Ad Widget

காணாமல் போனோர் அலுவலகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கிளிநொச்சியில் ஆர்ப்பாட்டம்!

காணாமல் போனோர் அலுவலகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து காணாமல் ஆக்கப்பட்டவர்களது உறவுகள் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

காணாமல் போனோர் அலுவலகத்தின் மக்கள் கருத்தறியும் அமர்வு நேற்று கிளிநொச்சி கூட்டுறவு மண்டபத்தில் நடைபெறவுள்ள நிலையிலேயே இந்த அமர்விற்கு எதிர்ப்புத் தெரிவித்து குறித்த ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த கருத்தறியும் அமர்விற்கு வருகைதந்த காணாமல் போனோர் அலுவலக பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களை சந்தித்து கலந்துரையாடியதுடன் குறித்த அமர்வில் பங்கேற்குமாறும் அழைத்துள்ளனர்.

இறுதி யுத்தத்தின் போது இராணுவத்திடம் கையளித்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் மற்றும் சரணடைந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் குறித்த தகவல்களை வெளிப்படுத்துமாறு கோரி கடந்த வருடம் கிளிநொச்சி கந்தசாமி ஆலய முன்றலில் ஆரம்பித்த போராட்டம் இன்று 511 ஆவது நாளாகவும் இடம்பெற்று வருகிறது.

இந்நிலையில் பல தடவைகள் தம்மை சந்தித்த ஜனாதிபதியே எமக்கான தீர்வினை தராத நிலையில் இந்த அலுவலகமானது சர்வதேசத்தை ஏமாற்றும் ஒரு நடவடிக்கையே எனத் தெரிவித்து மக்கள் போராடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Posts