Ad Widget

கலங்கரை விளக்குகள் தொல்லியல் சின்னங்கள் இல்லை : ஸ்ரீகாந்தா

கலங்கரை விளக்குகள் தொல்லியல் சின்னங்கள் இல்லை. என சட்டத்தரணி ஸ்ரீகாந்த தெரிவித்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு அனலைதீவில் உள்ள கலங்கரை விளக்கு இடிதாங்கி களவாடியமையை தொல்லியல் சின்னத்திற்கு சேதம் விளைவித்தது எனும் குற்ற சாட்டில் ஐவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்தப்பட்டு இருந்தனர்.

குறித்த வழக்கு நேற்றய தினம் ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றில் நீதிவான் ஏ.எம்.எம்.றியாழ் முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்ட போது , சந்தேகநபர்கள் சார்பில் மன்றில் ஆஜரான சட்டத்தரணி ஸ்ரீகாந்த அவ்வாறு தெரிவித்து இருந்தார்.

மேலும் தெரிவிக்கையில் ,

கலங்கரை விளக்குகள் தொல்லியல் சின்னம் என வர்த்தமானி அறிவித்தல் எதுவும் விடுக்கப்படவில்லை. அதேநேரம் கலங்கரை விளக்குகள் எந்த கால பகுதியில் கட்டப்பட்டது என்பதும் தொல்லியல் திணைக்கள பதிவாளரால் கூறப்படவில்லை.

அதேநேரம் 1815ம் ஆண்டு மார்ச் மாதம் 2ம் திகதி முன்னையவையே தொல்லியல் சின்னங்கள் ஆகும். 1815ம் ஆண்டுகளில் கலங்கரை விளக்குகள் எவையும் கட்டப்படவில்லை. அக்காலத்திற்கு முதல் வாழ்ந்தவர்கள் கனவில் கூட கலங்கரை விளக்கு இல்லை.

எனவே கலங்கரை விளக்குகள் தொல்லியல் சின்னங்கள் இல்லை என தெரிவித்தார்.

அதனை அடுத்து நீதிவான் தொல்லியல் திணைக்கள பணிப்பாளரிடம் விளக்கம் கேட்டுள்ளார்.

அதில் , குறித்த கலங்கரை விளக்கு , புராதன சின்னம் , தொல்லியல் சின்னம் என்பது எந்த வகைக்குள் அடங்கும்? எந்த தரவுகளின் அடிப்படையில்? என்ன விதிக்குள் அடங்குகின்றது? அது சட்டவலுவானதா? வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டு உள்ளதா? அதற்கான ஆதாரங்கள் , ஆவணங்கள் , என்பவற்றை ஒரு கிழமைக்குள் மன்றுக்கு தெரிவிக்க வேண்டும் என குறிப்பிட்டார்.

அதனை தொடர்ந்து ஐந்து சந்தேக நபர்களையும், எதிர்வரும் 5ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

Related Posts