திருகோணமலை – மூதூர் பிரதேச சபைக்கு உட்பட்ட படுகாடு விவசாயிகளை இலக்கத்தகடு இல்லாத உழவு இயந்திரம் ஒன்றில் சென்ற சிங்களவர்கள் கழுத்தில் கத்தி வைத்து அச்சுறுத்தியதாக முறையிடப்பட்டுள்ளது.
ஆறு ஆண்டுகளின் பின்னர் சிங்கள விவசாயிகளின் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் தமது விவசாய நிலங்களிற்கு கடந்த திங்கட்கிழமை சென்ற நிலையில் இன்று வியாழக்கிழமை இந்த சம்பவம் இடம்பெற்றதாக பாதிக்கப்பட்ட விவசாயிகள் தெரிவித்தனர்.
இதேவேளை அச்சமடைந்த விவசாயிகள் தமது காணிகளை விட்டு வெளியேறியுள்ளதாகவும் எதிர்வரும் திங்கட்கிழமை வரை காணிக்குள் செல்லவேண்டாம் என பொலிஸார் எச்சாரிக்கை விடுத்ததாகவும் பாதிக்கப்பட்ட விவசாயிகள் குறிப்பிட்டனர்.
எனினும் அனைத்து விவசாயிகளும் ஒன்றிணைந்து எதிர்வரும் திங்கட்கிழமை தமது பாரம்பரிய காணிக்குள் மீண்டும் செல்லவுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.
2009 ஆம் ஆண்டின் பின்னர் தமிழ் மக்களின் பாரம்பரியமாக விளங்கிய படுகாடு பிரதேசத்தில் உள்ள விவசாய காணிகளில் சிங்கள விவசாயிகள் படையினரின் ஒத்துழைப்புடன் அத்துமீறி விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தனர்.
தமது காணிகள் என அடையாளப்படுத்தக்கூடிய ஆவணங்களை அரச அதிகாரிகள் உறுதிப்படுத்திய நிலையில், கடந்த திங்கட்கிழமை தமது நிலங்களில் விவசாய நடவடிக்கையை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை தாங்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள், தமிழ் அரசியல்வாதிகள் எந்தவிதமான நடவடிக்கைகளையும் எடுக்கவில்லையென பாதிக்கப்பட்ட விவசாயிகள் தெரிவித்தனர்.
அதேவேளை கிழக்கு பிராநிதிய பொலிஸ் மா அதிபா் மற்றும் திருகோணமலை மாவட்ட செயலாளர் ஆகியோரிடம் முறையிட்டுள்ளதாக தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உப்பினர் துரைரெட்ணசிங்கம் தெரிவித்தார்.