Ad Widget

காணாமல்போனோர் தொடர்பில் 3,000 இரட்டை முறைப்பாடுகள்!

காணாமல்போனோர் தொடர்பில் விசாரணை நடத்திவரும் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு வடக்கு, கிழக்கிலிருந்து 3 ஆயிரம் இரட்டை முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன என்று ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

அத்துடன், காணாமல்போனவர்கள் தொடர்பில் இதுவரையில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன என்றும், நிர்வாக மட்டத்திலான சிக்கல்கள் இருப்பதால் அவற்றை விசாரிப்பதற்கு நீண்டநாட்கள் அவசியம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

மேற்படி ஆணைக்குழுவின் விசாரணைகள் எந்தமட்டத்தில் இருக்கின்றன என்பது பற்றி விவரிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

காணாமல்போன ஒருவர் தொடர்பில் பலமுறை முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதாவது, அவரது உறவினர்கள் சிலர் சாட்சியம் வழங்கிய நிலையில், அரச சார்பற்ற நிறுவனங்கள் ஊடாகவும் முறைப்பாடுகள் வழங்கப்பட்டுள்ளன. அத்துடன், கடிதங்களும் கையளிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு சுமார் 3 ஆயிரம் இரட்டை முறைப்பாடுகள் இருக்கின்றன. அவற்றை ஆராய வேண்டும். நம்பகத்தன்மையை உறுதிப்படுத்த வேண்டும். இவற்றை செய்து முடிப்பதற்கு காலம் அவசியம் என்றும் அவர் கூறினார்.

மேற்படி ஆணைக்குழுவின் பதவிகாலம் ஜூன் மாதம் வரை நீடிக்கப்பட்டுள்ளதால், வடக்கில் அமர்வுகளை முடிவுக்கு கொண்டுவரும் வகையில் ஏப்ரல் நடுப்பகுதியில் கிளிநொச்சியில் அமர்வு இடம்பெறவுள்ளது.

அதேவேளை, காணாமற்போனவர்களில் இரண்டு அல்லது மூன்று பேர் மாலைதீவு சிறைச்சாலையில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்று ஆணைக்குழுவின் தலைவர் மக்ஸ்வெல் பரணகம தெரிவித்திருந்தார். இது பற்றி வெளிவிவகார அமைச்சிடம் முறைப்பாடு செய்தும், அவ்வமைச்சு இன்னும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

Related Posts