Ad Widget

காங்கேசன்துறையின் ஒரு பகுதியை விடுவிப்பதற்கு படையினர் இணக்கம்

தெல்லிப்பளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட காங்கேசன்துறை நடேஸ்வரா கல்லூரி மற்றும் அதனை அண்டிய சில பகுதிகளை விடுவிப்பதற்கு பாதுகாப்பு தரப்பினர் இணங்கியிருப்பதாக மாவட்ட செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நடேஸ்வரா கல்லூரி 26 வருடங்களாக பல இன்னல்களுக்கு மத்தியில் தெல்லிப்பளை பகுதியில் இயங்கி வருகின்றது. 1990ஆம் ஆண்டு தொடக்கம் உயர்பாதுகாப்பு வலயத்துக்குள் அப்பகுதி மக்களுடைய காணிகளும் பாடசாலைகளும் உள்ளடங்கியுள்ளன.

தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டதன் பின்னர், வலிவடக்கில் படிப்படியாக மக்களுடைய காணிகள் விடுவிக்கப்பட்டு வருகின்றன.

இதன் ஒரு கட்டமாக நடேஸ்வரா கல்லூரி மற்றும் அதனை அண்டிய 115 ஏக்கருக்கு மேற்பட்ட காணிகள் விரைவில் விடுவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேலும் ‘தல்செவன’ விடுதியை அண்மித்த பகுதிகளைச் சுற்றியிருந்த பாதுகாப்பு வேலிகள் உள் நகர்த்தப்பட்டு, புதிய காவலரண்கள் அமைக்கும் பணியில் படையினர் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Posts