Ad Widget

காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை பாகிஸ்தான் வசமாகி விட்டது! ஜேவிபி

காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை இன்று பாகிஸ்தானுக்கு சொந்தமான சீமெந்து தொழிற்சாலையாக செயற்பட்டு வருகிறது. அத்தொழிற்சாலையின் இரும்புகள் 1.8 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு விற்பனை செய்து கொள்ளுப்பிட்டியில் 25 மாடி அலுவலகம் அமைக்கப்படுவதாக ஜே.வி.பி பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹத்துன்நெத்தி நேற்று பாராளுமன்றத்தில் தகவல் வெளியிட்டார்.

பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற 2016 ஆம் நிதியாண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தின் கைத் தொழில் மற்றும் வாணிப அலுவல்கள் அரச தொழில்முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சுக்கள் மீதான குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

சுனில் ஹத்துன்நெத்தி எம்.பி. இங்கு மேலும் கூறுகையில், அமைச்சர்களான ரிசாட் பதியுதீன் மற்றும் கபீர் ஹாசீம் ஆகிய இருவருக்கும் வழங்கப்பட்டுள்ள அமைச்சுக்களின் கீழான நிறுவனங்கள் நட்டத்தை எதிர்கொள்கின்ற மற்றும் மூடிவிட வேண்டிய நிறுவனங்களுமே ஒப்படைக்கப்பட்டுள்ளன. வாழைச்சேனை கடதாசித் தொழிற்சாலையானது இன்று மரணித்துவிட்ட தொழிற்சாலையாக உள்ளது.

ஆனால் அதற்கான தலைமைக் காரியாலயம் கொள்ளுப்பிட்டியில் இருக்கிறது. அதேபோன்று காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையானது பெருமளவிலான தொழில் வழங்கும் தொழிற்சாலையாக இருந்து வந்த போதிலும் அது தற்போது பாகிஸ்தானின் தொழிற்சாலையாகவே இயங்கிவருகிறது.

அதுமாத்திரமின்றி அங்குள்ள இரும்புகள் 1.8 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையின் இரும்புகள் விற்கப்பட்ட பணத்திலிருந்து தான் அதன் தலைமைக்காரியாலயம் 25 மாடி கொள்ளுப்பிட்டியில் அமைக்கப்படுகிறது. சீமெந்து தொழிற்சாலையில் இரும்புகளை விற்பனை செய்து 25 மாடி அலுவலகம் அமைக்கப்படுகிறது.

மேலும் காங்கேசன் துறை சீமெந்து தொழிற்சாலை விவகாரம் தொடர்பில் அமைச்சர் ரிசாட் பதியுதீன் ஆராய்ந்து பார்க்க வேண்டும் என்றார்.

Related Posts