Ad Widget

காணாமற்போனவர்கள் குறித்த ரணிலின் கருத்துக்கு மன்னார் பிரஜைகள் குழு கண்டனம்!

போர்க்காலத்தில் காணாமல்போனவர்களில் பலர் உயிருடன் இருப்பதற்கு வாய்ப்பில்லை என்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தேசிய பொங்கல் விழாவில் உரையாற்றியபோது பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, தெரிவித்துள்ள கருத்தை மன்னார் மாவட்ட பிரஜைகள் குழு கண்டித்துள்ளது.

பிரதமரின் இந்தக் கருத்தை எதிர்த்து கொழும்பில் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்துவதற்கு தீர்மானித்திருப்பதாக மன்னார் பிரஜைகள் குழுவின் இணைப்பாளர் அந்தோனி சகாயம் பிபிசியிடம் கூறினார். பொங்கல் விழாவில் பல்வேறு விடயங்கள் பற்றி பேசிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, காணாமல்போனவர்கள் பற்றிய பட்டியலை தயாரிப்பதற்காக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார்.

அந்தப் பட்டியலில் விபரம் இல்லாவிட்டால் காணாமல்போயிருப்பவர்களில் பெரும் எண்ணிக்கையானவர்கள் இன்று உயிருடன் இல்லை என்பதைத் தெரிவிப்பதில் கவலையடைகிறேன். என்ன நடந்தது என்று எனக்குத் தெரியாது. ஆனால், அத்தகைய நிலைமைக்கு இடமிருக்கின்றது என்றார் ரணில்.

பிரதமரின் இந்தக் கருத்து காணாமல்போனவர்களின் உறவினர்களுக்கும் தங்களுக்கும் பெரும் கவலையை ஏற்படுத்தியிருப்பதாக மன்னார் பிரஜைகள் குழுவின் இணைப்பாளர் அந்தோனி சகாயம் கூறினார். காணாமல்போனவர்கள் பற்றிய விபரங்கள் பிரதமருக்கு தெரிந்திருக்கின்றது என்ற சந்தேகம் காணாமல்போயிருப்பவர்களின் உறவினர்கள் மத்தியில் ஏற்பட்டிருப்பதாக தெரிவித்துள்ள சகாயம், இதுபற்றிய விபரங்களை பிரதமரிடமிருந்து தாங்கள் எதிர்பார்த்திருப்பதாகவும் குறிப்பிட்டார்.

Related Posts