Ad Widget

கலப்பினக் கால்நடைகள்மீது காட்டுகின்ற அக்கறையை நாட்டு இனங்களின் மீதும் காட்டுங்கள் : பொ.ஐங்கரநேசன்

நாங்கள் எவ்வாறு இந்த மண்ணின் சொந்தக்காரர்களோ, அதேபோன்று இந்த மண்ணுக்கே உரித்தான கால்நடைகளும் உள்ளன. கலப்பு இனங்களின் வருகையோடு நாட்டுப் பசுக்கள், நாட்டு ஆடுகள், நாட்டு நாய்கள் மீதான அக்கறை குறைந்துபோக, அவை இன்று கவனிப்பார் இல்லாமல் தெருவோர விலங்குகளாக அலைந்து கொண்டிருக்கின்றன. கலப்பினக் கால்நடைகள்மீது காட்டுகின்ற அக்கறையை எமது மண்ணின் இயற்கைச் சொத்தான இவற்றின் மீதும் காட்டுங்கள் என்று வடக்கு கால்நடை அபிவிருத்தி அமைச்சர் பொ.ஐங்கரநேசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

01

வவுனியாவில், சாஸ்திரிகூழாங்குள பொதுநோக்கு மண்டபத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (18.10.2016) கால்நடை மருத்துவ நடமாடும் சேவை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அமைச்சர் பொ.ஐங்கரநேசன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து அவர் அங்கு உரையாற்றுகையில்,

கலப்பின மாடுகளும் கலப்பின ஆடுகளும் அதிக பாலைத் தரக்கூடியவை. ஆனால், நாட்டு இனக் கால்நடைகள் குறைந்தளவே பால் தந்தாலும் அவற்றின் பால் கூடுதல் போசணையைக் கொண்டதாக இருக்கின்றன. இவற்றின் எருக்கள் கூடுதல் சத்துக் கொண்டவை.

கலப்பு இனங்கள் மனிதன் தனது விருப்பத்துக்கு ஏற்ப செயற்கையாகத் தேர்வு செய்து உருவாக்குபவை. ஆனால், நாட்டு இனங்கள் இயற்கைத் தேர்வால் பரிணாமித்தவை என்பதால் எமது நாட்டின் தட்ப வெப்ப நிலைக்குப் பழக்கப்பட்டவையாக உள்ளன. இதனாலேயே ஜேர்சி போன்ற சீமைப் பசுக்களைவிட வன்னி மாடுகள் கூடுதலான நோய் எதிர்ப்பு சக்தியைக் கொண்டுள்ளன.

எமது நாட்டு நாய்களைத் தெருநாய்கள் அல்லது பறைநாய்கள் என்று நாம் இழிவாகவே பெயரிட்டிருக்கிறோம். அல்சேஷன், டல்மேஷன், பொமரேனியன் நாய்களின் வருகையோடு வீட்டுக்குள் இருந்த நாட்டு நாய்களைத் தெருவுக்குத் துரத்தியவர்கள் நாங்கள்தான். இலங்கை, இந்தியா, பாகிஸ்தான் போன்ற இந்தியத் துணைக்கண்டத்தின் சுதேசிய நாய் இனத்தின் பெயர் பறையா. அதையே பறைநாய்கள் என்று நாம் இன்று அழைத்துக் கொண்டிருக்கிறோம்.

எமது நாட்டு இனங்களை அழிந்துபோக நாம் அனுமதிக்கக் கூடாது. கவனிப்பார் இல்லாததால் எல்லா இனங்களுடனும் இவை இனங்கலந்து இன்று என்ன இனம் என்று தெரியாத அளவுக்கு சுய அடையாளங்களை இழந்து போயுள்ளன. அங்கொன்றும் இங்கொன்றுமாக உள்ள தூய நாட்டு இனங்களை அடையாளங்கண்டு அவற்றைப் பேணி வளர்ப்பதற்கு கால்நடை வளர்ப்பாளர்களும், கால்நடை வைத்தியர்களும் முன்வர வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

கால்நடை அபிவிருத்தித் திணைக்களத்தின் மாகாணப் பணிப்பாளர் சி.வசீகரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம், மாகாணசபை உறுப்பினர்கள் ம.தியாகராசா, இ.இந்திரராசா. அ.ஜெயதிலக ஆகியோரும் கலந்து கொண்டிருந்தார்கள்.

16

14

11

08

Related Posts