Ad Widget

கல்லுண்டாய் மக்கள் இன்றும் ஆர்ப்பாட்டத்தில்

யாழ்.மாநகர சபை பகுதிகளில் இருந்து சேகரிக்கப்படும் கழிவுகள் கல்லுண்டாய் மற்றும் காக்கைதீவு பகுதியில் கொட்டப்படுவதை நிரந்தரமாக நிறுத்தக்கோரி நவாலி, ஆனைக்கோட்டை பகுதி மக்கள் தொடர்ந்து இன்று செவ்வாய்க்கிழமையும் (17) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இப்பகுதியில் யாழ்.மாநகர சபையின் ஆளுகைக்குட்பட்ட இடத்தில் மாநகர சபையால் கழிவுகள் கொட்டப்பட்டு வந்தன. தொடர்ந்து கல்லுண்டாய் வீதியின் இரு மருங்கிலும் பகுதி பகுதிகளாக கழிவுகள் கொட்டப்படுகின்றன. இதனை நிறுத்தி வேறு இடத்தில் கழிவுகள் கொட்டப்படுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு யாழ்.மாநகர சபைக்கு வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபையால் சில மாதங்களுக்கு முன்பு வேண்கோள் விடுக்கப்பட்டிருந்தது.

இதனை கவனத்தில் கொள்ளாது அதேயிடத்தில் கழிவுகள் கொட்டப்படுவதால், கழிவு கொட்டுவதை நிறுத்தக்கோரி பாதிக்கப்பட்ட அப்பகுதி மக்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை (15) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டம் நடைபெற்ற இடத்துக்கு அன்றைய தினம் சென்றிருந்த மாநகர ஆணையாளர் செல்லத்துரை பிரணவநாதன், இப்பகுதிகள் மாநகர சபைக்கு சொந்தமான பகுதிகள் என்றும் எனவும் கழிவுகள் கொட்டுவதை நிறுத்தமுடியாது என்றும் கூறினார்.

காலம் கடத்தாமல் எமது பிரச்சினைகளை கவனத்திலெடுத்து நிரந்தர தீர்வு தருவதற்கு வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்குமாறு கூறி மக்கள் செவ்வாய்க்கிழமையும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுகின்றனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள்,

கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட எம்மை யாழ்.மாநகர சபை ஆணையாளர் மதிக்காமல் அலட்சியம் செய்தமை வருத்தமளிக்கிறது. எமது சிரமங்களை புரிந்து கொள்ளவேண்டும். நாமும் எமது பிள்ளைகளும் இந்த கழிவுகளைக் கடந்து வரும் அசுத்தக்காற்றை எவ்வாறு சுவாசிப்பது. அது மட்டுமல்லாமல் இந்த வீதியால் செல்பவர்களால் இங்கு எழும் துர்நாற்றத்தை தாங்கிக்கொள்ள முடிவதில்லை.

அருகில் கடல் இருப்பதால் எமது பகுதிகளிலுள்ள கிணறுகளின் குடிநீர் உப்பு கலப்பு உள்ளது. கடலை அண்டிய பகுதிகளில் கழிவுகள் கொட்டப்படுவதால் நோய்க்கிருமிகள் நீரில் கலக்கும் அபாயம் உள்ளது. ஆகவே எமக்கு தீர்வு தேவை. கழிவு கொட்டுவதை நிரந்தரமாக நிறுத்தவேண்டும்’ என்றனர்.

கல்லுண்டாய் வீதியின் இரு மருங்கிலும் கொட்டப்பட்டுள்ள கழிவுகள் செவ்வாய்க்கிழமை (17) எரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

யாழ்.மாநகர சபை பகுதிகளில் கழிவு அகற்றும் நடவடிக்கை சபையால் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக கூறிய மாநகர ஆணையாளர், அரச, அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் குடியிருப்பாளர்கள் வீதியில் கழிவுகளை வீசி சுற்றுச்சூழலை அசுத்தமாக்கவேண்டாம் எனவும் உரிய முறையில் திண்ம கழிவுகளை பேணுமாறும் தெரிவித்தார்.

Related Posts