Ad Widget

களியாட்டங்களை தவிர்க்குமாறு கோரிக்கை

நத்தார் விழாவில், போலிக் கொண்டாட்டங்களைத் தவிர்ப்போம் என்று கூறியுள்ள இலங்கை தேசிய கிறிஸ்தவ மன்றம், காலி முகத்திடலில் அமைக்கப்பட்டுள்ள மிகப் பிரமாண்டமான நத்தார் மரம் தொடர்பிலும் தமது விமர்சனத்தை முன்வைத்துள்ளது.

‘நத்தார் விழா’ எனக் கொண்டாடப்படும், இயேசு கிறிஸ்துவின் பிறப்பானது, ஒரு நம்பிக்கையின் கொண்டாட்டமாகும். வெளிப்புற கிறிஸ்மஸ் அலங்காரங்கள், உச்ச அளவில் விளம்பரப்படுத்தப்படும் போலித்தனமான களியாட்டங்கள் போன்றச் செயற்பாடுகள், கிறிஸ்மஸ் விழாவின் உண்மையான விழுமியங்களை சாகடிக்கின்றன.

எனவே, இந்த விழாக் காலத்தில் எமது மக்களை சற்று நிதானித்து, சிந்தித்து, இக்காலத்தில் எம்மைச் சுற்றியுள்ள துன்பப்படும் மக்களின் அழுகுரல்களுக்கும் வேதனைகளுக்கும் செவிமடுக்குமாறு வேண்டுகிறோம்’ என்றும் அம் மன்றம் கோரியுள்ளது.

அம்மன்றமானது, நத்தார் விழாக் குறித்து வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையேலியே, இவ்வாறு குறிப்பிட்டுள்ளது. அவ் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

‘போலிக் களியாட்டத்துக்கு உடந்தையாக, காலிமுகத்திடலில் அமைக்கப்பட்டுவரும் இலங்கையின் உயர்ந்த நத்தார் மரம் குறித்து நாம் கவலையடைகிறோம். இந்த இராட்சத நத்தார்மரம் அமைக்கப்பட்டுள்ள இடம் குழப்பகரமானதும், அபாயகரமானதுமாய் உள்ளது. இதன் ஆடம்பரமும், அலங்காரமும் ‘துறைமுகப்பட்டிண’ அபிவிருத்தியின் பின்னணியிலுள்ள மனிதபாவத்தின் மேட்டிமையைச் சூட்சிகரமாக மூடிமறைக்கிறது.

இந்த அபிவிருத்தித் திட்டமானது பல கேள்விகளுக்குப் பதிலளிக்க முடியாது இருக்கின்ற அதேவேளையில், எமது சுற்றாடலையும், எமது மக்களின் வாழ்வாதாரத்தையும், இடம்பெயரும் மக்களுக்கு மேலும் பல தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை நாம் மறுக்கலாகாது.

அநாவசிய வீண்விரயத்தைத் தவிர்ப்போம். போலி கொண்டாட்டத்தைத் தவிர்ப்போம். காலிமுகத்திடலில் அமைத்துள்ள மிக உயர்ந்த நத்தார்மரத்தின் மாயவலையிலிருந்து எம்மை நாம் விடுவித்துக் கொள்வோம்.

பெரும் மாளிகைகளைத் தரிசிப்பதைத் தவிர்த்து, மனித வேதனைகளை சித்தரிக்கும் மாட்டுக் கொட்டில்களில் அவரை தரிசிப்போம். கீழ்மட்டத்தில் தள்ளப்பட்டு, தமது வாழ்வின் மாண்புக்காக ஏங்கித் தவிக்கும் ஏழை எளியோருடன், நாம் இந்த நத்தார் கொண்டாட்டக் காலங்களில் ஒன்றிப்போம்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Posts