Ad Widget

கருணை காட்டுங்கள்! கிளிநொச்சியில் கதறும் உறவுகள்

தமிழ்நாடு திருச்சி சிறப்பு முகாமில் உண்ணாவிரதம் இருந்து வரும் எமது உறவுகளிடம் இரக்கம் காட்டுங்கள் என, அவர்களது பெற்றோர் மற்றும் மனைவிமார் உள்ளிட்ட உறவினர்கள் இன்று (27) கிளிநொச்சியில் உருக்கமான வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளனர்.

திருச்சி சிறப்பு முகாமில் உண்ணாவிரதம் இருக்கும் பத்து பேர் மற்றும் மண்டபம் முகாமில் இருக்கும் பெண்ணொருவர் ஆகியோரின் உறவுகள் கிளிநொச்சியில் இன்று ஊடகவியலாளர்களை சந்தித்துள்ளனர்.

தனது மூத்த மகனை இறுதி யுத்தத்தில் பலிகொடுத்துள்ள நிலையில், தற்போது இருக்கின்ற ஒரு மகன் தமிழ்நாடு சென்றுள்ளதாகவும், அங்கு வைத்து கைதுசெய்யப்பட்டு அவர் தற்போது திருச்சி முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் தந்தையொருவர் இதன்போது தனது மனவேதனைகளை பகிர்ந்துள்ளார்.

மேலும், சட்ட ரீதியாக விசா எடுத்து சுற்றுலாவுக்குச் சென்ற மகனை சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல வந்துள்ளதாக கூறி அதற்கு ஒப்பம் இடுமாறு தொடர்ந்தும் துன்புறுத்தி வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

யுத்தகாலத்தில் மிக மோசமான மன உளைச்சலுக்கும், பாதிப்புக்களுக்கும் முகம் கொடுத்த எங்களுக்கு பிள்ளைகள் உண்ணாவிரதம் இருந்து வருகின்ற செய்தி மேலும் மனதளவில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

எனவே சிலவேளை ஏதேனும் தவறுகள் செய்திருந்தால் அதனை மன்னித்து தயவு செய்து அவர்களை விடுதலை செய்யுங்கள் எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, நான் இரண்டு குழந்தைகளுடன் மிகவும் நெருக்கடியான சூழலில் வாழ்ந்து வருகின்றேன். எனது கணவர் கைது செய்யப்படும் போது, இரண்டாவது குழந்தை ஏழு மாத சிசுவாக வயிற்றில் இருந்தது.

தற்போது எனது பிள்ளை அப்பாவின் முகம் தெரியாது பிறந்து வளர்ந்துள்ளது. எனது மூத்த மகளுக்கு நான்கு வயது நாளாந்தம் அப்பா எங்கே என்று கேட்டுக்கொண்டே இருக்கின்றார். எனவே தயவு செய்து எனது பிள்ளைகளுக்காக எனது கணவரை விடுதலை செய்யுங்கள் என கண்ணீர் மல்க பெண்ணொருவர் கூறியுள்ளார்.

அத்துடன் தனது அப்பாவை தன்னுடன் சேர்த்து வைக்குமாறு நான்கு வயது பெண் குழந்தையும் அழுதவாறே கேட்டுக்கொண்டமை மனதை நெகிழ வைத்துள்ளது.

Related Posts