Ad Widget

காணாமற்போனோர் பிரச்சினைக்கு சம்பந்தனின் பிரேரணை நிரந்தர தீர்வு தர வேண்டும்!

அரசியல் கைதிகள் விவகாரம் – காணாமல்போனோர் விவகாரம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனால் எதிர்வரும் 23ம் திகதி -செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்படும் சபை ஒத்திவைப்புப் பிரேரணை வெறுமனே விவாதத்துடன் முடிவடைந்துவிடக் கூடாது. இதனூடாக ஒரு நிரந்தரத் தீர்வு ஏற்படக்கூடியதாக இருக்கவேண்டும். என்று தமிழ் அரசியல் கைதிகள் மற்றும் காணாமல்போனோரின் உறவுகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தனால், எதிர்வரும் 23ம் திகதி சபை ஒத்திவைப்புப் பிரேரணை கொண்டு வரப்படவுள்ளது. தமிழ் அரசியல் கைதிகள் விவகாரம் மற்றும் காணாமல்போனோர் விவகாரம் ஆகியவற்றை உள்ளடக்கியதாகவே இந்தப் பிரேரணை கொண்டுவரப்படவுள்ளது. இது தொடர்பிலேயே, அரசியல் கைதிகள் மற்றும் காணாமல்போனோரின் உறவுகள் மேற்குறிப்பிட்ட வேண்டுகோளை முன்வைத்துள்ளனர். இது தொடர்பில் அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,

அரசியல் கைதிகள் விடுதலை மற்றும் காணாமல்போனோர்கள் தொடர்பான தகவல்களை அரசு வெளியிடவேண்டுமென வலியுறுத்தி நாடாளுமன்றில் சபை ஒத்திவைப்பு பிரேரணை கொண்டுவரப்படவுள்ளதாகாக அறிகின்றோம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொண்டுவரவுள்ள இந்தப் பிரேரணை நிலையான ஒரு தீர்வை எட்டக் கூடியதாக இருக்கவேண்டும். கடந்த காலங்களைப் போன்று சாட்டுக் கதைகளைச் சொல்லி இழுத்தடிக்காது, அரசியல் கைதிகள் மற்றும் காணாமல்போனோர்கள் குறித்து நிரந்தர தீர்வு காணப்படுவதுடன், அந்தத் தீர்வை நடைமுறைப்படுத்தவேண்டும்.

உண்மையான நல்லிணக்கம் – இதயசுத்தியுடன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் செயற்படுகின்றார்கள் எனின், மனிதாபிமானத்துடன் அரசியல் கைதிகளும் வாழ்வதற்கான சூழ்நிலைகளை ஏற்படுத்திக் கொடுக்கவேண்டும். விசேட நீதிமன்றங்கள் மற்றும் புனர்வாழ்வின் ஊடாக விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கப்படுமென்ற நிபந்தனைகளைத் தவிர்க்க வேண்டும். அதற்காகக் காலத்தைக் கடத்தக் கூடாது. ஏற்கனவே, தண்டனைகளை அனுபவித்து விட்டு, 20 – 25 வருடங்களுக்கு மேலாக சிறைவாசம் அனுபவிக்கும் அரசியல் கைதிகளுக்கு இன்னும் 10 வருடங்கள் அல்லது அதற்கு மேல் சிறைகளில் தண்டனை அனுபவிக்க புனர்வாழ்வுகள் மற்றும் விசேட நீதிமன்றங்கள் தேவையில்லை.

எனவே, எதிர்வரும் 23ம் திகதி சபை ஒத்திவைப்புப் பிரேரணை தனி விவாதமாக இருக்காமல், அரசியல் கைதிகளின் விடுதலை விடயத்தில் சரியான தீர்வை எடுக்கக்கூடியதாக இருக்கவேண்டும். அதற்கு தமிழ்த் தேசியத் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமாகிய இரா.சம்பந்தன் தீர்க்கமான முடிவுகளை எடுக்கவேண்டும் என்று அரசியல் கைதிகள் மற்றும் காணாமல்போனோர்களின் உறவுகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Related Posts