Ad Widget

காணாமல்போனோரில் பலர் வெளிநாடுகளில்: பிரதமர் மீண்டும் குற்றச்சாட்டு

காணாமால்போயுள்ளதாக கூறப்படும் பலர் சட்டவிரோதமாக நாட்டை விட்டு வெளியேறி வெளிநாடுகளுக்குத் தப்பிச்சென்றுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.

இலங்கை இராணவத்திடம் சரணடைந்த மற்றும் கைதுசெய்யப்பட்ட நிலையிலும் கடத்தப்பட்டும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தமது உறவுகளை கண்டுபிடித்துத் தருமாறு வலியுறுத்தி வடக்கு கிழக்கில் தொடர் போராட்டங்களை முன்னெடுத்துவரும் நிலையிலேயே பிரதமர் மீண்டும் இந்தக் கருத்தை தெரிவித்திருக்கின்றார்.

நாடாளுமன்றத்தில் நேற்றைய தினம் உரையாற்றிய போதே பிரதமர் இதனைக் குறிப்பிட்டார்.

காணாமல்போனோரின் தொடர்பான சரியான விபரங்களை அறிந்துகொள்வதற்கு காணாமல்போனோர் அலுவலகம் உருவாக்கப்பட வேண்டியது அவசியம் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றில் அறிவித்துள்ளார்.

அண்மைக்காலங்களில் பலர் படகுகள் மூலம் நாட்டை விட்டு சட்டவிரோதமாக வெளியேறிய சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ள பிரதமர் இவர்கள் பொருளாதார காரணங்களுக்காகவே வெளிநாடு செல்ல முற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய காணாமல் போனதாகக் கூறப்படுபவர்களிலும் பலர் வெளிநாடுகளுக்கு சட்டவிரோதமாக சென்றுள்ளமை தெரியவந்துள்ளதால் காணாமல் போனோர் தொடர்பான உண்மையான விபரங்களை அறிய முறையான கணக்கெடுப்பொன்று நடத்தப்பட வேண்டியது அவசியம் என்றும் ரணில் தெரிவித்துள்ளார்.

இதற்காகவே காணாமல்போனோர் அலுவலகத்தை அமைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் எனினும் ஜே.வி.பி முன்வைத்துள்ள சில திருத்தங்களை உள்ளடக்க வேண்டியிருப்பதால் காணாமல் போனோர் அலுவலகத்தை அமைக்கும் பணிகள் தாமதமாகி வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எவ்வாறாயினும் விரைவில் காணாமல்போனோர் அலுவலக சட்டத்தில் ஜே.வி.பி கோரியுள்ள திருத்தங்கள் விரைவில் வர்த்தமானி அறிவித்தல் ஊடாக பகிரங்கப்படுத்தப்பட்டு அவற்றுக்கு பாராளுமன்றில் அங்கீகாரத்தை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுப்பதாகவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.

எனினும் காணாமல் போனோர் அலுவலக சட்டத்திற்கு அமைய சர்வதேச சமூகத்தின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்வதற்கு அனுமதிக்கும் சரத்தை அதிலிருந்து நீக்க கடந்தவாரம் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை மாநாட்டில் தீர்மானிக்கப்பட்டிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

எது எவ்வாறாயினும் காணாமல் போனோர் அலுவலகத்திற்கு கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ள காணாமல்போனோரின் உறவினர்கள், இதுவும் காலத்தை கடத்தி, ஏமாற்றுவதற்காக மேற்கொள்ளப்பட்டுவரும் ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் மற்றுமொரு கபட நாடகம் என்று கூறி வருகின்றனர்.

தமது இந்த நிலைப்பாட்டை பரணகம ஆணைக்குழு, மனோரி முத்தெட்டுவேகம ஆணைக்குழு உட்பட அனைத்து ஆணைக்குழுக்களிடமும் காணாமல்போனோரின் உறவினர்கள் நேரடியாகத் தெரிவித்துள்ளமையும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

Related Posts