இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு தங்கம் கடத்த முற்பட்டனர் என்ற சந்தேகத்தில் காங்கேசன்துறையில் இருந்து புதன் கிழமை நாகைபட்டினம் பயணிக்கவிருந்த 26 பயணிகள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர்
காங்கேசன்துறை – நாகப்பட்டினம் இடையே இடம்பெறும் சிவகங்கை பயணிகள் கப்பல் சேவையில் நேற்று காலை நாகைபட்டினத்தில் இருந்து 117 பயணிகள் காங்கேசன்துறையை வந்தடைந்தனர். இவ்வாறு வந்த கப்பலில் காங்கேசன்துறை துறைமுகத்தில் இருந்து
146 பயணிகள் நாகைபட்டினம் பயணிக்க காங்கேசன்துறை துறைமுகத்தில் காத்திருந்தனர். இவ்வாறு காத்திருந்த 146 பயணிகளில் 26 பேரை தங்கம் கடத்த முற்பட்டனர் என்ற சந்தேகத்தில் பேரில் சுங்கத் திணைக்கள அதிகாரிகள் அனுமதிக்காது தடுத்து வைத்துள்ளனர்.
முதற்கட்ட சோதனையில் இரண்டு இந்தியப் பயணிகளிடமிருந்து தலா 100 கிராம் வீதம் தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.மற்ற பயணிகள் தங்கத்தை விழுங்கி கடத்த முயன்றிருக்கலாம் என்ற பலத்த சந்தேகத்தின் பேரில், தடுத்து வைக்கப்பட்ட 26 பேரும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஸ்கேனிங் (Scanning) பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டனர். இது வரை 17 பேர் மீது மேற்கொள்ளப்பட்ட மருத்துவப் பரிசோதனையின் முடிவில், 2 இலங்கைப் பெண்கள் மற்றும் 4 இந்திய ஆண்கள் என மொத்தம் 6 பேர் தங்கக் கட்டிகளை விழுங்கியுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது மிகுதி 9 பேருக்கான் சோதனை நடைபெறுவதாக தெரியவந்துள்ளது. விழுங்கியவர்களின் வயிற்றிலிருந்து தங்கத்தை மீட்கும் நடவடிக்கைகள் தற்போது எடுக்கப்பட்டு வருகின்றன.இலங்கை சுங்கத் திணைக்கள அதிகாரிகள் இதுகுறித்த மேலதிக விசாரணைகளை தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.