Ad Widget

காணாமல் போனோருக்கான ஆணைக்குழு அடுத்த வாரம் வடக்கில்

வடக்கில் காணாமல் போனோர் தொடர்பான முறைப்பாடுகளை பெற்றுக் கொள்ளும் நடவடிக்கைகளை இம் மாத இறுதியில் நிறைவு செய்ய முடியும் என, காணாமல் போனோர் தொடர்பில் முறைப்பாடுகளைப் பதிவு செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அடுத்த வாரம் வடக்கின் சில பகுதிகளில், முறைப்பாடுகளைப் பதிவு செய்வதற்கான அமர்வுகள் இடம்பெறவுள்ளதாக, ஆணைக்குழுவின் தலைவர் மெக்ஸ்வெல் பரணகம சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன்படி எதிர்வரும் 25, 26 மற்றும் 27ம் திகதிகளில் முல்லைத்தீவு பிரதேச செயலகத்தில் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

28ம் திகதி மன்னாரிலும் 29ம் திகதி வவுனியாவிலும் காணாமல் போனோர் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழு தனது அமர்வுகளை மேற்கொள்ளவுள்ளது.

அத்துடன், வட மாகாணத்தில் முறைப்பாடுகளைப் பெற்றுக் கொள்ளும் நடவடிக்கைகள் பெருமளவு நிறைவடைந்துள்ளதாகவும் மெக்ஸ்வெல் பரணகம தெரிவித்துள்ளார்.

தற்போது வரை 6,000ம் வரையான முறைப்பாடுகள் விசாரிக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் அதிகளவான முறைப்பாடுகள் ஆணைக்குழுவுக்கு கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, குறித்த ஆணைக்குழுவின் கால எல்லை எதிர்வரும் ஜூன் மாதத்துடன் நிறைவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts