Ad Widget

காணாமற்போனோரின் உறவுகள் யாழ்.நகரில் நடத்திய போராட்டத்தில் பங்கேற்பதில் நடைமுறைச் சிக்கல்கள்!! – சுகாஷ்

சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினமான நேற்றுமுன்தினம் யாழ்ப்பாணம் நகர மத்திய பேருந்து நிலையத்தில் ஆரம்பமாகி நடைபெற்ற காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் ஆர்ப்பாட்டப் பேரணியில் கலந்து கொள்ள முடியாமைக்கு சில நடைமுறைச் சிக்கல்களே காரணம் என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணி விளக்கமளித்துள்ளது.

“காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சகல அமைப்புக்களையும் அவர்களது போராட்டங்களை நாம் ஆதரிக்கின்றோம். எமக்கு எந்தவொரு அமைப்பு மீதும் தனிப்பட்ட கோபங்களோ, காழ்ப்புணர்ச்சியோ கிடையாது. யாழ்ப்பாணம் பேருந்து நிலையத்திலிருந்து நடைபெற்ற காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் பேரணியில் சில நடைமுறைச் சிக்கல்கள் காரணமாக நாம் கலந்துகொள்ள முடியாமல் போனதற்கு துரஷ்டவசமானனது” என்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சட்ட ஆலோசகர், சட்டத்தரணி கனகரட்ணம் சுகாஷ் தெரிவித்தார்.

“யாழ்ப்பாணப் பேருந்து நிலையத்திலே ஆரம்பான அந்தப் பேரணி கச்சேரிக்குச் சென்று இலங்கை அரசினுடை ஓர் முகவராகச் செயற்பட்டுக் கொண்டிருக்கும் அரசினுடைய பிரதிநிதியான அரச அதிபரிடம் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் மனுவைக் கையளிப்பதாகத் திட்டமிடப்பட்டிருந்தது. இது உண்மையில் சர்வதேச விசாரணையைக் கோரி நிக்கின்ற எமது நிலைப்பாட்டில் பெரும்பாலான காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் ஆழ்மன வேணவாக்கு எதிரான விடயம்” என்று அவர் குறிப்பிட்டார்.

கொக்குவிலில் அமைந்துள்ள தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே சட்டத்தரணி கனகரட்ணம் சுகாஷ், இந்த விடயத்தைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது;

எனினும் மாவட்ட செயலகம் முன் இடம்பெற்ற போராட்டத்தின் நிறைவில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்துக்கான மனுவை கத்தோலிக்க மதகுருமாரிடமே காணாமல் ஆக்கபட்டோரின் உறவுகள் கையளித்திருந்தனர்.

ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்தில் காணாமல் ஆக்கட்டோரின் உறவுகள் நீதிகேட்டு ஆர்ப்பாட்டங்கள், பேரணிகள் நடத்தப்பட்டது. யாழ்ப்பாணத்தில் மாத்திரமின்றி வடகிழக்கில் இந்தப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளுக்கு நீதிகேட்டு நடத்தப்படும் சகல ஆர்ப்பாட்டங்களுக்கும் ஒத்துழைப்பதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி பகிரங்க அழைப்பை விடுத்திருந்தது.

இந்த நிலையில் நல்லூர் கிட்டுப் பூங்காவில் ஆரம்பிக்கப்பட்டு ஐ.நா. சபையின் யாழ்ப்பாணக் கிளை அலுவலகத்தில் மனு ஒன்றைக் கையளிக்கும் வகையில் ஒழுங்கமைக்கப்பட்ட ஆர்ப்பாட்டப் பேரணியில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் உள்ளிட்ட நாம் பங்கேற்றிருந்தோம். அதனை ஏற்பாடு செய்த காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் ஓர் அமைப்பின் அழைப்பில் அதில் நாம் கலந்துகொண்டோம். இதுதான் உண்மையான விடயம்.

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சகல அமைப்புக்களையும் அவர்களது போராட்டங்களை நாம் ஆதரிக்கின்றோம். எமக்கு எந்தவொரு அமைப்பு மீதும் தனிப்பட்ட கோபங்களோ, காழ்ப்புணர்ச்சியோ கிடையாது. தமிழர்களின் உரிமைகளுக்காக – வேணவாக்களுக்காகதான் அத்தனை காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளும் அவர்களது உறவுகளும் ஏதோ ஒரு வகையில் பங்களிப்புச் செய்துள்ளனர்.

காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதிவேண்டும் அவர்களது விவகாரம் சர்வதேச விசாரணை மூலம் ஆராயப்படவேண்டும் என்று கடந்த 8 ஆண்டுகளாக வலியுறுத்தி வரும் ஒரே ஒரு கட்சியினுடைய தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மட்டும்தான். ஐ.நா.மனித உரிமைகள் சபைக்கு கடந்த 8 ஆண்டுகளாக தொடர்ச்சியாகச் சென்று காணாமல் ஆக்கப்பட்டோருக்கு ஓர் சர்வதேச விசாரணை வேண்டும், காணாமல் ஆக்கப்பட்டோரது விவகாரம் சர்வதேச குற்றவியல் நீதிமன்றுக்குப் பாரப்படுத்தவேண்டும் என்று வலியுறுத்துகின்ற ஒரே ஒரு கட்சியினுடைய தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மாத்திரம்தான். அவரோடு கட்சியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் மற்றும் நானும் ஐ.நா. மனித உரிமைகள் சபைக்குச் சென்று தொடர்ச்சியாக வலியுறுத்துகின்றோம்.

அதுமாத்திரமின்றி நாடாளுமன்றத் தேர்தல் முடிவடைந்து வெறும் ஒரு மாதத்துக்கு இடையில் எமது கட்சியிலிருந்து தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான தலைவரும் செயலாளரும் காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரத்துக்கு ஓர் சர்வதேச விசாரணை வேண்டும் என்று நாடாளுமன்றில் வலியுறுத்தியுள்ளனர். ஆகவே காணாமல் ஆக்கப்பட்டோருக்கும் அவர்களது உறவுகளுக்காகவும் தொடர்ச்சியாக குரல் கொடுத்து வருகின்ற எங்களது அமைப்பை வேதனைப்படுத்தும் வகையில் நேற்றைய பத்திரிகைகளிலே வெளியாகியிருந்தது.

யாழ்ப்பாணம் பேருந்து நிலையத்திலிருந்து நடைபெற்ற காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் பேரணியில் சில நடைமுறைச் சிக்கல்கள் காரணமாக நாம் கலந்துகொள்ள முடியாமல் போனதற்கு துரஷ்டவசமானனது.
யாழ்ப்பாணப் பேருந்து நிலையத்திலே ஆரம்பான அந்தப் பேரணி கச்சேரிக்குச் சென்று இலங்கை அரசினுடை ஓர் முகவராகச் செயற்பட்டுக் கொண்டிருக்கும் அரசினுடைய பிரதிநிதியான அரச அதிபரிடம் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் மனுவைக் கையளிப்பதாகத் திட்டமிடப்பட்டிருந்தது. இது உண்மையில் சர்வதேச விசாரணையைக் கோரி நிக்கின்ற எமது நிலைப்பாட்டில் பெரும்பாலான காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் ஆழ்மன வேணவாக்கு எதிரான விடயம்.

பெரும்பாலான தமிழ் மக்களை காணாமல் ஆக்கப்பட்டதற்கு பொறுப்புக் கூறவேண்டிய தரப்பாக இருக்கும் அரச தரப்பும் அந்த அரச தரப்புடன் சேர்ந்தியங்கிய ஒட்டுக்குழுக்களும். ஆகவே அந்த அரச தரப்பினுடைய முகவராக இருக்கக் கூடிய அரச அதிபரிடம் காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோருகின்ற மனுவைக் கையளிப்பது என்பது சர்வதேச விசாரணையை நடைபெறவேண்டும் என்ற எமது நிலைப்பாட்டுக்கு முற்றிலும் முரணானது. ஆகவே நாம் அரச அதிபரிடம் மனுவைக் கையளிப்பது மறைமுகமாக இலங்கை அரசை ஏற்று உள்ளகப் பொறிமுறைக்கு இணங்கும் நிலையை ஏற்படுத்திவிடும். எனவே பிழையான கற்பிதங்கள் கற்பிக்கக் கூடாது என்பதற்காக அந்த பேரணிக்குச் செல்ல முடியாத துரஷ்டவசமான நிலமை ஏற்பட்டிருந்தது.

அதுமாத்திரமின்றி அந்தப் போராட்டத்தை ஒழுங்கு செய்த அமைப்பிலிருந்த சில தனிநபர்கள் எங்களுடைய கட்சியினுடைய தலைமைக்கு எதிராக, எந்தவிதமான ஆதாரங்களும் இல்லாது பொய்யான சில குற்றச்சாட்டுக்களைச் சுமத்தியிருந்தார். அவை பற்றிய சில தெளிவுபடுத்தல்களையும் அவர்களிடமிருந்து பெற்றுக்கொள்கின்ற தேவைப்பாடு எமக்கு இருக்கின்றது.

இப்படியான சில நடைமுறைப் பிரச்சினைகளின் காரணமாகதான் நாம் அந்தப் போராட்டத்தில் கலந்துகொள்ளவில்லையே தவிர, அந்தப் போராட்டத்துக்கு எதிராகவோ அல்லது அதனைக் கொச்சைப்படுத்துபவர்களோ நாம் எந்த இடத்திலும் நடந்துகொள்ளவில்லை.

அதேவேளை, காணாமல் ஆக்கப்பட்டோருக்கு கிட்டுப் பூங்காவில் அஞ்சலி செலுத்தப்பட்டது என்று நேற்றைய பத்திரிகை ஒன்றில் வாசித்திருந்தேன். உண்மையை அறியாமலோ அல்லது தவறான புரிதலினாலோ அவ்வாறு செய்தி வெளியிடப்பட்டிருக்கும். அதனை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம். காணாமல் ஆக்கப்பட்ட தங்களுடைய உறவுகளைத் தேடி, போராட்டங்களையும் அமைதிவழி உணவு ஒறுப்புப் போராட்டங்களையும் ஜனநாயக வழியில் முன்னெடுத்து வந்த காலப்பகுதியில் உயிர்நீத்த காணாமல் ஆக்கப்பட்டோரின் அம்மா, அப்பா உள்ளிட்ட உறவுகளை நினைத்துதான் அஞ்சலி நிகழ்வை நாம் அந்த இடத்தில் நடத்தியிருந்தோம். இதில் என்ன தவறு உண்டு? காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நாம் அஞ்சலி நிகழ்வை நடத்தவும் இல்லை – நடத்தப்போவதும் இல்லை – என்றார்.

இதேவேளை, தமிழ் தேசிய மக்கள் முன்னணி தொடர்பில் சில இணையத்தளங்கள் அண்மைக்காலமாக வெளியிடுகின்ற செய்திகள் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது என்றும் சட்டத்தரணி கனகரட்ணம் சுகாஷ் குறிப்பிட்டார்.

“ஊடகங்கள் மக்களுக்கு உண்மையை உரைக்கவேண்டும். ஆனால் நேற்றைய தினம் அதற்கு முன்தினம் சில இணையத்தள ஊடகங்கள் வெளியிட்ட செய்திகள் உண்மைக்குப் புறம்பானவை.

அதிலும் நேற்றைய தினம் சில இணையத்தளங்களில், எமது கட்சியினுடைய தலைவரும் செயலாளரும் சில உறுப்பினர்களுடைய வீடுகளுக்குத் தேடிச் சென்று அவர்களுக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்கு வாய்ப்பு வழங்குவதாக வாக்குறுதியளித்து அவர்களை எமது பக்கம் இழுத்துக் கொண்டிருக்கின்றார் எனச் சாரப்பட உண்மைக்கு மாறான செய்தி வெளியிடப்பட்டிருந்தது.

தமிழ் தேசிய மக்கள் முன்னணி என்பது கொள்கைக்கான அமைப்பு. கொள்கை வழி செயற்படுகின்ற ஓர் அமைப்பு. இது தனிநபர்களை முதன்மைப்படுத்துகின்ற அமைப்புக் கிடையாது. எங்களுடைய கட்சியிலிக்கின்ற உறுப்பினர்களும் ஆதரவாளர்களும் எமது கொள்கையின்பால் ஈர்க்கப்பட்டு வந்தவர்கள். எனவே அவர்களை வீடு வீடாகச் சென்று அழைக்கவேண்டிய ஓர் தேவை கடந்த காலத்தில் ஏற்படவுமில்லை – ஏற்படப்போவதுமில்லை” என்றும் சட்டத்தரணி சுகாஷ் உறுதிபடத் தெரிவித்தார்.

Related Posts