Ad Widget

காணாமற்போனோர் தொடர்பான விசாரணை நடத்தும் ஆணைக்குழுவுக்கு ஆலோசனை வழங்க இந்திய அதிகாரி?

விசாரணைக்குழுவுக்கு ஆலோசனை வழங்குவதற்கு இந்திய மனிதஉரிமைகள் அதிகாரியான கௌஷல் விருப்பம் தெரிவித்துள்ளார் என்று இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இலங்கை ஜனாதிபதி, தொலைபேசி மூலமாக தனக்கு அழைப்பு விடுத்தார் என்றும், அந்த அழைப்பை தான் ஏற்றுக்கொண்டார் என்றும் கௌஷல் தெரிவித்துள்ளார்.

Avdhash Kaushal

காணாமற்போனோர் தொடர்பான விசாரணை நடத்தும் ஆணைக்குழுவுக்கு ஆலோசனை வழங்கவென நியமிக்கப்பட்டுள்ள குழுவின் உறுப்பினர்களது எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று ஜனாதிபதி கடந்த வாரம் அறிவித்திருந்தார்.

இந்த நிலையில் இந்திய மனிதஉரிமைகள் ஆர்வலரை இலங்கை ஜனாதிபதி தொலைபேசியில் தொடர்பு கொண்டு இந்த கோரிக்கையை விடுத்துள்ளார் என்றும், அதற்கு கௌஷல் சம்மதம் தெரிவுத்துள்ளார் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

இந்திய மனித உரிமை ஆர்வலரான அவ்தாஷ் கௌஷல் தெரிவித்துள்ள கருத்துக்கள் வருமாறு,:-

இந்த நியமனம் குறித்து என்னிடம் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ சுமார் 15 நாட்களுக்கு முன்னர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். இந்த நியமனத்துக்கு நான் சம்மதம் வழங்கியிருக்கிறேன். 1970 இல் இருந்து கிராமப்புற வழக்குகள் மற்றும் உரிமைகள் மையத்தை நான் நிறுவி நடத்தி வருகிறேன். இந்த அமைப்பின் சார்பாக 1999 இல் நடத்திய மனித உரிமைகள் தொடர்பிலான கருத்தரங்கு ஒன்றில், அப்போது இலங்கையின் தொழில் மற்றும் மீன்வளத்துறை அமைச்சராக இருந்த மஹிந்த ராஜபக்‌ஷ கலந்து கொண்டார்.

இலங்கைப் பிரச்சினை குறித்து எனக்குப் புரிதல் உண்டு. இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவை வலுப்படுத்த வேண்டுமென்று நான் பல முறை இலங்கை அரசை வற்புறுத்தி வந்தேன். ஆனால் அதில் நான் வெற்றி பெறவில்லை. ஆனால் தற்போது இந்த ஆணைக்குழு தீர்வொன்றைத் தரும் என்ற நம்பிக்கை எனக்கு நூறு சதவீதம் இருக்கிறது நான் மஹிந்தவுக்கு மட்டும் நெருக்கமானவன் இல்லை, பாதிக்கப்பட்ட யாழ்ப்பாணத் தமிழர்கள் பலருக்கும் நெருக்கமானவன் என்றும் கௌஷல் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் பழங்குடியினர், ஒதுக்கப்பட்ட மக்கள், பெண்கள், குழந்தைகளது உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் பணியை கிராமிய வழக்குகள் மற்றும் உரிமைகள் நிலையம் ஆற்றிவருகிறது. 1970 இல் இருந்து உத்தரகண்ட்டின், உத்தர பிரதேசம், இமாச்சல பிரதேசம், ஜார்க்கண்ட், சட்டீஸ்கர், அரியானா ஆகிய இடங்களில் இந்த அமைப்பு செயற்பட்டு வருகிறது.

இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள கொழும்பிலுள்ள இந்தியத் தூதரக மூத்த அதிகாரி ஒருவர்:- தனிப்பட்ட தொடர்புகளின் அடிப்படையிலேயே இந்திய நிபுணர் உள்ளடக்கப்படுவதற்கு சாத்தியங்கள் உள்ளன. இது இந்திய அரசாங்கத்தின் நிலைப்பாட்டைப் பிரதிபலிக்காது என்று தெரிவித்துள்ளார்.

Related Posts