Ad Widget

காசாவில் 12 மணி நேர மோதல் இடைநிறுத்தம்

இஸ்ரேலிய அரசாங்கத்துக்கும் ஹமாஸ் குழுவினருக்கும் இடையே உடன்பாடு ஒன்று எட்டப்பட்டதை அடுத்து காசாவில் ஒரு 12 மணி நேரத்துக்கான மோதல் இடைநிறுத்தம் அமலுக்கு வந்துள்ளது.

ஹாமாஸ் தலைவர் ஹாலெத் மெஷால் மற்றும் இஸ்ரேலியப் பிரதமர் பென்யமின் நெதன்யாஹு
ஹாமாஸ் தலைவர் ஹாலெத் மெஷால் மற்றும் இஸ்ரேலியப் பிரதமர் பென்யமின் நெதன்யாஹு

மனிதாபிமான அடிப்படையிலான சின்ன இடைவேளைதான் இதுவென்றும், தாங்கள் தாக்கப்பட்டால் பதிலுக்கு தாக்கவே செய்வோம் என்றும் இஸ்ரேல் எச்சரித்துள்ளது.

இந்த இடைநிறுத்த வேளையிலும்கூட பாலஸ்தீன ஆயுததாரிகள் பயன்படுத்துகின்ற சுரங்கங்களை தாங்கள் தொடர்ந்து அழிக்கவே செய்வோம் என்றும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

இந்த மோதல் இடைநிறுத்தம் ஆரம்பமானதற்கு பிறகும்கூட டஜன் கணக்கான சடலங்கள் மருத்துவமனைகளை வந்தடைந்துள்ளன என்று காசாவின் மருத்துவ அதிகாரிகள் கூறுகின்றனர்.

இதனிடையே காசாவில் கூடுதல் காலத்துக்கான போர்நிறுத்தம் ஒன்றை எட்டுவதற்கான வழிவகைகள் பற்றி ஆராய்வதற்காக அமெரிக்கா, பல ஐரோப்பிய நாடுகள், துருக்கி, கத்தார் போன்றவை பாரிஸ் நகரில் கூடவிருக்கின்றன.

7 நாட்களுக்கு போர்நிறுத்தம் கொண்டுவருவது என்ற அமெரிக்க ராஜாங்க அமைச்சர் ஜான் கெர்ரியின் யோசனையை இஸ்ரேல் நிராகரித்துவிட்ட நிலையில் இந்த கூட்டம் நடக்கிறது.

மோதலில் ஈடுபட்டுள்ள இரண்டு தரப்பும் தணிந்து வராத வரை நீடிக்கக்கூடிய போர்நிறுத்தத்தை எட்டுவதென்ற சாத்தியம் இல்லை என பிபிசியின் பாரிஸ் செய்தியாளர் கூறுகிறார்.

Related Posts