Ad Widget

கழிவு எண்ணெய் விவகாரம்;நோர்தன் பவர் நிறுவனத்திற்கு இடைக்காலத் தடை விதிப்பு

சுன்னாகம் பிரதேசத்தில் குடிநீரில் கழிவு எண்ணெய் கலப்பிற்கு காரணமாக நிறுவனம் என குற்றஞ்சாட்டப்பட்டுள்ள நோர்தன் பவர் நிறுவனத்தின் செயற்பாடுகளை தற்காலிகமாக இடைநிறுத்துமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்காலத் தடையுத்தரவை பிறப்பித்துள்ளது.

சூழல் மற்றும் இயற்கை ஆய்வு மத்திய நிலையம் சார்பாக பேராசிரியர் ரவீந்திர காரியவசம் தாக்கல் செய்திருந்த அடிப்படை மனித உரிமை மீறல் மனுவை நேற்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக் கொண்ட உச்சநீதிமன்றம் இந்த இடைக்காலத் தடையுத்தரவை பிறப்பித்திருக்கிறது.

2010ஆம் ஆண்டு சுன்னாகம் பகுதியில் அமைக்கப்பட்ட நோர்தன் பவர் மின் உற்பத்தி நிலையத்தினால் வெளியேற்றப்படுகின்ற கழிவு எண்ணெய் காரணமாக 2012ஆம் ஆண்டு சுன்னாகம் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் உள்ள குடிநீர் கிணறுகள் பாதிக்கப்பட்டன.

இதன் காரணமாக அப்பகுதிகளில் வாழ்கின்ற மக்கள் குடிநீருக்கு பெரும் சிரமத்தை தற்போதும் எதிர்கொண்டுவருவதோடு, இந்த கழிவு கலந்த குடிநீரைப் பருகுவதனால் உயிராபத்துக்களும், பக்கவிளைவுகளும் ஏற்படக்கூடிய ஆபத்து இருப்பதாகவும் எச்சரிக்கப்பட்டது.

இந்த நிலையில் நோர்தன் பவர் நிறுவனத்தின் செயற்பாட்டிற்கு எதிராக சூழல் மற்றும் இயற்கை ஆய்வு மத்திய நிலையம் சார்பாக பேராசிரியர் ரவீந்திர காரியவசம் அடிப்படை மனித உரிமை மீறல் மனுவொன்றை தாக்கல் செய்தார்.

மத்திய சூழல் அதிகார சபை, இலங்கை மின்சார சபை, வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன், சுன்னாகம் நோர்தன் பவர் நிறுவனம், இலங்கை முதலீட்டுச்சபை, வலிகாமம் பிரதேச சபைத் தலைவர் மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் இந்த மனுவில் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர்.

பிரதம நீதியரசர் கே. ஸ்ரீபவன் தலைமையிலான மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களான புனநேக அலுவிஹாரே, பிரியந்த ஜயவர்தன ஆகியோர் தலைமையிலான குழு முன்பாக நேற்றைய தினம் இந்த மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இந்த நிலையில் நோர்தன் பவர் நிறுவன நடவடிக்கைகளை இடைநிறுத்துமாறு இடைக்காலத் தடையுத்தரவை பிறப்பித்த மேன்முறையீட்டு நீதிமன்றம், இந்த மனு மீதான அடுத்த விசாரணையை எதிர்வரும் ஜனவரி மாதம் 30ஆம் திகதிக்கு ஒத்திவைத்தது.

இதேவேளை நோர்தன் பவர் நிறுவனத்தின் நடவடிக்கைக்கு எதிராக வலிகாமம், சுன்னாகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும், கொழும்பிலும் தூய நீருக்கான போராட்டத்தில் மக்கள் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts