Ad Widget

காணாமற்போனோரை மீட்டுத்தர மகிந்தவால் மட்டுமே முடியும்!

வடக்கு – கிழக்கில் போரின் போது காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகள் 12 ஆயிரத்துக்கும் அதிகமானோரை திரும்பித்தர முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவால்தான் முடியும் என காணாமற்போனவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

இறுதிப்போரின் போது காணாமல் ஆக்கப்பட்டவர்களை மீட்பதற்கு அவர்களின் உறவுகளின் அமைப்பினர் கடந்த ஒரு வருடமாக தொடர் போராட்டத்தை வவுனியா, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு கிளிநொச்சி மற்றும் திருகோணமலை ஆகிய இடங்களில் நடத்தி வருகின்றனர்.

இந்தப் போராட்டத்தின் ஓராண்டு நிறைவை ஒட்டிவரும் 20ஆம் திகதி கொழும்பில் உள்ள வெளிநாட்டு இராஜதந்திரிகளை சந்திக்கவுள்ளதாக காணாமற்போனோர் அமைப்பின் கிளிநொச்சி மாவட்ட இணைப்பாளர் லீலாதேவி ஆனந்தராஜா தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:

உள்நாட்டில் தமது உறவுகளை மீட்பதற்கு இருக்கும் ஒரே வாய்ப்பு மகிந்த ராஜபக்சவின் கையிலேயே இருப்பதாகவும் அவர் கூறினார்.

கடந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான பரிப்புரையின் போது காணாமற்போன எவரும் தமது படையினரின் தடுப்பில் இல்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன கூறியிருந்தார்.

அத்துடன், ஜனாதிபதியை நாம் மூன்று தடவைகள் சந்தித்து பேசியும் எந்தவிதமான பலனும் கிடைக்கவில்லை. அவரிடத்தில் நாம் நம்பிக்கை இழந்துபோயிருக்கின்றோம்.

ஆகவே மகிந்த ஆட்சியில் அவர்கள் காணாமற்போன நிலையில் அவரால் மாத்திரமே அவர்களை மீட்டுத்தரமுடியும் என்ற ஒரு சிறிய நம்பிக்கை கீற்று எமக்கு தெரிகின்றது.

தற்போதைய தேர்தலில் பலம் பெற்றிருக்கும் மகிந்த ராஜபக்ச, தனது கடந்தகாலத் தவறுகளை திருத்திக்கொள்ள, காணாமல் ஆக்கப்பட்டவர்களை மீட்டுத்தர உதவ வேண்டும்.

இதற்காக மகிந்த ராஜபக்சவின் கொள்கைகளுக்கு நாங்கள் இணங்குவதாக எவரும் எடுத்துக்கொள்ளத் தேவையில்லை. எமது உறவுகளை மீட்க நாம் எவ்வளவு கீழேயும் இறங்கிச் செல்லத் தயாராக இருக்கின்றோம்.

காணாமற்போன எனது மகன் அனுராஜ் உள்பட எமது மாவட்டத்தில் காணாமற்போன ஆயிரத்து 200 பேரில் சுமார் ஆயிரம் பேர் படையினரால், கைது செய்யப்பட்டமை, அவர்களிடம் கையளிக்கப்பட்டமை, அல்லது சரணடைந்தமைக்கான ஆதாரம் உள்ளன.

காணாமற்போன எவரும் இலங்கை அரச படையினரின் தடுப்பில் இல்லை என்று அரச தரப்பில் கூறப்படுவதை ஏற்பதற்கு காணாமற்போனவர்களின் உறவுகள் தயாராக இல்லை.

போர்க்குற்றம் தம்மீது வந்துவிடும் என்பதற்காக காணாமற்போனோரை இராணுவமும் அரசியல்வாதிகளும் மறைத்து வைத்துள்ளனர்.

எந்த கட்சியை சேர்ந்தவர்களாயினும் அரசியல்வாதிகள் மகிந்த ராஜபக்ச மீது தடுத்து வைத்தல் குறித்த போர்க்குற்றச்சாட்டு விழுவதை விரும்பவில்லை. அதனாலேயே எல்லோரும் சேர்ந்து அதனை மறைக்கின்றனர்.

அப்படி இல்லாத ஒரு சூழ்நிலையில் சர்வதேச சமூகம் எமக்கு உதவ வேண்டும். ஆனால், சர்வதேச சமூகம் இந்த விடயத்தில் தலையிடுவதில் ஒரு பிரச்சினை உள்ளது.

அதாவது சர்வதேச சமூகம் இந்த விடயத்தில் நேரடியாகத் தலையிட்டால், தமது குற்றங்களை மறைக்க இலங்கை அரசு, எமது உறவுகளுக்கு ஆபத்தை ஏற்படுத்த முனையலாம் – என்றார்.

சர்வதேச சமூகம் இந்த விடயத்தில் அக்கறை செலுத்துவதற்கு புலம்பெயர்ந்து வாழுகின்ற தமிழ் மக்கள் உதவவேண்டும் என்றும் லீலாதேவி கோரிக்கை விடுக்கிறார்.

Related Posts