Ad Widget

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் போராட்டத்தை ஆதரிப்போம் – மாவை

தமிழர் தாயகத்தில் காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகள் வரும் 30ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை முன்னெடுக்கும் நீதிப் போராட்டத்தை ஆதரிப்போம் என்று இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

எதிர்வரும் 30ஆம் திகதி சர்வதேச அளவில் காணாமல் ஆக்கப்பட்டோர் நீதி கோரும் நாளாகும்.

இலங்கையிலும் தமிழ் இன விடுதலைப் போரின் காலத்தில் தம் உறவுகள் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பில் உண்மையைக் கண்டறியாமல் துன்பத்தோடும் துயரத்தோடும் ஜனநாயக வழிகளில் நீதிகோரிப் பல ஆண்டுகளாய் போராடிக் கொண்டிருக்கும் உறவுகளோடு நாமும் நீதி கோரி நிற்போம், செயல்படுவோம்.

1958ஆம் ஆண்டு முதல் 1983 வரை இந் நாட்டில் இடம்பெற்ற பல தமிழினத்திற்கு எதிரான இனக்கலவர காலங்களில் ஆயிரமாயிரம் தமிழ் மக்கள் தென்னிலங்கையில் இனப்படுகொலைக்கு ஆளாக்கப்பட்டது மட்டுமல்ல காணாமலும் ஆக்கப்பட்டனர்.

1972 – 1973 முதல் தமிழ் மக்களுக்கெதிரான இலங்கை இராணுவ அடக்கு ஒழுக்குமுறைகளுக்கு எதிராக ஆரம்பித்த ஆயுதப் போராட்ட காலத்திலும் 2009 காலப்பகுதியில் போர் தீவிரமடைந்திருந்த வேளை அரசும், இராணுவமும் போருக்குள் அகப்பட்ட மக்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு வாருங்களென அழைத்தன.

அப்படி வந்த மக்கள் மீது போரில் பாவிக்கத் தடைவிதிக்கப்பட்ட ஆயுதங்கள் குண்டுகள் பாவிக்கப்பட்டதனால் மக்கள் கொல்லப்பட்டனர், காணாமற்போயினர்.

2009 போரின் இறுதியில் அரசுத் தரப்பினாலும் இராணுவத் தரப்பினாலும் வெள்ளைக் கொடிகளுடன் வாருங்கள் சரணடையலாம் என்று அழைக்கப்பட்டு வந்தவர்களும், உறவுகளால் இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டவர்களும், சரணடைந்தவர்களும் சாட்சிகளுமுள்ள காணாமலாக்கப்பட்டவர்கள் என்ற தரப்பினர் முக்கியம் பெறுகின்றனர்.

சர்வதேச மனித உரிமைகள் விதிமுறைகளின் படி அவ்வாறு காணாமல் ஆக்கப்பட்டவர்கள் பற்றி அரசு பதில் சொல்லக் கடமைப்பட்டது என்ற வலுவான நியாயப்பாடாகும். இதனடிப்படையில்தான் காணாமலாக்கப்பட்டவர்கள் உறவுகள் அரசிடமும், சர்வதேசத்திடமும் நீதி கோரி நிற்கின்றனர். இதற்கு 2012லும் 2015லும் மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வலுவாகவுள்ளன.

இவற்றின் அடிப்படையிற்றான் அரசும் சர்வதேசமும் பதில் சொல்லும் கடப்பாட்டை நிறைவேற்ற வலியுறுத்தியும், நம்பகத் தன்மை வாய்ந்த நியாயம், நீதியையும் மக்கள் கோருவதற்கு நாமனைவரும் அப் போராட்டங்களுடன் ஒன்றுபட்டுச் செயலாற்ற வேண்டுமென்றும் கோருகின்றோம் – என்றுள்ளது.

Related Posts