Ad Widget

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைகள் நாளை ஆரம்பம்! பரீட்சைகள் ஆணையாளரின் செய்தி இணைப்பு

2013ஆம் ஆண்டிற்கான க. பொ. த. சாதாரணதரப் பரீட்சைகள் நாளை 11ஆம் திகதி செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகிறன. இவ்வருடம் 5 இலட்சத்து 42 ஆயிரத்து 260 பரீட்சார்த்திகள் பரீட்சைக்கு தோற்றவிருப்பதாக பரீட்சைகள் ஆணையாளர் புஸ்பகுமார தெரிவித்தார்.

நாடு முழுவதிலும் 4 ஆயிரத்து 48 பரீட்சை நிலையங்களில் பரீட்சைகள் நடைபெறும். இவற்றுக்கு மேலதிகமாக 537 இணைப்பு நிலையங்கள் 33 பிராந்திய சேகரிப்பு நிலையங்களும் ஸ்தாபிக்கப்பட்டிருப்பதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் கூறினார்.

எதிர்வரும் 20 ஆம் திகதி வியாழக்கிழமை வரை பரீட்சைகள் தொடரவுள்ளன. இம்முறை 3 இலட்சத்து 87 ஆயிரத்து 593 பாடசாலை பரீட்சார்த்திகளும் ஒரு இலட்சத்து 54 ஆயிரத்து 667 தனிப்பட்ட பரீட்சார்த்திகளும் பரீட்சைக்கு தோற்றவுள்ளனர்.

தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளுக்கு மேலதிகமாக கொழும்பு சிறைச்சாலையிலும் அம்பேபுஸ்ஸ சிறுவர் நன்னடத்தை நிலையத்திலும் தலா ஒவ்வொரு பரீட்சை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அத்துடன் மாற்றுதிறன் கொண்ட மாணவர்களுக்காக இரத்மலானை, தங்காலை, மாத்தறை மற்றும் சிலாபம் ஆகிய பிரதேசங்களில் விசேட பரீட்சை நிலையங்கள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்தார்.

பரீட்சைக்கு தோற்றும் பாடசாலை மற்றும் தனிப்பட்ட பரீட்சார்த்திகள் நாளை காலை 8 மணிக்கு பரீட்சை நிலையத்திற்கு சமுகமளித்தாக வேண்டுமென பரீட்சைகள் ஆணையாளர் புஸ்பகுமார கேட்டுள்ளார்.

நாளை காலை 8.30 மணிக்கு பரீட்சைகள் ஆரம்பமாவதால் மாணவர்கள் 8.15 மணியளவில் தமக்குரிய ஆசனங்களில் சுட்டெண் அடிப்படையில் அமர்த்தப்படுவரெனவும் அவர் கூறினார். பரீட்சார்த்திகள் தமது ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்தும் வகையில் அடையாள அட்டை அல்லது வாகன அனுமதிப்பத்திரம், பரீட்சை அனுமதி அட்டை ஆகியவற்றை தம்முடன் எடுத்துச் செல்ல வேண்டியது அவசியம்.

மேலும் பரீட்சார்த்திகள் கையடக்க தொலைபேசிகளை பரீட்சை நிலையத்திற்குள் கொண்டு செல்வது முற்றாகத்தடை செய்யப்பட்டுள்ளதெனவும் பரீட்சைகள் ஆணையாளர் குறிப்பிட்டார்.

ஆட்பதிவு திணைக்களத்திற்கு விண்ணப்பித்தும் இதுவரை தேசிய அடையாள அட்டை கிடைக்கப்பெறாத மாணவர்களுக்கு மாத்திரம் இவ்வருடம் விசேட சலுகைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இதன்படி பாடசாலை பரீட்சார்த்திகள், தமது பாடசாலை அதிபர் முன்னிலையில் கையொப்ப மிடப்பட்டு அவரினால் அத்தாட்சிப்படுத்தப்பட்ட இரண்டு புகைப்படங்களை பரீட்சை நிலையத்தில் சமர்ப்பிப்பதன் மூலம் பரீட்சைக்கு தோற்ற முடியும்.

இதேவேளை தனிப்பட்ட பரீட்சார்த்திகளும் தமது வதிவிடத்திற்குப் பொறுப்பான கிராம சேவகரினால் அத்தாட்சிப்படுத்தப்பட்டு பிரதேச செயலாளரினால் கையொப்பமிடப்பட்ட இரண்டு புகைப்படங்களை சமர்ப்பித்து பரீட்சை எழுத முடியும்.

நாளை முதல் எதிர்வரும் 20 ஆம் திகதி வரையான காலப் பகுதிக்குள் பரீட்சை நடைபெறும் எந்தவொரு பாடசாலையிலும் வேறு பரீட்சைகளோ, கூட்டங்களோ நிகழ்வுகளோ நடத்தப்பட கூடாது என்பதுடன் பேன்ட் வாத்திய கருவிகள் உபயோகிக்க கூடாதெனவும் குறிப்பிட்டு கல்வி அமைச்சின் செயலாளரினால் குறிப்பிட்ட பாடசாலைகளுக்கு சுற்று நிருபங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

மேலும் பாடசாலை சுற்று விளாகத்தில் பரீட்சை சமயங்களில் ஒலிபெருக்கியினை உபயோகிக்க அனுமதிக்க கூடாதென பொலிஸ் நிலையங்களுக்கு அறிவிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

Related Posts