Ad Widget

காணாமல் போகச் செய்யப்பட்டோர் தொடர்பான வழக்கு விசாரணைக்கு 4 குழுக்கள்! இராணுவத்தை விசாரிக்கத் தனிக் குழுவாம்!

காணாமல் போகச் செய்யப்பட்டோர் தொடர்பில் விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு கிடைக்கப்பெற்றுள்ள முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து நீதிமன்றில் வழக்குகளைத் தாக்கல் செய்வதற்காக நான்கு விசாரணைக் குழுக்கள் அமைக்கப்படவுள்ளன.

இந்தத் தகவலை உறுதிப்படுத்திய ஆணைக்குழுவின் தலைவர் மெக்ஸ்வெல் பரணகம், இதற்கான அனுமதியை ஜனாதிபதி வழங்கியுள்ளார் எனவும், இதன் பிரகாரம் உறுப்பினர்களை தெரிவுசெய்யும் பணி விரைவில் ஆரம்பமாகும் எனவும் தெரிவித்தார்.

இதேவேளை, காணாமல் போகச் செய்யப்பட்டோர் விவகாரம் சம்பந்தமாக படையினருக்கு எதிராக 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இது பற்றியும் விசாரிக்க தனிக் குழு அமைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

எனினும், இது பற்றி இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. மேற்படி விவகாரம் தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழுவும் அதற்கு ஆலோசனை வழங்குவதற்கு நியமிக்கப்பட்டுள்ள சர்வதேச நிபுணர்கள் குழுவும் தீவிரமாக ஆராய்ந்து வருவதாக அறியமுடிகிறது.

1983 ஆம் ஆண்டு முதல் போர் முடிவடையும்வரை வடக்கு, கிழக்கில் காணாமல் போகச் செய்யப்பட்டோர் சம்பந்தமாக விசாரணைகளை நடத்துவதற்கு மஹிந்த ஆட்சியின்போது மூவரடங்கிய ஜனாதிபதி ஆணைக்குழுவொன்று அமைக்கப்பட்டது.

இதன் தலைவராக மெக்ஸ்வெல் பரணகம நியமிக்கப்பட்டார். காலப்போக்கில் மனித உரிமை மீறல்கள் சம்பந்தமாகவும் விசாரணை நடத்தும் வகையில் இந்த ஆணைக்குழுவின் விடயப்பரப்பை அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ விஸ்தரித்து, அதற்கு ஆலோசனை வழங்குவதற்கு சர்வதேச நிபுணர்கள் குழுவொன்றையும் அமைத்திருந்தார்.

ஆட்சி மாற்றத்தின் பின்பும் இந்த குழுவின் பணியை தொடர்வதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஒப்புதல் வழங்கியதுடன், அதன் ஆயுட்காலத்தையும் நீடித்தார். இந்நிலையில், காணாமல் போகச் செய்யப்பட்டோர் சம்பந்தமாக முறைப்பாடுகளைத் திரட்டிவந்த ஜனாதிபதி ஆணைக்குழு தனது இடைக்கால விசாரணை அறிக்கையை அண்மையில் ஜனாதிபதியிடம் கையளித்தது.

இதில் ஆணைக்குழுவின் செயற்பாடுகள் பற்றி விவரிக்கப்பட்டிருந்தது. இவ்வாறு ஆணைக்குழுவால் திரட்டப்பட்ட முறைப்பாடுகளின் நம்பகத்தன்மை பற்றி ஆராய்ந்து – அது பற்றி முழுமையாக விசாரணை நடத்தி நீதிமன்றில் வழக்குதாக்கல் செய்யும் வகையிலேயே நான்கு விசாரணைக்குழுக்கள் விரைவில் நியமிக்கப்படவுள்ளன.

Related Posts