Ad Widget

கர்ப்பிணி கொலை : மேலும் இருவரின் வாக்குமூலங்கள் பெறப்பட்டன

ஊர்காவற்றுறை கர்ப்பிணி படுகொலை வழக்கு தொடர்பாக, இருவரின் வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளதாக பொலிஸார் ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்ற பதில் நீதிவான் ஆர்.சபேசன் முன்னிலையில் தெரிவித்துள்ளனர்.

குறித்த வழக்கு, வெள்ளிக்கிழமை (12) ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்ற பதில் நீதிவான் ஆர்.சபேசன் முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, சந்தேக நபர்கள் இருவரும் மன்றில் முற்படுத்தப்பட்டனர்.

கடந்த மாதம் 26 ஆம் திகதி, திருட்டு குற்றம்சாட்டப்பட்ட ஒருவர் கிளிநொச்சி நீதிவான் நீதிமன்ற நீதவான் ஏ.ஏ.ஆனந்தராஜா முன்னிலையில் கரம்பன் பகுதியில் கர்ப்பிணி தாய் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான தகவல்கள் சில தமக்கு தெரியும் என்றும், தனக்கு தெரிந்த தகவல்களை ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் சாட்சியமாக பதிவு செய்ய விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

இதன்படி குறித்த நபரை ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்தி சாட்சியப்பதிவை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு, சிறைச்சாலை அத்தியட்சகருக்கு நீதவான் ஏ.ஏ.ஆனந்தராஜா உத்தரவிட்டிருந்தார்.

இதேவேளை, நெடுந்தீவு சிறுமி படுகொலை வழக்கில் குற்றவாளியாக இனங்காணப்பட்டு யாழ். மேல் நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்ட நபரான ஜெகன் என்பவர், குறித்த படுகொலை தொடர்பில் தனக்கு தகவல்கள் தெரியும் எனவும், அதனை தான் நீதிமன்றில் கூறுவதற்கு தனக்கு ஐந்து இலட்சம் ரூபாய் பணம் தருமாறும் கர்ப்பிணி பெண் படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர்களிடம் பேரம் பேசியதாக சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டு உள்ள சிறுவனின் உறவினர் முறையான மகிந்தன் என்பவர் தெரிவித்த கருத்து தொடர்பில் விசாரணை மேற்கொள்ளுமாறு கடந்த 29 ஆம் திகதி ஊர்காவற்றுறை நீதிவான் உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில் குறித்த இருவரதும் வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளதாக பொலிஸார், வெள்ளிக்கிழமை (12) ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்ற பதில் நீதிவானிடம் தெரிவித்தனர்.

இதனையடுத்து சந்தேக நபர்கள் இருவரையும் எதிர்வரும் 22 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.

ஊர்காவற்துறை பகுதியில் கடந்த ஜனவரி மாதம் 24 ஆம் திகதி ஒரு பிள்ளையின் தாயும் ஏழு மாத கர்ப்பிணியுமான ஞானசேகரன் ஹம்சிகா (வயது 27) எனும் பெண் படுகொலை செய்யபட்டார்.

குறித்த படுகொலை சம்பவம் தொடர்பில் சகோதரர்களான இரு நபர்கள் அன்றைய தினம் மாலை மண்டைதீவு சந்தியில் வைத்து ஊர்காவற்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.

குறித்த படுகொலை தொடர்பான வழக்கு ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றத்தில் இடம்பெற்று வருகின்றது.

Related Posts