Ad Widget

காணாமற்போனோர் தொடர்பான ரணிலின் அறிவிப்பு குறித்து நாடாளுமன்றில் கேள்வி எழுப்புவோம்! – சம்பந்தன்

காணாமல் போனோர் குறித்து பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்த கருத்து அந்த பிரச்சினைக்கான தீர்வாகாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் குறிப்பிட்டார்.

கிளிநொச்சியில் நேற்று நடைபெற்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உயர்மட்டக் கலந்துரையாடலின் ஒரு பகுதியாக காணாமற்போனோரின் உறவினர்களுடன் கலந்துரையாடப்பட்ட போது, கருத்து வெளியிட்ட பெண் ஒருவர் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த பிரதமர் காணாமல் போனவர்கள் உயிருடன் இருக்க வாய்ப்பில்லை என்று கூறிய கருத்தினால் மிகவும் மனவேதனையடைந்துள்ளதாகவும் அவருடைய பேச்சு குறித்து கவனம் செலுத்தப்படவேண்டும் என்றும் கேட்டார்.

இதற்கு பதிலளித்த இரா.சம்பந்தன், ‘காணாமல் போனோர் குறித்து நாம் நாள்தோறும் கதைக்கின்றோம். இலங்கைக்கு வரும் சர்வதேச பிரதிநிதிகளிடம் இதுகுறித்து நாம் எடுத்து கூறுகின்றோம். நாம் இந்த விடயத்தினையே முதன்மை விடயமாக கொண்டு செயற்படுகின்றோம்.

நாங்கள் உங்களைச் சந்திக்கவில்லை என்றாலும் நாள்தோறும் பத்திரிகைளில் உங்கள் புகைப்படங்கள், பிள்ளைகளின் புகைப்படங்களைப் பார்த்து நிலைமையையும், துன்பத்தினையும் புரிந்து கொள்கிறோம். நாம் எல்லோரும் ஏதோ ஒருவகையில் பாதிக்கப்பட்டுள்ளோம். இதற்கு நாம் ஒரு முடிவினைக் காணவேண்டும். இது குறித்து உங்களுக்கும் ஒரு முடிவு வேண்டும்.

உங்கள் பிள்ளைகள் உங்கள் கண்முன் கொண்டுச் செல்லப்பட்டுள்ளனர். என்றபோதிலும் அதற்கு ஒரு முடிவு வேண்டும். பிள்ளைகளை பறிகொடுத்து நிற்கின்ற உங்களுக்கு ஒரு முடிவு வேண்டும். உங்கள் பிள்ளைகள் இல்லை என்றால் அதற்கு ஒரு முடிவெடுத்து, அதற்குரிய ஒழுங்குகள் செய்யப்பட்டு, உங்களுக்கு ஒரு பரிகாரம் வழங்கப்பட்டு, ஆறுதல் கூறும் அளவிற்கு ஏதோ ஒரு விடயம் நடைபெறவேண்டும்.

இது குறித்து நாம் அரசாங்கத்திடம் ஒரு தீர்க்கமான முடிவினை கேட்போம். பிரதமரின் கூற்று இந்தப் பிரச்சினைக்கு ஒரு முடிவாக இருக்க முடியாது. இதற்கு வேறுவிதமான ஒரு முடிவு வேண்டும் என்பதனை நாம் நாடாளுமன்றில் கேட்போம்.’ என்றும் கூறினார்.

Related Posts