Ad Widget

காணாமற்போனோர் தொடர்பான விசாரணையை இலங்கை அரசு மேற்கொள்ளாது – த.தே.கூ

காணமற்போனவர்கள் பற்றிய தகவல்களை கண்டறிய சர்வதேச விசாரணையே தேவை. காணாமல் போனவர்கள் பற்றிய விசாரணைகளை இலங்கை அரசாங்கம் மேற்கொள்ளும் என்று எதிர்பார்க்க முடியாது. அதில் எமக்கு நம்பிக்கையும் இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்தார்.

யாழிலுள்ள அவரது வீட்டில் வியாழக்கிழமை (25) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் கூறியதாவது,

‘தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கட்சி தலைவர்கள் புதன்கிழமை (24) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து பேசிய போது, காணாமல் போனவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக நம்பப்படும் இரகசிய முகாம்கள் பற்றி பேசியுள்ளனர்.

காணாமல் போனவர்கள் தொடர்பான குழுவிடம் காணாமல் போனவர்கள் ஏறத்தாழ 20 ஆயிரம் பேர் என பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் அவர்களுக்கு என்ன நடந்தது என்று முன்னைய அரசாங்கமோ தற்போதைய அரசாங்கமோ எந்த பதிலும் சொல்லவில்லை. காணாமல் போனவர்கள் இன்னமும் மறைத்து வைக்கப்பட்டுள்ளனரா இல்லை கொல்லப்பட்டு விட்டனரா என்பது கூட இன்னமும் வெளிப்படுத்தப்படவில்லை.

காணாமல் போனவர்கள் பற்றி முறைப்பாடு செய்தவர்கள் பல சாட்சியங்களை முன்வைத்து இருந்தார்கள். எத்தனையாம் திகதி எந்த இடத்தில் எந்த இராணுவத்தின் சுற்றி வளைப்பில் காணாமல் போனார்கள் எந்த விதத்தில் கடத்தப்பட்டார்கள் என்ற விடயமும் இராணுவத்திடம் எத்தனையாம் திகதி என்ன இடத்தில் கையளித்தோம் போன்ற பல்வேறு தரப்பட்ட சாட்சியங்கள் தரவுகளை அவர்கள் கொடுத்து இருந்தார்கள்.

இந்த தரவுகள் சாட்சியங்கள் அவர்களை கண்டுபிடிக்க போதுமானதாக இருக்கின்ற போதிலும் இன்று வரை அவர்களுக்கு என்ன நடந்தது என்பதனை கண்டுபிடிப்பது தொடர்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. திருகோணமலையிலுள்ள கடற்படை முகாமில் கோத்தா முகாம் எனும் முகாம் இயங்கி வந்தது எனவும், அங்கு 700 க்கும் மேற்பட்டவர்கள் தடுத்து வைக்கப்பட்டு இருந்ததுடன் 35 குடும்பங்களும் சிறுசிறு குடும்பங்களாக தடுத்து வைக்கப்பட்டு இருந்தார்கள் என்றும் அவர்களுக்கு என்ன நடந்தது என்றும் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பி இருந்தேன்.

அதற்கு அவ்வாறான முகாம் தற்போது இல்லை என்று சொல்லப்பட்டதே தவிர, முன்னர் அது இருந்ததா? இல்லையா? இருந்து இருந்தால் அந்த முகாமில் எவ்வளவு பேர் இருந்தார்கள், தற்போது அவர்கள் எங்கே போன்ற விடயங்களை இந்த அரசாங்கம் சொல்ல முற்படவில்லை.

தற்போது பார்த்தால் கடற்படையினரால் கொழும்பில் வைத்து 5 மாணவர்களும் வத்தளை, ஹம்பகா போன்ற பகுதிகளிலுமாக மொத்தம் 11 மாணவர்கள் கடத்தப்பட்டதாகவும், அவர்கள் ஒவ்வொருவரிடமும் கோடிக்கணக்கான பணம் கப்பமாக கோரப்பட்டதாகவும், மாணவர்களை கடத்தியவர்கள் முன்னாள் கடற்படை தளபதி வசந்த கன்னங்கராவின் நேரடி கட்டுப்பாட்டில் இருந்தவர்கள் என்றும் அவர்கள் தான் அந்த கடத்தலுடன் சம்பந்தப்பட்டவர்கள் என்றும் புலனாய்வு பிரிவினர் கண்டறிந்து நீதிமன்றின் ஊடாக வெளிப்படுத்தியுள்ளனர்.

திருகோணமலையில் மாத்திரம் அல்ல கொழும்பு உட்பட பிற பிரதேசங்களிலுள்ள கடற்படை தளங்களிலும் கடத்தி செல்லப்பட்டவர்கள் அங்கு தடுத்து வைக்கப்பட்டு, கப்பம் அறவிட்டு இல்லாதுவிடின் அவர்கள் கொல்லப்பட்டார்கள் என தெரிகின்றது.

திருகோணமலையில் தான் கோத்தா முகாம் எனும் முகாம் இயங்கி உள்ளது. அங்கு தடுத்து வைக்கப்பட்டு இருந்தவர்களுக்கு என்ன நடந்தது என்பதனை முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபஷேவை விசாரணை செய்தால் தெரியவரும் என்பது எமது அசைக்க முடியாத நம்பிக்கை.

அந்த முகாமுக்கு கோத்தா முகாம் என பெயர் உள்ளதன் அடிப்படையில் முன்னாள் பாதுகாப்பு செயலாளருக்கும் அதற்கும் என்ன தொடர்பு என்பது அலசி ஆராயப்பட வேண்டும். ஆனால் அது தொடர்பில் எந்த விசாரணையையும் இந்த அரசாங்கம் மேற்கொள்ளாது. முன்னைய அரசாங்கத்தை விட கூடுதலாக எல்லாவற்றையும் மூடி மறைக்க இந்த அரசாங்கம் முயல்கின்றது.

முன்னைய ஆட்சி காலத்தில் கைது செய்யப்பட்டவர்கள், சுற்றி வளைப்பின் போது அழைத்து செல்லப்பட்டவர்கள், இராணுவத்திடம் கையளிக்கப்பட்டவர்கள் என பலர் காணாமல் போயுள்ளனர். அது தொடர்பில் முழுமையான விசாரணை முன்னெடுக்கப்பட்டு அவர்களுக்கு என்ன நடந்தது? அவர்கள் தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ளனரா? கொல்லப்பட்டு விட்டனரா? போன்ற தகவல்கள் வெளிப்படுத்தப்பட வேண்டும்.

கொல்லப்பட்டு விட்டனர் என்றால் அது குற்றம். மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றன என்பதனை ஏற்றுக்கொண்டதாகி விடும். அதனை இந்த அரசாங்கமும் ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை. அதனை மூடி மறைக்க இந்த அரசாங்கம் முயல்கின்றது.

இதனை கண்டறிய சர்வதேச விசாரணையே தேவை. காணமல் போனவர்கள் என்ன ஆனார்கள் அவர்கள் காணாமல் போனமைக்கான அடிப்படை காரணம் என்ன? அதில் எவருக்கு சம்பந்தம் இருக்கிறது? என்பதனை சர்வதேச விசாரணை மூலமே கண்டறியலாம். இலங்கை அரசாங்கத்தின் உள்ளக விசாரணைகள் மூலம் இவற்றை கண்டறிய முடியாது. உள்ளக விசாரணைகள் மூலம் சம்பந்தப்பட்டவர்கள் பாதுகாப்பட்டு விடுவார்கள்’ என்றார்.

Related Posts