Ad Widget

காணாமல் போனவர்களுக்கு அரசாங்கமே பொறுப்பு! : உச்ச நீதிமன்றம்

மட்டக்களப்பில் கடந்த 2007ஆம் ஆண்டு இரு தமிழ் இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவத்திற்கு அரசாங்கமே பொறுப்புக்கூற வேண்டுமென உச்ச நீதமன்றம் நேற்று (திங்கட்கிழமை) தீர்ப்பளித்துள்ளது.

அத்தோடு, பாதிக்கப்பட்ட தரப்பிற்கு அரசாங்கம் தலா பத்து இலட்சம் ரூபாவை நட்டஈடாக வழங்க வேண்டும் எனவும் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2007ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 3ஆம் திகதி மட்டக்களப்பு பொலிஸாரால் கைதுசெய்யப்பட்ட இரு தமிழ் இளைஞர்கள் இதுவரை வீடு திரும்பாத நிலையில், அவர்கள் விடுவிக்கப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இந்நிலையில், குறித்த இளைஞர்களின் உறவினர்கள் உச்ச நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுவொன்றை தாக்கல் செய்திருந்தனர்.

குறித்த மனு மீதான விசாரணை, பிரதம நீதியரசர் பிரியசாத் டெப் உள்ளிட்ட மூன்று நீதியரசர்கள் கொண்ட குழுவின் முன்னால் நேற்று நடைபெற்றதோடு, குறித்த இளைஞர்கள் விடயத்தில் அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாகவும் நீதியரசர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்நிலையில், இவ் இளைஞர்கள் கைது செய்யப்பட்ட சந்தர்ப்பத்தில் மட்டக்களப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக இருந்த பீ.எஸ்.விக்ரமரத்னவை அவரது சொந்த நிதியில் இருந்து மனுதாரர்களுக்கு ஐம்பதாயிரம் ரூபாவை இழப்பீடாக வழங்க வேண்டும் எனவும் நீதியரசர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

Related Posts