Ad Widget

காணாமல் போனவர்களைக் கண்டறியும் ஆணைக்குழு இடைக்கால அறிக்கையை வெளியிட வேண்டும் – த.தே.கூ

காணாமல் போனவர்களை கண்டறியும் ஆணைக்குழு மேலும் 6 மாதங்களுக்கு கால நீடிப்புச் செய்யப்பட்டுள்ள நிலையில் கடந்த விசாரணைகள் குறித்த இடைக்கால அறிக்கை ஒன்றினை மிகவிரைவில் வெளியிட வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

suresh

காணாமல் போனவர்கள் தொடர்பில் பதிலளிக்க வேண்டும் என்றும், அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும் என்றும் இராணுவம் வெளியேற வேண்டும், மீள்குடியேற்றம் செய்யப்பட வேண்டும், ஐ.நா விசாரணை அறிக்கை வெளியிடப்பட வேண்டும், உள்ளக விசாரணை வேண்டாம் சர்வதேச விசாரணையை கோருகின்றோம் என வலியுறுத்தி யாழ். நகரில் கவனயீர்ப்புப் போராட்டம் இன்று நடைபெற்றது.

அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ்பிரேமச்சந்திரன் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த காலத்தில் இடம்பெற்ற யுத்தத்தில் பல்லாயிரக் கணக்கானவர்கள் பல்வேறு வடிவங்களில் காணாமல் போயுள்ளனர்.

காணாமல் போனவர்களைக் கண்டறியும் ஆணைக்குழு ஒன்று கடந்த அரசினால் உருவாக்கப்பட்டது. குறித்த குழுவிற்கு 20 ஆயிரத்துக்கு மேற்பட்ட மனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. அத்துடன் இன்னும் ஆயிரக் கணக்கானவர்கள் மனுக்கள் சமர்ப்பிக்காமல் இருக்கலாம்.

ஆகவே காணாமல் போனவர்கள் என்ற விடயம் வடக்கு கிழக்கில் பாரிய கவலைக்குரிய விடயமாகவுள்ளது.

இந்தநிலையில் புதிய அரசு உருவாக்கப்பட்டு காணாமல் போனவர்களைக் கண்டறியும் ஆணைக்குழுவின் குழுவின் கால எல்லை 6 மாதத்திற்கு நீடிப்பு செய்யப்பட்டுள்ளது.

அந்த 6 மாதத்திற்குள் முழுமையான விசாரணை ஒன்றை செய்ய வேண்டும் என கேட்கப்பட்டுள்ளது. எனினும் கடந்த 2 வருட காலமும் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் முன்னேற்றம் என்ன ? , மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை என்ன? விசாரணை நடைபெற்றதா? , விசாரணை மூலம் யாரையாவது கண்டுபிடிக்கப்பட்டதா? போன்ற கேள்விகள் எழுந்துள்ளன.

எனவே காணாமல் போனவர்களைக் கண்டறியும் ஆணைக்குழு ஒரு இடைக்கால அறிக்கையினை சமர்ப்பிப்பதன் ஊடாக முன்னேற்றம் இருக்கின்றதா இல்லையா என்பதனை பொதுமக்கள் அறியக் கூடியதாக இருக்கும்.

இலங்கையில் பல்வேறுபட்ட இரகசிய முகாம்கள் இருப்பதாக அறிகின்றோம். யாருக்கும் தெரியாது அது அம்பாந்தோட்டை, திருகோணமலை , மட்டக்களப்பு என உள்ளது. எனவே எங்கே அவை இருக்கின்றது என விசாரணைகள் மேற்கொள்ள வேண்டும்.

இது குறித்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் பேச்சுவார்த்தைகளையும் நடாத்தியுள்ளோம். விசாரணை மேற்கொண்டு குறித்த முகாம்கள் தொடர்பில் தெரிவித்துள்ளார். எனினும் காணாமல் போனவர்களின் உறவினர்கள் இன்னும் தமது உறவுகள் உயிருடன் இருப்பதாக நம்புகின்றனர்.

எனவே அவர்களுக்கு முடிவுகளை கூறவேண்டிய பொறுப்பு புதிய அரசுக்கு இருக்கிறது. ஜனநாயம், வெளிப்படைத்தன்மை , புதிய ஆட்சி என கூறுனின்ற இந்த அரசு முழுமையான விசாரணைகளை மேற்கொண்டு தமிழ் மக்களுக்கு பதில் கொடுக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related Posts