Ad Widget

காணாமற் போனோர், அரசியல் கைதிகளின் உறவுகளின் கண்ணீர் கதறல்!

காணாமற் போனோரைக் கண்டுபிடித்துத் தருமாறும் அரசியல் கைதிகளை விடுவிக்குமாறும் கோரி அவர்களின் உறவுகள் இன்று யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்புப் போராட்டத்தை நடத்தினர்.

இதன்போது அவர்களின் கண்ணீர்க் கதறலால் யாழ். நகரமே சோக மயமானது. யாழ்ப்பாணம் பஸ் நிலையம் முன்பாக முற்பகல் 10 மணியளவில் ஆரம்பித்த இந்தப் போராட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர்.

“அரசே காணாமல் போனோரை கண்டுபிடித்துத் தா”, “அரசியல் கைதிகளை விடுதலை செய்”, “இராணுவமே வெளியேறு” எனக் கோஷங்களை எழுப்பியவாறும், பதாதைகளைத் தாங்கியவாறும் யாழ். மாவட்ட செயலகம் வரை பேரணியாகச் சென்றனர்.

மாவட்ட செயலகத்தின் முன்னால் நின்று “புதிய அரசே எங்கள் பிள்ளைகளை எங்களிடம் தா”, “எங்கள் பிள்ளைகள் தங்கள் தந்தையின் முகத்தை பார்க்க விடு” எனக் கண்ணீர் மல்க கதறி அழுதனர்.

உறவுகளைத் தேடி நடத்தப்பட்ட இந்த் ஆர்ப்பாட்டத்தில் தங்களின் பிள்ளைகளைத் தேடி தள்ளாடும் வயதான தாய்மாரும், தந்தையைத் தேடி சிறு குழந்தைகளும் வெயிலையும் பொருட்படுத்தாமல் நீண்ட தூரம் பேரணியில் பங்கேற்றனர்.

இந்த நிகழ்வில் வடக்கு மாகாண சபை உறுப்பினர்களான சிவாஜிலிங்கம், பா.கஜதீபன் மற்றும் தமிழ்த் தேசிய முன்னணியின் பொதுச் செயலாளர் கஜேந்திரன் ஆகியோரும் பங்கேற்றிருந்தனர்.

Related Posts