Ad Widget

காணாமற்போனோரின் உறவுகளிள் சாட்சிகளில் சில…

காணாமற்போனோரை கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பருத்தித்துறை பிரதேச செயலர் பிரிவுக்கான காணாமற்போனோரின் உறவுகள் சாட்சியமளிக்கும் அமர்வு பிரதேச செயலகத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்றது.

இதில் சாட்சியமளித்த சிலரின் சாட்சிகள்….

‘இரத்மலானை இந்து கல்லூரியில் சேர்க்கப்பட்ட மகனைக் காணவில்லை’

வவுனியா நீதிமன்ற உத்தரவுக்கமைய சிறுவர் நன்னடத்தை அதிகாரியால் இரத்மலானை இந்துக் கல்லூரியில் சேர்க்கப்பட்ட எனது மகன் அதன் பின்னர் காணாமற்போயுள்ளார்.இது தொடர்பில் நாங்கள் பல இடங்களில் தேடிக்கொண்டிருந்தபோது, புலனாய்வாளர்கள் எனக்கூறி எங்களுக்கு தொலைபேசிக்கு அழைப்பை ஏற்படுத்தியவர்கள் மகனைத் தேடவேண்டாம் என அச்சுறுத்தல் விடுத்ததாக அல்போன்ஸ் அன்ரன்
அலெக்ஸாண்டர் என்பவர் சாட்சியமளித்தார்.

missing1

அவர் மேலும் கூறுகையில்,

எனது மகன் ஜான்ஸன் 18 வயதாக இருக்கும் போது, 2009ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 27ஆம் திகதி விடுதலைப் புலிகளால் பிடித்துச் செல்லப்பட்டார். அதன் பின்னர், நாங்கள் சோன்போ முகாமுக்குச் சென்றோம். அதன்போது, மகன் வீரபுரம் முகாமில் உள்ளார் என எமக்குத் தகவல் கிடைத்தது. ஆனால்,அதை உறுதிப்படுத்த முடியவில்லை.

இந்நிலையில் கடந்த 2011ஆம் ஆண்டு மட்டக்களப்பில் இருந்து ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அந்த அழைப்பில் உங்கள் மகன் மட்டக்களப்பில் உள்ள இக்பால் எனப்படும் ஹோட்டல் பணிபுரிவதாகவும் அந்த ஹோட்டல் முதலாலி றிவாஸ் என்பவரிடம் சென்று மகனை பெற்றுக்கொள்ளுமாறும் கூறப்பட்டது. மகன் வவுனியா வைத்தியசாலைக்கு அருகில் அழுதுகொண்டிருக்கும் போது, மீட்டு வேலைக்குச் சேர்த்ததாக தொலைபேசியில் கதைத்தவர் கூறினார்.

அந்தத் தொலைபேசி அழைப்புக்கிணங்க அங்கு சென்றபோது, அங்கு அந்தக் ஹோட்டல் இருந்துள்ளது. ஆனால் முதலாளியின் பெயர் வேறாக இருந்தது. எங்கள் மகன் அங்கு இல்லையெனக் கூறப்பட்டது. ஏமாற்றத்துடன் திரும்பிய நாங்கள் தொலைபேசி அழைப்புத் தொடர்பில் பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்தோம்.

இதன் பின்னர் கடையில் சீனி வாங்கியபோது, சீனி சுற்றியிருந்த பத்திரிகையில் எனது மகனின் புகைப்படம் இருந்தது. அதில் அம்பேபுஸ்ச முகாமிலிருந்து விடுதலையான சிறுவர் போராளிகள் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதையடுத்து, அந்த முகாமுக்கு அருகிலுள்ள இராணுவ முகாமுக்குச் சென்று அந்த இராணுவ முகாமின் பொறுப்பதிகாரியுடன் கதைத்தோம். அம்பேபுஸ்ச முகாம் மூடப்பட்டுள்ளதாக அவர் கூறினார். எனினும் தனக்கு அந்த முகாமில் பொறுப்பாக இருந்த இராணுவ அதிகாரியை தெரியும் எனக்கூறினார்.எனது மகனின் அங்க அடையாளங்களைக் கொண்டு எனது மகன் அந்த முகாமில் இருந்ததை அம்பேபுஸ்ச இராணுவ பொறுப்பதிகாரி உறுதிப்படுத்தினார். மேலும், எமது மகனுக்கு தலையில் காயம் ஏற்பட்டமையால், அவர் பழைய நினைவுகளை மறந்துள்ளதாகவும் கூறினார்.

மேலும், மகனை வவுனியா நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தியதாக அந்த பொறுப்பதிகாரி கூறினார்.

வவுனியா நீதிமன்ற நீதிபதியிடம் சென்று நாங்கள் கேட்டபோது, அவர் சிறுவர் நன்னடத்தை பிரிவுக்கு கடிதம் எழுதித்தந்தார். அதனைக் கொண்டு சிறுவர் நன்னடத்தை அதிகாரியிடம் சென்ற போது, எமது மகனை கொழும்பு இரத்மலானை இந்துக் கல்லூரியில் சேர்த்துள்ளதாகக் கூறினார். இதனையடுத்து, அங்கு சென்று கேட்டபோது, கல்லூரி அதிபர் அவ்வாறானதொரு மாணவன் அங்கு இல்லையென பதிலளித்தார்.

இது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனிடம் கூறிய போது, நீதிமன்ற உத்தரவுக்கமைய கல்லூரியில் சேர்க்கப்பட்டவர் காணாமற்போனமை தொடர்பில் வழக்கு தாக்கல் செய்வோம் எனக்கூறினார்.

அதன் பின்னர் எங்களுக்கு தொலைபேசி அழைப்பு ஒன்று வந்தது. மகனைத் தேடவேண்டாம், என தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தியவர் மிரட்டினார்.மேலும், பண வசதியில்லாமையால் வழக்குத் தாக்கல் செய்யவில்லை’ என்றார்.

‘முகத்தில் இருந்த தழும்புக்காக மகன் கடத்தப்பட்டார்’

missing2எனது மகனின் முகத்தில் இருந்த தழும்புகாக பல தடவை மகனை விசாரணை செய்திருந்த இராணுவத்தினர். இறுதியில் அவரைக் கடத்திச் சென்றனர் என அல்வாய் வடக்கைச் சேர்ந்த சுப்பிரமணியம் செல்வவதி சாட்சியமளித்தார்.

சுப்பிரமணியம் செல்வராசா (காணாமற்போகும் போது வயது 22) திருமணம் செய்து ஒரு குழந்தைக்கு தந்தையாவார். கடந்த 2006ஆம் ஆண்டு ஜூன் மாதம் 6 ஆம் திகதி, தனது மகனின் பிறந்தநாளுக்காக ஆடை வாங்குவதற்கு நெல்லியடிச் சந்திக்குச் சென்றவரை, நெல்லியடி முடக்காட்டுச் சந்தியில் வைத்து இராணுவத்தினர் பிடித்து பவள் வாகனத்தில் கண்ணைக் கட்டிக் கொண்டு சென்றனர்.

மகன் கைது செய்யப்பட்டதையடுத்து, மறுநாள் எமது வீட்டைச் சுற்றிவளைத்த இராணுவத்தினர், வீட்டைச் சோதனையிட்டனர். அடிக்கடி வந்து எங்களையும் விசாரணை செய்தனர். இதன் பின்னர் அதே வருடம் ஓகஸ்ட் மாதம் மனித உரிமை ஆணைக்குழுவில் நாங்கள் முறைப்பாடு செய்ததையடுத்து, இராணுவத்தினர் எங்கள் வீட்டுக்கு வருவதில்லை.

எனது மகன் சிறுவயதில் விளையாடும் போது, தவறி வீழ்ந்ததில் முகத்தில் தழும்பு ஏற்பட்டது. அந்த தழும்பின் காரணமாக மகனை அடிக்கடி இராணுவத்தினர் அழைத்து விசாரித்தனர். அதற்கான மருத்துவச் சான்றிதழைக் காட்டி, மகன் இராணுவத்தினரால் கைது செய்யப்படுவதில் இருந்து தடுத்தோம். இறுதியில் அவனைக் கைது செய்துவிட்டனர் என்றார்.

அண்ணன் வந்துவிட்டார் தம்பி வரவில்லை

missing3கடற்புலியாகவிருந்த அண்ணன் புனர்வாழ்வு பெற்று தற்போது குடும்பமாக வாழ்கின்றார். ஆனால் வலுக்கட்டாயமாக கொண்டு செல்லப்பட்டு கடற்புலிகளில் இணைக்கப்பட்ட தம்பி இன்னமும் திரும்பவில்லை என தாயார் ஒருவர் தெரிவித்தார்.

‘நாங்கள் வலைஞர் மடத்தில் இருந்தபோது, 2007 ஆம் ஆண்டு கடற்புலிகள் எனது மகன் அன்டனி துசாந்த்தை (அப்போது வயது 18) பிடித்துச் சென்றனர். எனது மூத்த மகன் லோகதாஸ் கடற்புலியில் ஏற்கனவே இருந்தார். தனது தம்பியை கடந்த 2007 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 17ஆம் திகதி கண்ட அண்ணன், தம்பியை வீடு செல்லக்கூறியதுடன், வீட்டுக்கு வந்து தம்பி வந்துவிடுவான் என்றும் கூறிச் சென்றார். மகன் வருவான் என்று எதிர்பார்த்திருந்தபோதும் அவன் வரவில்லை.

2009 ஆம் ஆண்டு புனர்வாழ்வு முகாம் ஒன்றில் நடைபெற்ற நத்தார் கொண்டாட நிகழ்வு தொடர்பில் வெளியான படத்தில் எனது இளைய மகனின் புகைப்படம் இருந்தது. அது தொடர்பில் அப்போதைய ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மறைந்த ஜெயலத் ஜெயவர்த்தன ஆகியோருடன் கலந்துரையாடினோம். முகாம் பொறுப்பதிகாரியுடன் கதைத்த போது, இந்தப் படங்கள் எவ்வாறு கிடைத்தது? எப்படி எடுக்கப்பட்டது என்பது தொடர்பில் விசாரணை நடத்தினரே தவிர எனது மகன் பற்றி எதுவும் கூறவில்லை.

கடற்புலிகளில் இருந்த மூத்த மகன் புனர்வாழ்வு பெற்று வெளியில் வந்து திருமணம் செய்த குடும்பமாக வாழ்கின்றார். ஆனால்,எனது இளைய மகன் இன்னமும் கிடைக்கவில்லை என்றார்.

‘பஸ்ஸில் கொண்டு செல்வதைக் கண்டேன்’

missing4விடுதலைப் புலிகளின் தளபதிகளான எழிலன், விமல் மாஸ்ரர், நரேன், மேனன், ஆகியோரை இராணுவத்தினர் வட்டுவாகலில் இருந்து பஸ்களில் கொண்டு செல்வதை கண்டதாக விடுதலைப் புலிகளின் கடற் புலிகளின் நிதிப்பிரிவில் பொறுப்பாளராகவிருந்த வைரமுத்து ரதீஸ்வரன் எனப்படும் சுமன் என்பவரின் மனைவி சபிதா சாட்சியமளித்தார்.

பாதிரியார் பிரான்சிஸ் தலைமையில் இராணுவத்தினரிடம் சரணடைந்தவர்கள் பற்றிய அதிக முறைப்பாடுகள் காணாமற்போனோரைக் கண்டறிந்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் பருத்தித்துறை பிரதேச செயலக நேற்று திங்கட்கிழமை அமர்வில் உறவினர்களால் கூறப்பட்டது.

இறுதி யுத்தத்தில் பாதிரியார் பிரான்சிஸ் தலைமையில் விடுதலைப் புலிகளின் முக்கிய தளபதிகள் மற்றும் உறுப்பினர்கள் பலர் இராணுவத்தில் சரணடைந்திருந்தமையும், பாதிரியார் உள்ளிட்ட அனைவருக்கும் என்ன ஆனது? என்பது தொடர்பில் இதுவரையில் எவ்வித தகவல்களும் வெளியாகவில்லை.

இந்நிலையில் காணாமற்போனோரைக் கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பருத்தித்துறை பிரதேச செயலர் பிரிவுக்கான அமர்வு திங்கட்கிழமை (14) பிரதேச செயலகத்தில் நடைபெற்ற போது, 4 சாட்சியங்கள் பிரான்சிஸ் தலைமையில் சரணடைந்ததாக கூறினர்.

இதன்போது,சபிதா சாட்சியமளிக்கையில்,

வட்டுவாகலில் 3 பஸ்கள் தரித்து நின்றன. அந்த பஸ்களில் பாதிரியார் பிரான்சிஸ் தலைமையில் சரணடைந்த சுமார் 40 விடுதலைப் புலிகளின் தளபதிகள் ஏற்றப்பட்டனர். என்னை ஓமந்தைக்குச் செல்லுமாறு கூறிய கணவர், தங்களையும் அங்கு தான் கொண்டு வருவார்கள் என்றும் என்னிடம் தெரிவித்தார். இதன்போது, முக்கிய தளபதிகள் பலரையும் அங்கு கண்டிருந்தேன். ஆனால் தற்போது எங்கே என்று தெரியவில்லை’ என்றார்.

கடற்புலிகளின் தளபதிகளில் ஒருவரான திருஞானசுந்தரம் ஜனார்த்தனன் என அழைக்கப்படும் நரேன் என்பவரும் அவரது மனைவியும் 2009 ஆம் ஆண்டு மே 18 ஆம் திகதி பாதிரியார் பிரான்ஸிஸ் தலைமையில் சரணடைந்தனர்.

அவர்களை அனைவரையும் இராணுவத்தினர் பஸ்ஸில் ஏற்றியதுடன், மனைவிக்கு பஸ்ஸில் இடமில்லையெனக் கூறப்பட்டு, அவர் ஓமந்தையில் சரணடைந்து புனர்வாழ்வு பெற்று வெளியில் வந்துள்ளார். ஆனால், நரேன் இன்னமும் விடுவிக்கப்படவில்லை அவரது தாயார் சாட்சியமளித்தார்.

இதேவேளை மாதவன் மாஸ்டர் எனப்படும் விடுதலைப் புலிகளின் தளபதியும் பிரான்சிஸ் தலைமையில் சரணடைந்ததாகவும் அவரது மனைவி சாட்சியமளித்தார்.

‘கதிர்காமத்தம்பி தர்மலிங்கம்’ எனப்படும் விடுதலைப் புலிகளின் தளபதியொருவரும் இவ்வாறு சரணடைந்ததாக அவரது தாயார் தெரிவித்தார்.

Related Posts