Ad Widget

காணாமல் போனதாக கூறப்படும் அனைவரும் விடுதலைப் புலிகள்! – கோத்தபாய

காணாமல் போனதாக கூறப்படும் அனைவரும் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் போராளிகளேயாவர். ஆகவே அவர்கள் அப்போதைய போர்க்களத்திலேயே இறந்து விட்டனர் என்று முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்தார்.

யுத்தத்தின் பின்னர் எவரும் காணாமல் போகவில்லை. வடக்கில் தமது உறவுகளுக்கு என்ன நடந்தது என்பது குறித்து ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் தெரியும். விடுதலைப் புலிகளின் ஆயுத போராட்டத்தில் தமது உறவினர் இணைந்து கொண்டனர் என்பதும் அவர்களுக்கு தெரியும். எனவும் அவர் குறிப்பிட்டார்.

எம்மை வைத்து புதிய அத்தியாயம் ஒன்றை உருவாக்க இந்த அரசாங்கமும், சர்வதேச தரப்பும் முயற்சிக்கின்றது. பொய்யான கதைகள், காரணம் இல்லாத குற்றச்சாட்டுகள், ஆதாரம் இல்லாத உண்மைகளை வைத்து சர்வதேச பிரதிநிதித்துவம் பொய்யான வரலாற்றை எழுதப் பார்க்கின்றது என்றும் அவர் குறிப்பிட்டார்.

காணாமல் போனோர் மற்றும் இராணுவத்தினால் கடத்தப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் உண்மை நிலை குறித்து கருத்து கூறிய போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

இந்த காலகட்டத்தில் நான் மிகுந்த வேலைப்பழுவிற்கு மத்தியில் செயற்பட்டு வருகின்றேன். நிதி மோசடி விசாரணை பிரிவினர் இப்போதெல்லாம் என்னை அதிகமாக எதிர்ப்பார்க்கின்றனர். செய்யாத குற்றங்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். எனினும் நான் சட்டத்தையும் அரசாங்கத்தையும் மதித்தது அவர்களின் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்கி வருகின்றேன்.

எனினும் அரசியலில் காலடி எடுத்து வைப்பது தொடர்பில் நான் இன்னும் முடிவுகளை எடுக்கவில்லை. நான் இன்னும் இராணுவ அதிகாரி என்ற நிலைப்பாட்டில் தான் இருந்து வருகின்றேன். யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்து இந்த நாட்டை மீட்டெடுப்பதில் அதிக காலத்தை செலவழித்தேன்.

அதேபோல் யுத்தத்தின் பின்னரும் பாதுகாப்பு செயலாளராக என்னை தயார்ப்படுத்தி நாட்டின் அபிவிருத்தி மற்றும் நாட்டின் பாதுகாப்பு விடயங்களில் அதிக அக்கறையுடன் செயற்பட்டேன். எனினும் அந்த வேளையிலும் சரி அல்லது இப்போதும் சரி நான் அரசியலில் என்னை இணைத்துக்கொள்ள விரும்பவில்லை.

நான் அரசியல் பின்புலம் உள்ள குடும்பத்தில் இருந்து வந்தவன். எனது தந்தை, சகோதரர்கள் என அனைவரும் அரசியல் கலாசாரம் தெரிந்தவர்கள். ஆனால் எனக்கு அந்த கலாசாரம் தெரியவில்லை. இனியும் அதைப்பற்றிய சிந்தனை எனக்கு இன்னும் வரவில்லை.

கேள்வி:- நல்லாட்சி அரசாங்கம் தொடர்பில் உங்களின் கருத்து என்ன?

பதில்:- இந்த நல்லாட்சி அரசாங்கம் தொடர்பில் என்னிடம் நல்ல அபிப்பிராயம் எதுவும் இல்லை. இந்த அரசாங்கம் அமைந்தவுடன் ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேன மக்களுக்கு பல வாக்குறுதிகளை கொடுத்தார்.
ஆனால் அவர் கொடுத்த வாக்குறுதிகளை இன்றுவரையில் அவரால் நிறைவேற்ற முடியவில்லை என்பது தெளிவாக தெரிகின்றது.

அதேபோல் இப்போது அமைந்துள்ள அரசாங்கம் ஒரு கொள்கை உள்ள ஒரு அரசியல் கட்சியின் நிலைப்பாட்டில் இல்லை. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து வெளியேறியவர்கள் பொதுவாக ஒரு கூட்டணியை அமைத்து அதில் இணைந்து கட்சிகளையும் உள்ளடக்கி இறுதியில் தெளிவான ஒரு கொள்கை இல்லாத அரசாங்கத்தை உருவாக்கியுள்ளனர். இதில் நாட்டுக்கோ அல்லது மக்களுக்கோ எந்த பயனும் இல்லை.

கேள்வி :- அரசாங்கத்தின் பாதை ஜனநாயம் சார்ந்ததாக இல்லை என்பது உங்களின் கருத்தா?

பதில்:- மஹிந்த ராஜபக்ச செய்யாத விடயங்களை இந்த நல்லாட்சி அரசாங்கம் செய்து காட்டும் என்று சவால் விடுத்தார்கள். ஆனால் நாம் செய்யாத எதை இந்த அரசாங்கம் செய்துள்ளது என்று எமக்குத் தெரியவில்லை. ஆனால் ஒன்று மட்டும் நன்றாகத் தெரிகின்றது.

நாம் கட்டிக்காத்த நாட்டை மீண்டும் புலிகளின் கைகளில் ஒப்படைக்கும் ஒரு வேலைத்திட்டத்தை மட்டும் இந்த அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது. இந்த அரசாங்கத்தின் ஆட்சியில் புலிகளின் கரங்களே பலமடைந்துள்ளது.

கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது வடக்கு மாகாணம் மஹிந்த ராஜபக்சவுக்கு எதிராக முழுமையாக தமது வாக்குகளை வழங்கியது. இந்த செயற்பாடும் மஹிந்தவை முழுமையாக நிராகரித்து புலிகளின் கரங்களை பலப்படுத்தும் ஒரு செயற்பாடாகவே அமைந்தது.

பிரபாகரன் கொல்லப்பட்ட போதும் மீண்டும் பிரபாகரனை உருவாக்கும் முயற்சிகள் இன்றும் வடமாகாணத்தில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

கேள்வி :- தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிரிவினைவாத போக்கில் செயற்படுவதாக தெரியவில்லையே?

பதில்:- இன்று நல்லாட்சி ஜனநாயகம் பற்றிய கதைகளை கூறினாலும் அவர்களின் பயணம் புலிகளின் பயணமாகவே அமையும். நாட்டை துண்டாடி அதன் மூலமாக தமிழீழத்தை உருவாக்கும் ஒரு செயற்பாடு மட்டுமே இதில் உள்ளது. அவர்களின் பாதையை மாற்றியமைக்க முடியாது.

அதேபோல் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஒருபோதும் அவர்களின் கொள்கையையோ பிரிவினைவாத பயணத்தையோ மாற்றிக்கொள்ளப் போவதில்லை. அவர்கள் இன்றும் சர்வதேச விசாரணைகள், புலிகளை நாட்டினுள் மீண்டும் தலைதூக்க வைப்பது என்ற செயற்பாடுகளில் தான் அதிக அக்கறைகாட்டி வருகின்றனர்.

கேள்வி :- காணாமல்போனோர் மற்றும் கடத்தப்பட்டோர் தொடர்பில் முன்னைய அரசாங்கத்தின் மீதும் பாதுகாப்பு படையினர் மீதும் பலமான விமர்சனம் முன்வைக்கப்பட்டு வருகின்றது. இது தொடர்பில் உங்களின் நிலைப்பாடு என்ன?

பதில்:- இன்று காணாமல் போனோர் மற்றும் கடத்தப்பட்டோர் என்ற கதைகளை கூறிக் கொண்டுள்ளனர். ஆனால் யுத்தத்தின் பின்னர் எவரும் காணாமல் போகவில்லை என்பது அனைவருக்கும் தெரியும். வடக்கில் ஒவ்வொரு பெற்றோருக்கும் தெரியும் தமது பிள்ளைகளுக்கு என்ன நடந்தது என்பது. ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் தெரியும் தமது உறவுகளுக்கு என்ன நடந்தது என்பது.

விடுதலைப் புலிகளின் ஆயுத போராட்டத்தில் தமது உறவுகள் இணைந்து கொண்டனர் என்பதும் அவர்களுக்கு தெரியும். ஆனாலும் இதனை அவர்கள் நன்றாக தெரிந்து கொண்டும் இன்றும் தமது உறவுகள் காணாமல் போனதாக கூறிகொண்டுள்ளனர். காணாமல் போனதாக கூறப்படும் அனைவரும் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் போராளிகளேயாவர்.

ஆகவே அவர்கள் அப்போதைய போர்க்களத்திலேயே இறந்து விட்டனர். யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட போது எவரையும் கைது செய்யவோ கடத்தவோ அல்லது வதை முகாம்களில் அடைத்து வைக்கவோ இல்லை என்பதே உண்மையாகும்.

மொத்தமாக அகதியானவர்களின் எண்ணிக்களை மற்றும் வெளிநாடுகளில் இன்றும் வாழ்ந்து வரும் தமிழர்களின் எண்ணிக்கையை இவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். காணாமல் போனதாக கூறப்படும் பலர் இன்று சர்வதேச மட்டத்தில் புலிகளின் ஆதரவாளர்களாக செயற்பட்டு வருகின்றனர்.

எம்மை வைத்து புதிய அத்தியாயம் ஒன்றை உருவாக்க இந்த அரசாங்கமும், சர்வதேச தரப்பும் முயற்சிக்கின்றது.

பொய்யான கதைகள், காரணம் இல்லாத குற்றச்சாட்டுகள், ஆதாரம் இல்லாத உண்மைகளை வைத்து ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையகமும் சர்வதேச பிரதிநிதித்துவமும் பொய்யான வரலாற்றை எழுதப் பார்க்கின்றனர்.

இன்று இலங்கையில் நடக்கும் சம்பவங்களும் அவ்வாறே அமைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

Related Posts