Ad Widget

கல்வயல் முதியோர் பகல் பராமரிப்பு நிலையம் தேசிய மட்டத்துக்கு தெரிவு

கொழும்பு சமூக சேவைகள் திணைக்களத்தில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (12) நடத்தப்படவுள்ள தேசிய ரீதியில் சிறந்த முதியோர் பகல் பராமரிப்பு நிலையங்களுக்கான போட்டியில் பங்குபற்றுவதற்கு யாழ்.மாவட்டம் சார்பாக சண்டிலிப்பாய் கல்வயல் முதியோர் பகல் பராமரிப்பு நிலையம் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட சமூக சேவைகள் உத்தியோகத்தர் இன்று செவ்வாய்க்கிழமை (09) தெரிவித்தார்.

வடமாகாண முதியோர் பகல் பராமரிப்பு நிலையங்களுக்கிடையிலான போட்டியில் முதலிடத்தை பெற்றுக்கொண்டதன் அடிப்படையில், தேசியமட்ட போட்டிகளில் சண்டிலிப்பாய் கல்வயல் முதியோர் பகல் பராமரிப்பு நிலையம் கலந்துகொள்ளவுள்ளது.

மேற்படி போட்டியானது சமூக சேவைகள் அமைச்சால், எதிர்வரும் ஒக்டோபர் மாதம் கொண்டாடப்படவுள்ள முதியோர் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்தபோட்டியில், முதியோர் பராமரிப்பு தொடர்பிலான ஒவ்வொரு செயற்பாடுகளுக்கும் புள்ளிகள் வழங்கப்பட்டு சிறந்த முதியோர் பகல் பராமரிப்பு இல்லங்கள் தெரிவு செய்யப்படும்.

சண்டிலிப்பாய் கல்வயல் முதியோர் பகல் பராமரிப்பு நிலையத்தில் 100 வரையான முதியவர்கள் அங்கத்தவர்களாக இருப்பதுடன், அங்கத்தவர்கள் தங்கள் பகல் பொழுதை மகிழ்ச்சியாக கழிப்பதற்கு பத்திரிகைகள் வாசிப்பதற்கான ஒழுங்குகள், மற்றும் தொலைக்காட்சி பார்ப்பதற்கான ஒழுங்குகள் என்பன செய்யப்பட்டுள்ளது.

மேலும், முதியவர்களுக்கு காலையில் தேநீருடன், பணிஸ் வழங்கப்படுவதுடன் சில வேளைகளில் நல்லுள்ளம் கொண்டவர்களின் நிதியுதவியில் மதியபோசனமும் வழங்கப்படுகின்றது.

தேசிய ரீதியில் சிறந்த முதியோர் பகல் பராமரிப்பு நிலையங்களுக்கான போட்டியில் கடந்த 2013 ஆம் ஆண்டு சண்டிலிப்பாய் கல்வயல் முதியோர் பகல் பராமரிப்பு நிலையம் இரண்டாமிடம் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts