைப்பாடுகளும் இராணுவ தரப்பிலிருந்து 5 ஆயிரம் முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளன.

இதுவரை வடக்கு, கிழக்கின் திருகோணமலை, அம்பாறை, மன்னார், யாழ்ப்பாணம் போன்ற மாவட்டங்களுக்கு நேரடியாக விசாரணைகளுக்குச் சென்றால் மேலும் முறைப்பாடுகள் கிடைக்கப்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது என்றும் அவர் குறிப்பிட்டார்.

சட்ட திணைக்களத்தின் பிரதி சட்ட அலுவலகர் திருமதி மனோகரி ராமநாதன், இந்த ஆணைக்குழுவின் ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ளார். எங்களால் பதியப்பட்ட சகல விசாரணைகளையும் சட்ட திணைக்களத்திடம் கையளிக்கப்படும்.

ஜனாதிபதியினால் ஏற்படுத்தப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் (எல்.எல்.ஆர்.சி) ஓர் அங்கமாகவே இந்த காணாமல் போனோர் முறைப்பாட்டு ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளது என்றும் பரணகம மேலும் தெரிவித்தார்.

Related Posts