Ad Widget

காணாமல் போனோரின் உறவினர்களுக்கு ஆதரவளிப்பேன் – பிஸ்வால்

nishaகாணாமல் போனோர் தொடர்பான விசாரணைகளை உரிய முறையில் மேற்கொள்ளுமாறு இலங்கை அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கவுள்ள அதேவேளை, காணாமல் போனோரின் உறவினர்களுக்கு ஆதரவு வழங்கவுள்ளதாக தெற்கு மற்றும் மத்திய ஆசிய பிராந்திய விவகாரங்களுக்கான அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் உதவிச் செயலாளர் நிஷா தேசாய் பிஸ்வால் உறுதியளித்ததாக வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்தார்.

நிஷா தேசாய் பிஸ்வாலும் அனந்தி சசிதரனும் யாழ். கிறின் கிறாஸ் விருந்தினர் விடுதியில் நேற்று சனிக்கிழமை சந்தித்து கலந்துரையாடினர். இதன்போதே நிஷா தேசாய் பிஸ்வால் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இந்தச் சந்திப்பு தொடர்பில் அனந்தி சசிதரன் மேலும் தெரிவிக்கையில்,

‘2009ஆம் ஆண்டு இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தின்போது காணாமல் போனோர்கள் மற்றும் கடத்தப்பட்டவர்கள், இராணுவத்தினரிடம் சரணடைந்தோர், அரசியல் கைதிகளின் விடுதலை, வடபகுதி மக்களின் மனித உரிமை மீறல்கள் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் நிஷா தேசாய் பிஸ்வாலிடம் நான் எடுத்துக்கூறினேன்.

உலக அரங்கில் எமக்குச் சாதகமான சூழல் உள்ளது. அதை நாங்கள் சரியாக பயன்படுத்த வேண்டும். இந்த நேரம் சரியான நேரமென நம்புகிறேன். நிஷா தேசாய் பிஸ்வாலின் வருகையால் 60 சதவீதமான நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

யுத்தம் முடிவடைந்த பின்னரும் கூட, காணாமல் போனோர்கள் மற்றும் சரணடைந்தவர்களின் விபரங்களை வெளியிடாமலும் அரசியல் கைதிகளை விடுதலை செய்யாமலும் நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டுமென்று அரசாங்கம் கூறுகின்றது. நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டுமாயின் காணாமல் போனோர்கள் மற்றும் சரணடைந்தவர்கள் தொடர்பில் கவனம் செலுத்துவதுடன், அரசியல் கைதிகளை விடுதலை செய்து நல்லிணக்கத்தை காட்ட வேண்டும்.

நடுக்கடலில் தத்தளிக்கும் எமக்கு சிறு துரும்பு கிடைத்தாலும் அதைக்கொண்டு கரைக்கு வர முயற்சிப்போம். இந்த நிலையில் தான் சர்வதேசத்தை நம்பியுள்ளோம். ஜெனீவா மாநாட்டின் மூலம் சர்வதேசத்திலிருந்து நல்ல பதில் கிடைக்குமென்று நம்புகிறோம்’ என்றார்.

Related Posts