Ad Widget

காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளரின் தாய் மரணம்!

யாழ்ப்பாணம் – துன்னாலையில் இராணுவத்தினரால் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர் ஒருவரின் தாய் மரணித்துள்ளார்.

காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர் இராமச்சந்திரனின் தாயார் சுப்பிரமணியம் அம்பிகையே (83 -வயது) நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மரணித்துள்ளார்.

இராமச்சந்திரனின் தந்தையார் சுப்பிரமணியம் மரணித்து ஒரு மாதமே ஆன நிலையில் தற்போது தாயாரும் காலமாகியுள்ளார்.

தமிழர் தாயகப் பகுதிகளான வடக்கு கிழக்கில் இறுதிக்கட்ட யுத்தத்திற்கு முன்னரும் யுத்தத்தின் போதும் அதற்கு பின்னரும் இராணுவத்தினரால் கடத்தப்பட்டு பலர் காணாமல் ஆக்கப்பட்டிருந்தனர்.

காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளை மீட்டுத் தருமாறு வலியுறுத்தி தமிழர் தாயகப்பகுதியெங்கும் தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

2007ம் ஆண்டின் பெப்ரவரி மாதத்தில் வடமராட்சியின் துன்னாலை கலிகை சந்தி இலங்கை இராணுவ படைமுகாமில் வைத்து இராமச்சந்திரன் காணாமல் ஆக்கப்பட்டிருந்தார்.

யாழ்.தினக்குரல், வலம்புரி நாளிதழ்களது பிரதேச செய்தியாளராக பணியாற்றிக்கொண்டிருந்த இராமச்சந்திரன் தொடர்பில் இதுவரை தகவல்கள் ஏதும் கிடைக்கப்பெறவில்லை.

தடுத்து வைக்கப்பட்டிருந்த சூழலில் ஒரிரு நாட்கள் அவரது தொலைபேசி செயற்பட்டுக்கொண்டிருந்ததாகவும் விசாரணையொன்றிற்காக தடுத்து வைக்கப்பட்டிருந்ததாகவும் பெற்றோர் முன்னர் கூறியதாக தெரிவிக்கப்படுகிறது.

தமது இறுதிக் காலங்களில், மரணம் சம்பவிக்கும் வரையில், காணாமல்ஆக்கப்பட்ட தமது மகனான ஊடகவியலாளர் இராமச்சந்திரனை தேடிக்கண்டறிவதிலும் அவருக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றும் அவரது தாயும் தந்தையும் விடாமுயற்சியுடன் போராடி வந்திருந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts