Ad Widget

காங்கேசன்துறையிலிருந்து காரைக்கால் கப்பல்சேவைக்கு அரசாங்கம் அனுமதி!

காங்கேசன்துறை துறைமுகத்திலிருந்து, தமிழ் நாடு காரைக்கால் துறைமுகத்துக்கு பயணிகள் கப்பல் சேவையை நடாத்துவதற்கு சிறீலங்கா அரசாங்கம் அனுமதி அளித்துள்ளது.

இதற்கிணங்க, காங்கேசன்துறையிலிருந்து, காரைக்காலுக்கு கப்பல்சேவை நடைபெறவுள்ளது. எதிர்வரும் ஜனவரி மாதம் 2ஆம் திகதியிலிருந்து 12ஆம் திகதிவரை திருவெம்பாவைத் திருவிழா சிதம்பரத்தில் சிறப்பாக கொண்டாடப்படவுள்ளது.

திருவெம்பாவின் இறுதி நாளான, திருவாதிரையன்று ஆருத்ரா தரிசனமும் நடைபெறவுள்ளது.

வடமாகாணத்தில் உள்ள இந்துக்கள் இந்த திருவிழாவில் பங்கேற்பதற்கு வசதியாக, காங்கேசன்துறை துறைமுகத்தில் இருந்து சிதம்பரத்துக்கு அருகில் உள்ள காரைக்கால் துறைமுகத்துக்கு பயணிகள் கப்பல் சேவை ஒன்று நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்தக் கப்பல் சேவைக்கு ஒழுங்குகளை செய்து தருமாறு சிவசேனை அமைப்பின் அமைப்பாளர் மறவன்புலவு சச்சிதானந்தன், வடமாகாண ஆளுநர் ஊடாக சிறிலங்கா அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்திருந்தார்.

வடக்கு மாகாண ஆளுநர் இந்தக் கோரிக்கையை சிறீலங்கா ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேனவிடம் முன்வைத்த நிலையில், இதற்கு பாதுகாப்பு அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது.

இதனயைடுத்து, 32 ஆண்டுகளுக்குப் பின்னர் முதன் முறையாக யாழ்ப்பாணத்திலிருந்து தமிழ்நாட்டுக்கு முதன்முறையாக கப்பல் சேவை நடைபெறவுள்ளது.

இந்தக் கப்பல் பயணத்துக்கு அதில் பயணம் செய்பவர்களே கப்பல் கட்டணத்திலிருந்து சகல தேவைகளையும் பூர்த்திசெய்யவேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், விரைவில் வடக்கு மாகாணத்திலிருந்து தமிழ் நாட்டுக்கு கப்பல் சேவை ஆரம்பிக்கப்படும் என வடக்கு மாகாண ஆளுநர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

Related Posts