கருத்துச் சுதந்திரத்தை அரசு தடை செய்கிறதா?

இலங்கையில் வெறுப்புணர்வு பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபடுவதை குற்றமாக அறிவிக்கும் புதிய சட்டத்திருத்த முன்வரைவுகளை அரசாங்கம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது.

ஆனால், இந்த சட்டத்திருத்தத்தை கடும்போக்கு பௌத்தவாத அமைப்பான பொதுபல சேனா எதிர்த்துள்ளது.

அதேபோல சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் பலரும், அரசாங்கம் அந்த சட்டத்திருத்தத்தை கைவிட வேண்டும் என்று கோரியுள்ளனர்.

நூற்றுக்கும் மேற்பட்ட சிவில் சமூக செயற்பாட்டாளர்களும் அமைப்புகளும் கையொப்பமிட்டு அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளனர்.

இலங்கையின் தண்டனைச் சட்டக்கோவை மற்றும் குற்றவியல் நடைமுறைக் கோவை ஆகிய சட்டங்களில் புதிய திருத்தங்களை கொண்டுவருவதற்கு அரசாங்கம் முன்வரைவுகளை நாடாளுமன்றத்தில் முன்வைத்துள்ளது.

இன-மத சமூகங்களுக்கு எதிரான வெறுப்புணர்வு கருத்துக்களை வெளிப்படுத்தும் நபர்களுக்கு 2-ஆண்டு சிறைத் தண்டனை அளிக்கக்கக்கூடிய விதத்தில் குற்றவியல் சட்டங்களில் திருத்தம் கொண்டுவருவது தான் இந்த சட்டமூலங்களின் நோக்கம்.

ஆனால், அரசாங்கம் புதிய திருத்தங்களின் மூலம் கருத்துச் சுதந்திரத்தை நசுக்கும் முயற்சியில் இறங்கியுள்ளதாக சிவில் செயற்பாட்டாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் உள்ள பிரிவுகளை அப்படியே இந்தப் புதிய சட்டங்களில் அரசாங்கம் உள்ளடங்கியுள்ளதாக சிவில் சமூகத்தின் கூட்டறிக்கையில் கையொப்பமிட்டுள்ள மனித உரிமைச் செயற்பாட்டாளர்களின் ஒருவரான ஷ்ரீன் சரூர் தெரிவித்தார்.

அரசாங்கம் ஒரு புறத்தில் பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்கப்போவதாக சர்வதேசத்திற்கு காட்டிக்கொண்டு இன்னொரு புறத்தில் அந்த சட்டத்தின் பிரிவுகளை வேறுசட்டங்களில் உள்ளடக்க முயல்வதாக ஷ்ரீன் சரூர் பிபிசி தமிழோசையிடம் கூறினார்.

பயங்கரவாதத் தடைச்சட்டத்தை பயன்படுத்தியே படியே கடந்த காலங்களில் அரசியல் செயற்பாட்டாளர்களும் சிவில் உரிமைச் செயற்பாட்டாளர்களும் ஊடகவியலாளர்களும் அரசாங்கத்தினால் முடக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த சட்டமூலத்துக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்ய சிவில் அமைப்புகள் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Related Posts