Ad Widget

களுகங்கை, நில்வள கங்கை, அத்தனகளு ஓயாவின் நீர்மட்டம் உயர்வு : மக்களுக்கு எச்சரிக்கை

கொழும்பு மற்றும் நாட்டின் பல பகுதிகளில் பெய்துவரும் கடும் மழை காரணமாக களுகங்கை, நில்வள கங்கை மற்றும் அத்தனகளு ஓய ஆகிய ஆறுகளின் நீர்மட்டம் மீண்டும் உயர்வடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

களுகங்கை பகுதியில் உள்ள மில்கந்த, பட்டுபவுள, நில்வள கங்கையின் பகுதியில் உள்ள பனடுகம, அத்தனகளு ஓயா பகுதியில் உள்ள துன்மலே போன்ற பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் ஊடக பேச்சாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக குறித்த பகுதியில் வாழும் மக்கள் அவதானமாக செயற்பட வேண்டுமெனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதேவேளை மஸ்கெலியாவில் ஏற்பட்ட மண்சரிவினால் 200 பேர் இடபெயர்வு

மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காட்மோர் தோட்டத்தில் புரோக்மோர் பிரிவில் இன்று காலை 9 மணியளவில் ஏற்பட்ட மண்சரிவினால் 200 பேர் இடபெயர்ந்துள்ளனர்.

குடியிருப்பு பகுதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதுடன் குடியிருப்பு சுவர்களிலும் வெடிப்புக்கள் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மண்சரிவு ஏற்பட்டுள்ள பகுதியிலுள்ள 41 குடும்பங்களை சேர்ந்த 200 பேரை உடனடியாக வெளியேற்றி தோட்ட ஆலயம் மற்றும் சிறுவர் நிலையத்திலும் தற்காலிகமாக தங்கவைக்கப்பட்டுள்ளதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர்.

Related Posts